Tuesday, October 3, 2017

கடவுள் அழைக்கும் போது பத்மநாபசுவாமி கோயில் செல்வேன்:கர்நாடக இசைக்கலைஞர் ஜேசுதாஸ் விருப்பம்

பதிவு செய்த நாள்02அக்
2017
23:42

நாகர்கோவில்;கடவுள் அழைக்கும் போது பத்மநாபசுவாமி கோயில் செல்வேன், என்று கர்நாடக இசை கலைஞர் ஜேசுதாஸ் கூறினார்.தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அதிகமான பக்திபாடல்களை பாடி வருபவர் ஜேசுதாஸ். சபரிமலையில் காலையில் நடை திறக்கும் போது இவர் பாடிய ஐயப்ப சுப்ரபாதம், இரவில் இவரது தாலாட்டு பாடலான அரிவராசனம் பாடல் ஒலிபரப்பப்படும். இவர் சமீபத்தில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் செல்ல அனுமதி கோரியிருந்தார். அதற்கு நிர்வாக கமிட்டி இதற்கு அனுமதி வழங்கியது.ஆண்டு தோறும் அக்.ஒன்றாம் தேதி திருவனந்தபுரத்தில் ஒரு மன்றத்தில் ஜேசுதாஸ் கர்நாடக இசை கச்சேரி நடத்துவார். நேற்று முன் தினம் அந்த நிகழ்ச்சி நடக்க இருந்த நிலையில் செப்., 30 அல்லது அக்.ஒன்றாம் தேதி ஜேசுதாஸ் பத்மநாபசுவாமி கோயில் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கோயில் செல்ல வில்லை.
இது குறித்து அவர் இன்னிசை கச்சேரி மேடையில் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குருவாயூர் கோயில் செல்ல எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த கோபத்தில் இனி ஒரு கிருஷ்ணன் கோயிலுக்கும் செல்ல மாட்டேன், என்று கூறியிருந்தேன். ஆனால் கடந்த மூகாம்பிகா கோயிலுக்கு செல்லும் வழியில், எனது நண்பர் ஒருவரின் வற்புறுத்தலின் பேரில் உடுப்பி கிருஷ்ணன் கோயிலுக்கு சென்றேன். அப்போது சுவாமிக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த தரிசனம் என்னால் மறக்க முடியாதது.குருவாயூர் பிரச்னையில் பிடிவாதமாக இருந்தததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். அதுபோல கடவுள் அழைக்கும் போது பத்மநாபசுவாமி கோயில் செல்வேன். அங்கு பாடுவேன். நேரம் வரும் போது கடவுள் என்னை அழைப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024