Saturday, October 21, 2017

தேசிய செய்திகள்

பெங்களூருவில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த சுகேஷ் சந்திரசேகர் உடந்தையாக செயல்பட்ட டெல்லி போலீசார்


வழக்கு விசாரணைக்காக வந்த போது பெங்களூருவில் சுதந்திரமாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் சுற்றித்திரித்தார். இதற்கு அவருக்கு உடந்தையாக இருந்த டெல்லி போலீசார் 7 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

அக்டோபர் 21, 2017, 04:00 AM

புதுடெல்லி,

தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாக கூறி டி.டி.வி.தினகரனிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை ஏப்ரல் மாதம் டெல்லி போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். அவர் மீது நாடு முழுவதும் பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன.

குறிப்பாக தென் இந்தியாவில் 50–க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. மும்பை, கோவை, பெங்களூரு ஆகிய இடங்களில் நடைபெறும் கோர்ட்டு விசாரணைக்காக டெல்லி போலீசார் 7 பேர் 9–ந் தேதி முதல் 16–ந் தேதி வரை அந்தந்த கோர்ட்டுகளுக்கு அழைத்துச் சென்றனர். இதற்காக 9–ந் தேதி சுகேஷ் சந்திரசேகரை பெங்களூரு அழைத்து வந்தனர்.

பெங்களுரூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுகேஷ் சந்திரசேகர் தங்கினார். அவருடன் வந்த போலீசார் சொகுசு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தனர். பெங்களுரூவில் சுகேஷ் சந்திரசேகர் தங்கி இருந்த நாட்களில் சுதந்திரமாக சுற்றித்திரிந்தது வருமான வரித்துறையினர் விசாரணையில் அம்பலமானது.

இது குறித்து டெல்லி போலீஸ் கமி‌ஷனர் அமுல்யா பட்நாயக்குக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கோர்ட்டு வழக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் பெங்களூருவில் உள்ள வணிக வளாகங்களில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி குவித்து உள்ளார். அவருடன் பாதுகாப்புக்கு வந்த போலீசார் யாரும் இல்லை. அவர் 9, 10–ந் தேதிகளில் சர்வசாதாரணமாக சுதந்திரமாக சுற்றித்திரிந்தார்.

தோழி லீனா மரியாபாலுடன் பல இடங்களுக்கு சென்று நேரத்தை செலவிட்டு உள்ளார். மேலும் கோவை, சென்னையில் உள்ள கார் தரகர்களிடம் பேரம் பேசி 3 சொகுசு கார்களையும் வாங்கினார். உளவுத்துறையினர் அளித்த தகவலின் பேரில் நாங்கள் விசாரணை நடத்தியதில் அதற்கான ஆதாரங்கள் சிக்கின.

வணிக வளாகங்களில் அவர் தனியாக சுற்றியது அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது. மேலும் சொகுசு ஓட்டலில் போலீசார் தங்கி இருந்ததும் உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து சுகேஷ் சந்திரசேகர் தங்கி இருந்த இடத்தில் சோதனையிட்டு அவர் வாங்கிய 3 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்யப்பட்டது.

அனைத்து ஆதாரங்களையும் காட்டிய பிறகு அந்த குற்றச்சாட்டுகளை சுகேஷ் சந்திரசேகர் ஒப்புக்கொண்டு உள்ளார். இவை அனைத்தும் பாதுகாப்புக்கு வந்த டெல்லி போலீசாரின் ஒப்புதலுடன் நடைபெற்றது. எனவே இதற்கு உடந்தையாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இது குறித்து டெல்லி போலீஸ் சிறப்பு கமி‌ஷனர் (போக்குவரத்து) தீபேந்திர பதக் கூறுகையில், வருமான வரித்துறை அதிகாரிகளின் அறிக்கை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதுவரை சுகேஷ் சந்திரசேகருடன் பாதுகாப்புக்கு சென்ற 7 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்படுகின்றனர். விசாரணை முடிவில் தவறு செய்த போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சசிகலா சுதந்திரமாக வெளியே சென்று வந்ததாக குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது வழக்கு விசாரணைக்கு வந்த சுகேஷ் சந்திரசேகரும் அதேபோல் சுதந்திரமாக சுற்றித்திரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY