Monday, October 23, 2017


மெர்சலை விடுங்கள்... இந்தப் புள்ளிவிவரங்களுக்கு அரசிடம் பதில் இருக்கிறதா?

ஸ்ரீராம் சத்தியமூர்த்தி




தீபாவளி ரிலீஸ் திரைப்படங்களில், அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகி மாபெரும் வெற்றியைத் தனதாக்கியிருக்கும் படம் 'மெர்சல்'. படத்தின் 'ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்' ரிலீஸ் முதலே பரபரப்பு பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்துவிட்டன. 'ஜல்லிக்கட்டை மையப்படுத்திய படம்' என்ற விவாதத்தை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உருவாக்கியதென்றால், அதன் பின் வெளிவந்த டீஸரிலோ, ''ஒரு தலைவன் உருவாக ஒரு யுகம் ஆகும்'' என்ற அழுத்தமான வசனமோ அரசியல் அரங்கில் கடும் அனலைக் கிளப்பியது. விலங்குகள் நல அமைப்பிடம் அனுமதி வாங்காதது, படத் தலைப்பு பிரச்னை என ஆரம்பத்திலிருந்தே பல்வேறு தடைகளை உடைத்தெறிந்துதான் திரையரங்குகளில் வெளியானது 'மெர்சல்' திரைப்படம். இப்போது இப்படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்களும் காட்சிகளும் மத்திய பி.ஜே.பி அரசின் திட்டங்களைக் கடுமையாகச் சாடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு, இலவச மருத்துவம், மெடிக்கல் எரர் எனப்படும் மருத்துவத் தவறுகள் எனப் பல்வேறு பிரச்னைகள் குறித்துப் பேசுகிறது மெர்சல் திரைப்படம். இந்தக் கருத்துகளுக்கு பி.ஜே.பி. தரப்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்த சர்ச்சைகளுக்குப் பின்னால் உள்ள உண்மையானப் பின்னணி என்ன என்று பார்த்தால், கிடைத்தத் தகவல்கள் ஆச்சர்யமளிக்கின்றன.

மருத்துவத் தவறுகள் :

இந்தியாவில் மருத்துவர்கள் செய்யும் மருத்துவத் தவறுகள் காரணமாக மட்டும் ஆண்டுக்கு 52 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவதாக இந்திய மருத்துவக் கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 100 பேரில் 6 பேருக்குத் தவறான மருந்துகள் மூலமாகவோ அல்லது மருந்துகளின் செயல்பாட்டில் உள்ள மாற்றங்கள் காரணமாகவோ மருத்துவத் தவறுகள் நேர்கின்றன.

வளரும் நாடுகளில், அதிக மருத்துவத் தவறுகள் நிகழும் நாடுகள் பட்டியலில், இந்தியாவுக்கு முன்னணி வரிசையில் இடம் கிடைத்துள்ளது. இதற்குக் காரணம் 'மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்காததே' என்கிறது ஹார்வர்டு ஆய்வு.

மருத்துவத் தரவரிசை :

உலக சுகாதார அமைப்பின் தரவரிசைப்படி மருத்துவம் முறையாகவும், தரத்தோடும் வழங்கப்படும் நாடுகளின் தரவரிசையில் இந்தியா 112-வது இடத்தைப் பிடித்துள்ளது. 'வளர்ந்துவரும் நாடுகள் என்ற அடிப்படையில் பார்க்கும்போது, இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளின் தரம் என்பது மிகவும் கவலைக்குரியதாகவே இருக்கிறது' என்று இதற்கான காரணத்தையும் கூறியிருக்கிறது உலக சுகாதார நிறுவனம்!

இலவச மருத்துவம் தரும் நாடுகள் :

ஃபிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து, ஸ்வீடன், ஜப்பான், ஐஸ்லாந்து, நார்வே, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில், மருத்துவம் இலவசமாகவும், மருத்துவத்துக்கான செலவுகளை அரசே மானியமாகக் கொடுக்கும் முறையும் உள்ளது. சிங்கப்பூரில், மருத்துவம் இலவசம் இல்லை என்றாலும் அங்கு காப்பீடு மூலம் மக்கள் மருத்துவச் செலவுகளைச் சரிசெய்துகொள்ளும் வசதி உள்ளது. அங்குள்ள மக்களில் 80 விழுக்காட்டினர் அரசு மருத்துவத் திட்டத்தைப் பயன்படுத்திப் பயன்பெறுகின்றனர்.

மருத்துவர்கள் தேவை :

உலக சுகாதார அமைப்புத் தகவல்படி, '1000 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர்' என்ற விகிதத்தில் மதிப்பிட்டால், இந்தியாவில் 5 லட்சம் மருத்துவர்களுக்கான தேவை உள்ளது. தற்போதுள்ள நிலையின்படி 1,674 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். இந்த நிலைமை வியட்நாம், அல்ஜீரியா மற்றும் பாகிஸ்தானைவிடவும் மோசமானது.

இந்தியாவிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பட்டம் பெறும் 55 விழுக்காட்டு மருத்துவர்களில், பெரும்பாலானோர் நன்கொடை கொடுத்து மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்கள்தான். மேலும், வெளிநாடுகளில் மருத்துவம் படித்த இந்திய மருத்துவ மாணவர்களில், '19 விழுக்காட்டினர்தான் முழு தகுதியுடன் இருப்பதாக' வெளிநாடு மருத்துவப் படிப்பு கழகம் தெரிவித்துள்ளது.

மெர்சல் சினிமாவில் வரும் ஒரு காட்சிக்கு இவ்வளவு முக்கியத்துவம் தந்து எதிர்ப்பதோடு, 'அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும்' என்று வலியுறுத்தும் அரசியல் தலைவர்கள், மருத்துவத் தன்னிறைவு கொண்ட நாடாக இந்தியாவை மாற்றிக்காட்ட முன்வருவார்களா?

No comments:

Post a Comment

Madras university yet to get surplus grant from centre

Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...