Friday, October 27, 2017

வறட்சி,தண்ணீர்,பஞ்சம்,தீரும்,தமிழக மக்கள்,நம்பிக்கை

சென்னை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை இன்று துவங்குகிறது. வானிலை மைய கணிப்பின்படி இரண்டு மாதங்களில் ஆண்டு சராசரியான 100 சதவீதத்துக்கு மேல் மழை கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாநிலத்தை சூழ்ந்திருந்த வறட்சி, தண்ணீர் பஞ்சம் தீரும் என தமிழக மக்களிடம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.



நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கான தண்ணீர் தேவை தென்மேற்கு பருவமழையால் பூர்த்தியாகிறது. ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி தமிழகம் அமைந்து உள்ளதால் மலைகளால் மறைக்கப்பட்டு தென்மேற்கு பருவமழை தமிழகத்துக்கு போதிய அளவு கிடைப்பதில்லை. அதனால் மழை மறைவு பிரதேசமாக கருதப்படுகிறது.

தமிழகத்தின் தண்ணீர் தேவையை பெருமளவு பூர்த்தி செய்யும் நம்பிக்கை ஊற்றாக வடகிழக்கு பருவமழை உள்ளது. தமிழக நீர் நிலைகளில் ஓராண்டுக்கு தேவையான நீரை சேமித்து பயன் படுத்த வழிவகுக்கிறது. 2016ல் பசிபிக் கடலில் ஏற்பட்ட 'லா நினா' சூழல் மாற்றத்தால்

தமிழகத்தில் வெறும் 38 சதவீதம் மட்டுமே வடகிழக்கு பருவ மழை பெய்தது.

அதனால் ஓராண்டாக மாநிலம் முழுவதும் விவசாயம், குடிநீர் உள்பட அனைத்து தேவைக் கும் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. கல்குவாரிகளில் ஆண்டுக்கணக்கில் தேங்கிய நீரை சுத்திகரித்து பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மே, 30ல் துவங்கி ஐந்து மாதங்களாக பல மாநிலங்களில் பெய்தது. தண்ணீர் பஞ்சத்தில் தத்தளித்த தமிழக மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் சராசரியாக 38 சதவீதம் அதிகமாக பெய்து அக்., 25ல் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து வடகிழக்கிலிருந்து காற்று வீச துவங்கி உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது:

கிழக்கு திசையிலிருந்து தமிழகம், புதுச்சேரியை நோக்கி ஈரப்பதத்துடன் கூடிய காற்று வீச துவங்கி உள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது இன்று வடகிழக்கு பருவ மழை துவங்க சாதகமான சூழல் உள்ளது. சில தினங்களில் காற்று படிப்படியாக வலுப் பெற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளுக்கும் வடகிழக்கு பருவ மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 44 சென்டி மீட்டர். அதை விட அதிகமாக 111 சதவீத அளவுக்கு அதாவது 49 செ.மீ., வரை மழை

பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகள், பொதுமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

'ஓராண்டாக நீடித்த தண்ணீர் பஞ்சம் பருவ மழையால் தீரும். நிலத்தடி நீர் மட்டமும் ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகளின் நீர்மட்டமும் உயரும்' என அவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

மழை கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு:

நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகங்களில், மழை கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில், மாநிலம் முழுவதும், 60 ஆயிரம், கி.மீ.,க்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், 89 அணைகள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன.

வடகிழக்கு பருவ மழை காலங்களில், இந்த ஏரிகளுக்கு அதிக நீர்வரத்து கிடைக்கிறது. அதிகளவு வெளியேறும் உபரிநீரால், சில நேரங்களில் கரைகளில் உடைப்பும் ஏற்படுகிறது. மழையால், நெடுஞ்சாலைகள் சேதம் அடைகின்றன. இதை கண்காணித்து, உடனுக்குடன் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

அதற்காக, சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித் துறை தலைமை அலுவலகம் மற்றும் கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை தலைமை அலுவலகம் ஆகியவற்றில், 24 மணி நேரமும் செயல்படும், மழை கட்டுப் பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு
உள்ள ஊழியர்கள், மாநிலம் முழுவதும் இருந்து, மழை பாதிப்பு தகவல்களை பெற்று, அரசுக்கு அனுப்புவர்; அது தொடர்பான அரசு உத்தரவுகளை, உடனுக்குடன் மாநிலம் முழுவதும் உள்ள துறை அலுவலகங்களுக்கு தெரிவிப்பர்.

பேரிடர் தொடர்பு எண்கள்

மாநிலம் பேரிடர் மையம் - 044 - 1070
மாவட்ட பேரிடர் மையம் - 1077
போலீஸ் டி.ஜி.பி., கட்டுப்பாட்டு அறை
044 - 2844 7701
வருவாய் நிர்வாக கட்டுப்பாட்டு அறை
044 - 2852 3299
கடற்படை உதவி எண் - 044 - 2539 4240

No comments:

Post a Comment

Madras university yet to get surplus grant from centre

Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...