Sunday, October 22, 2017

Posted Date : 12:45 (21/10/2017)

மெர்சலில் சொல்லப்பட்டுள்ள 2 பொய்கள்! விஜய்க்கு எதிராகக் கொந்தளிக்கும் ஹெச்.ராஜா
சகாயராஜ் மு





'மெர்சல்' படத்தில், 'ஆளுகிற அரசுமீது மக்களுக்கு தவறான கண்ணோட்டத்தை திட்டமிட்டே உருவாக்குகிறார்கள்' என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு ஹெச்.ராஜா இன்று அளித்துள்ள பேட்டியில், "கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' திரைப்படத்துக்கு சென்சார் அனுமதி அளித்த பிறகு எதிர்ப்பு எழுந்தது. இந்த எதிர்ப்பை ஏற்று, சென்சார் வழங்கிய பிறகு காட்சிகளை நீக்கியவர் கமல்ஹாசன். அப்போது, சென்சார் போர்டு பிரச்னையைத் தீர்த்துவைத்தது என்று சொல்லுகிற துணிச்சல் கமல்ஹாசனுக்கு இருந்ததா. நாங்கள் அந்த மாதிரி சொல்லவில்லை. நாங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம். மோடியே சொல்லியிருக்கிறார். மற்றவர்களுடைய விமர்சனங்கள் என்னையும் அரசாங்கத்தையும் திருத்திக்கொள்ளப் பயன்படும். அதனால், நான் வரவேற்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால், 'மெர்சல்' படத்தில், ஆளுகிற அரசுமீது மக்களுக்கு தவறான கண்ணோட்டத்தை திட்டமிட்டே உருவாக்குகிறார்கள். அந்தக் குறிக்கோளாேடு பொய்யைச் சொல்லியிருப்பதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

பொய் ஒன்று: 7 சதவிகிதம் வாங்குகிற சிங்கப்பூரில், மருத்துவ வசதிகள் இலவசம். ஆனால், 28 சதவிகிதம் வாங்குகிற இந்தியாவில் இலவசமில்லை. இதுவே பொய்தானே. இந்தியாவில் அடிப்படைப் பொருள்களுக்கு 0%தான். 5 சதவிகிதம் இருக்கு, 12 சதவிகிதம் இருக்கு. இதற்குக் காரணமே, இந்தியாவில் வருமானம் மற்றும் சொத்துகளில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது. ஆனால், ஏழை மக்கள் உபயோகப்படுத்துகிற அத்தியாவசியப் பொருள்களுக்கு வரி எதுவுமே போடவில்லை.

இரண்டாவது பொய்: இந்தியாவில் பள்ளிக் கல்வியும் மருத்துவமும் ஏழை மக்களுக்கு இலவசம்தான். சென்னையில் இருக்கிற ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, பல தனியார் மருத்துவமனைகளைவிட சிறந்தது. விஜய் வந்து ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று கூறுகிறோம். அங்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மிகவும் ஆவேசத்தோடு, உயிர்காக்கும் மருந்துக்கு 12 சதவிகிதம் வரி; ஆனால், தாய்மார்களின் தாலியை அறுக்கிற சாராயத்துக்கு 0 சதவிகிதம் வரி. இது பொய்யில்லையா. மத்திய வரி இருக்கட்டும்; வாட் வரி 58 சதவிகிதத்திலிருந்து 270 சதவிகிதம் வரை சாராயத்துக்கு வரி இருக்கிறது. அதனால்தான், மாநில அரசாங்கத்தில் 190 சதவிகித்திலிருந்து 250 சதவிகிதம் வரை வரி இருக்கிறது. ஜி.எஸ்.டி-க்குள் மதுவைக் கொண்டுவந்தால், 28 சதவிகிதம் மட்டுமே வரி விதிக்க முடியும். அதிக வரி விதிக்க வேண்டும் என்பதற்காகவே, மதுவை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவரவில்லை. இதை 0 சதவிகிதம் என்று எப்படிச் சொல்வது. வேண்டுமென்றே ஒரு பொய்யைப் பரப்புவதற்கு ஒருவர் முயற்சி பண்ணினால், அதைத் தட்டிக்கேட்கணுமா வேண்டாமா? அதைத்தான் செய்திருக்கிறோம். விஜய்க்கோ கமல்ஹாசனுக்கோ அல்லது பல நடிகர்களுக்கோ இந்து மதத்தை விமர்சிக்க உரிமை இருக்கிறது. உண்மை அடிப்படையில் விமர்சனம் பண்ணுங்கள். உங்களுக்கு என்ன உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதுபோன்றுதான் எனக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY