Tuesday, October 3, 2017


ரயில் நிலையத்தில் தவறான அறிவிப்பு மத்திய அமைச்சர் அதிருப்தி
By DIN | Published on : 03rd October 2017 02:06 AM



குவாலியர் ரயில் நிலையத்தில் உள்ள அறிவிப்புப் பலகையில் பயணிகளுக்கு தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டதால் பெரும் குழப்பம் ஏற்பட்டதாக மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அவர் எழுதிய கடிதத்தில் அவர் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார்
.
இதுதொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்திய தோமர், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். ஜபல்பூர் - நிஜாமுதீன் விரைவு ரயிலில் பயணிப்பதற்காக மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் ரயில் நிலையத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.1) சென்ற மத்திய அமைச்சர் தோமர், அங்கு நடைமேடையில் காத்திருந்தார். 

அப்போது, எந்தெந்த வகுப்புப் பெட்டிகள் எங்கெங்கு நிற்கும் என்பது தொடர்பான தகவல்கள் அங்கிருந்த அறிவிப்புப் பலகையில் வெளியிடப்பட்டது. அதன்படி பயணிகள் தங்களுக்குரிய பெட்டிகள் வந்து நிற்கும் இடங்களில் காத்திருந்தனர். ஆனால், அந்தத் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்பது ரயில் வந்தவுடன் தெரிந்தது. அறிவிப்பில் கூறியதற்கும், ரயில் பெட்டிகள் நின்ற இடத்துக்கு சம்பந்தமில்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, தங்களது இருக்கை உள்ள பெட்டிகளைத் தேடி பயணிகள் அலைமோதினர். இந்தச் சம்பவத்தால் அதிருப்தியடைந்த தோமர், ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். தவறான தகவல்கள் பெரும் அசம்பாவிதத்துக்கு வழிவகுக்கக் கூடும் என்று அதில் குறிப்பிட்டுள்ள தோமர், இதுதொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிடுமாறு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024