Friday, October 6, 2017

ஆளுநருக்கு வாழ்த்துகள்!

By ஆசிரியர்  |   Published on : 06th October 2017 02:43 AM  
தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கும், அந்தமான் - நிகோபார் யூனியன் பிரதேசத்திற்கும் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தின் புதிய ஆளுநராக 77 வயது பன்வாரிலால் புரோஹித் இன்று பதவி ஏற்கிறார். கடந்த 13 மாதங்களாக முழுநேர ஆளுநர் இல்லாமல் தவித்த தமிழகத்துக்கு ஒருவழியாக ஆளுநர் நியமிக்கப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஏழரைக்கோடி மக்களுடன் இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் தமிழகம், முழுநேர ஆளுநர் இல்லாமல் ஓராண்டுக்கு மேல் தொடர்ந்தது என்பது சுதந்திர இந்திய வரலாற்றில் மிகப்பெரிய களங்கம். 
குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காலியான பிகார் ஆளுநர் பதவிக்கு பா.ஜ.க.வின் தேசிய துணைத் தலைவர் சத்யபால் மாலிக் நியமிக்கப்பட்டிருக்கிறார். பன்வாரிலால் புரோஹித் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதால் அஸ்ஸாமில் ஏற்பட்டிருக்கும் காலியிடத்தை நிரப்புகிறார் ஜெகதீஷ் முகி. இந்த மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்ப, ஓய்வு பெற்ற கடற்படை அட்மிரல் தேவேந்திரகுமார் ஜோஷி அந்தமான் - நிகோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநராகிறார். பிகாரைச் சேர்ந்த கங்கா பிரசாத் மேகாலயா ஆளுநராகவும், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பிரிகேடியர் பி.டி. மிஸ்ரா அருணாசலப் பிரதேச ஆளுநராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 
தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் பன்வாரிலால் புரோஹித் நீண்டகால அரசியல் அனுபவசாலி. மூன்று முறை நாகபுரி மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இரண்டு முறை காங்கிரஸ் உறுப்பினராகவும் ஒரு முறை பா.ஜ.க. உறுப்பினராகவும் மக்களவையில் பதவி வகித்த பன்வாரிலால் புரோஹித், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தவர்.
1969 காங்கிரஸ் பிளவுக்குப் பிறகு இந்திரா காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்ட பன்வாரிலால் புரோஹித், 1978-இல் நாகபுரி கிழக்குத் தொகுதியிலிருந்து முதன்முதலில் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980-இல் நாகபுரி தெற்கு தொகுதியிலிருந்து மகாராஷ்டிர சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்வாரிலால் புரோஹித், மாநிலத்தின் துணை அமைச்சராகவும் பணியாற்றியவர்.
1984-இல் எட்டாவது மக்களவையிலும், 1989-இல் ஒன்பதாவது மக்களவையிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாகபுரி மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்வாரிலால் புரோஹித், பாரதிய ஜனதா கட்சியால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான இயக்கம் தொடங்கப்பட்டபோது காங்கிரஸில் இருந்து வெளியேறி பா.ஜ.க.வில் இணைந்தார். 1991-இல் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். 1996-இல் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்று 11-ஆவது மக்களவையில் உறுப்பினரானார் பன்வாரிலால் புரோஹித்.
1999-இல் பா.ஜ.க.வுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பன்வாரிலால் புரோஹித், அதே ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ராம்டேக் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டபோது தோல்வியைத் தழுவினார். 2003-இல் சொந்தமாக 'விதர்பா ராஜ்ய கட்சி'யைத் தொடங்கி, 2004-இல் மக்களவைக்குப் போட்டியிட்டபோதும், 2009-இல் மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்து போட்டியிட்டபோதும் அவரால் தோல்வியைத்தான் தழுவ முடிந்தது.
நரேந்திர மோடி அரசு மத்தியில் பதவியேற்ற பிறகு 2016-இல் பன்வாரிலால் புரோஹித் அஸ்ஸாம் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இப்போது அஸ்ஸாமிலிருந்து தமிழகத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார். ஏறத்தாழ 35 ஆண்டு அரசியல் வாழ்வில் பன்வாரிலால் புரோஹித் சந்தித்த உயர்வுகளும் அதிகம், வீழ்ச்சிகளும் அதிகம். ஆனாலும்கூட, மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பா பகுதியில் குறிப்பிடத்தக்க அரசியல் பிரமுகராகத் தொடர்ந்து தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவரால் முடிந்திருக்கிறது. 
ஆளுநர் மாளிகைகள் அரசியல் பிரமுகர்களின் பணி ஓய்வு இருப்பிடங்களாக மாற்றப்படும் வழக்கம் நரேந்திர மோடி அரசிலும் தொடர்கிறது என்பதைத்தான் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் ஆளுநர் நியமன அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது. ஆளுநர்களை நியமிக்கும் மிகமுக்கியமான கடமையை ஒத்திப்போட்டுக்கொண்டே வந்த உள்துறை அமைச்சகம், இப்போதாவது தனது கடமையை ஆற்றியிருக்கிறது என்பதற்காக ஆறுதல் அடையலாம். 
அதேநேரத்தில், தேவையில்லாமல் வதந்திகளை உலவவிடும் வகையில் ஆளுநர் நியமனங்கள் குறித்த தெளிவின்மை இருப்பது தவறு என்பதை உள்துறை அமைச்சகம் உணர வேண்டும். குறிப்பாக, கடந்த சில நாட்களாகவே ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் என்.என். வோரா மீது மத்திய அரசு நம்பிக்கை இழந்திருக்கிறது என்பது போன்ற தோற்றமும் வதந்தியும் காணப்படுகிறது. அதற்கு உள்துறை அமைச்சகம் முற்றுப்புள்ளி வைக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது.
கோபால கிருஷ்ண கோகலேவால் தொடங்கப்பட்டு நாகபுரியிலிருந்து வெளிவரும் 'தி ஹிதவாடா' நாளிதழின் உரிமையாளரும் ஆசிரியருமாக இருந்து தமிழகத்தின் ஆளுநராக பதவியேற்க இருக்கும் பன்வாரிலால் புரோஹித் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் மிக அதிகம். ஆளுநர் மாளிகை அரசியல் மாளிகையாக மாறிவிடாமல், அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் விதத்தில் அவரது பதவிக்காலம் அமைய வேண்டும் என்கிற தமிழக மக்களின் உணர்வுகளை 'தினமணி' வெளிப்படுத்தி புதிய ஆளுநரை வாழ்த்தி வரவேற்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024