Monday, October 2, 2017

சிவாஜியின் பெயரோடு கருணாநிதியின் பெயர் கலந்திருக்கிறது: கவிஞர் வைரமுத்து

Published : 01 Oct 2017 18:29 IST




சிவாஜியின் பெயரோடு கலைஞர் கருணாநிதியின் பெயர் கலந்திருப்பது கலை உண்மை எனவே அவரது பெயரை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:


சிவாஜியின் பெயரோடு கலைஞரின் பெயர் கலந்திருக்கிறது என்பது கலை உண்மை. சிவாஜி சிலையைக் கலைஞர்தான் நிறுவினார் என்பது வரலாற்று உண்மை. இந்த இரண்டு உண்மைகளும் ஒரு சிலைக்கு அடியில் புதைக்கப்படுவதைத் தமிழ் உணர்வாளர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிவாஜி பீடத்தில் இடம்பெற்றிருந்த கலைஞரின் பெயர் மீண்டும் பொறிக்கப்படவேண்டும். ஏன் எங்கள் மனதை நோகடிக்கிறீர்கள்? சூரியன் மீது ஏன் தாரடிக்கிறீர்கள்?

சிலைதான் ஒரு மனிதனின் புகழுக்கு எல்லை என்பது இல்லை. சிலையும் ஒரு மூடநம்பிக்கை. இஸ்லாத்தில் சிலை வணக்கம் கிடையாது. அதனால் நபிகள் நாயகத்தின் பெருமையை யாரும் குறைத்துவிட முடியாது. சிலையே இல்லாவிட்டாலும் சிவாஜி சிவாஜிதான். ஆனால் நிறுவப்பட்ட சிலையில் நேர்மை இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில்தான் சிலையே ஓர் அரசியல் ஆகிவிடுகிறது. சிலை அரசியலை ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். கன்னியாகுமரியில் கலைஞர் ஆட்சியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு அரசியல் பூச்சுப்பூசி அதற்கு ரசாயனப் பூச்சுப் பூசாமல் சிதையவிட்ட கதைகளையும் நாடறியும்.

சிலையைச் சிலையாகப் பார்க்க வேண்டும்; அரசியலாகப் பார்க்கக் கூடாது. சிவாஜி சிலையைக் கடற்கரை காமராசர் சாலையில் கலைஞர் நிறுவியபோது அந்தச் சிலை திறப்புவிழாவில் கலந்துகொண்டு பேசியவர்களில் நானும் ஒருவன். அவர்பட்ட பாடுகள் அனைத்தையும் அருகிலிருந்து அறிந்திருக்கிறேன்.

சிலை மறுநிலைநாட்டம் செய்யப்பட்டாலும் அந்தச் சிலையோடு கலைஞரின் பெயரும் இடம் பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் இடம்தான் மாறியிருக்கிறதே தவிர சிலை மாறவில்லை. கலைஞரின் பெயர் எப்படி விடுபட்டது? இதுதான் இடப்பெயர்ச்சியின் பலனா? கலைஞரின் திருப்பெயரைத் தமிழக அரசு அந்த பீடத்தில் கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு இரண்டு பேரின் ரசிகனாகத் தமிழக அரசுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் இது.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024