Monday, October 2, 2017

மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய டாக்டர் கைது: இளைஞர் படுகாயம்

Published : 30 Sep 2017 18:22 IST

மு.அப்துல் முத்தலீஃப்சென்னை

அண்ணா நகரில் மது போதையில் தனது சொகுசு ஆடி காரில் கட்டுப்பாட்டை இழந்து ஓட்டி வந்து வாலிபர் மீது மோதிய டாக்டர் பின்னர் தப்பிக்க நினைத்து காரை வேகமாக ஓட்டியதில் சிக்னல் கம்பம் மீது மோதி போலீஸில் சிக்கினார்.

சென்னை அண்ணா நகர் காவல் நிலையம் அருகே பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் குமரன்(47) தனக்கு சொந்தமான விலை உயர்ந்த ஆடி காரில் நேற்று இரவு 3 மணி அளவில்அண்ணா நகர் 3 வது அவின்யூ சாலையில் வந்துள்ளார். போதையில் காரை ஓட்டியதில் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் கண்ணுக்குத் தெரியவில்லை. வேகமாக மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற வியாசர்பாடியை சேர்ந்த சத்யராஜ்(28) தலை, கை, கால்களில் பலத்த காயமடைந்தார்.

விபத்தை ஏற்படுத்திய டாக்டர் குமரன் நிதானத்தில் இல்லாததால் தான் ஒரு மருத்துவர் எனபதையும் மறந்து உயிருக்கு போராடும் இளைஞரை காப்பாற்றாமல் அங்கிருந்து தனது காரில் தப்பித்து வேகமாக சென்றார். கார் அண்ணா நகர் ரவுண்டானா அருகில் வேகமாக திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலையின் அருகே இருந்த சிக்னல் மீது மோதியது.

இதில் போக்குவரத்து சிக்னலும் காரும் பலத்த சேதமடைந்தது. கார் மோதிய சத்தம் கேட்டு போலீஸார் வெளியே வந்து காருக்குள் போதையில் இருந்த டாக்டரை மீட்டனர். படுகாயத்துடன் சாலையில் கிடந்த இளைஞர் சத்யராஜை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சம்பவத்தை நேரில் பார்த்த பெரம்பூரை சேர்ந்த ஜெகன் என்பவர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வியாசர்பாடியை சேர்ந்த சத்யராஜ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்றும், பணி முடிந்து வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டு உள்ளது. மேலும் காரை ஒட்டி வந்தது டாக்டர் குமரன் என்பது தெரிய வந்தது.

காரை பறிமுதல் செய்த போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீஸார் போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி சென்று மீண்டும் விபத்தை ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டார். அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் போலீஸார் பரிந்துரை செய்துள்ளனர்.

டாக்டர் மறுப்பு

நான் அந்த இளைஞர் மீது மோதவும் இல்லை குடித்து விட்டு வாகனம் ஓட்டவும் இல்லை என்று டாக்டர் குமரன் மறுத்துள்ளார்.

இது குறித்து 'தி இந்து' தமிழ் சார்பில் டாக்டர் குமரனிடம் பேசியபோது அவர் கூறியதாவது:

விபத்தின் போது என்ன நடந்தது?

நான் வழக்கமாக பணி முடிந்து காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது முன்னால் பைக்கில் சென்ற அந்த இளைஞர் தடுமாறி வலது புறம் காரின் மீது விழ இருந்தார். அவர் மீது மோதாமல் இருக்க காரை வேகமாக வலப்புறம் திருப்பினேன். அந்த இளைஞர் பயந்து போய் அவராக இடது புறம் போய் விழுந்தார். என்னுடைய கார் திடீர் என்று வலப்புறம் திருப்பியதால் என் கண்ட்ரோலை இழந்து ரவுண்டானா மீது மோதப்போக அதை தவிர்க்க இடது புறம் திருப்பும் போது என் கண்ட்ரோலை மீறி கார் சிக்னல் கம்பம் மீது மோதியது. இது தான் நடந்தது.

நீங்கள் அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதவில்லையா?

கண்டிப்பாக இல்லை. அவர் மீது மோதாமல் இருக்கத்தானே வலது புறம் திருப்பினேன்.

நீங்கள் மது போதையில் வாகனம் ஓட்டியதாக போலீஸ் அறிக்கை சொல்கிறதே?

நான் மது அருந்தி வாகனம் ஓட்டவில்லை.

உங்களுக்கு மது அருந்தியதற்கான சோதனை நடத்தப்பட்டதாக போலீஸ் அறிக்கையில் போட்டிருக்கிறார்களே?

எனக்கு எந்த சோதனையும் நடத்தவில்லை.

கைது செய்யப்பட்டது உண்மையா?

நான் கைது செய்யப்படவில்லை. இரவே நான் வீட்டுக்குச் சென்று விட்டேன். மதியம் ஒரு ஆபரேஷன் கூட செய்தேன். இவை எல்லாம் போலீஸார் ஏன் சொல்கிறார் என்பது எனக்கு புரியவில்லை.

இவ்வாறு டாக்டர் குமரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024