Tuesday, October 3, 2017

பிக் பாஸ் தோல்வியைக் கண்டு துவண்டு போகமாட்டேன்: சிநேகன்

Published : 02 Oct 2017 19:24 IST

சென்னை



'சாந்தன்' இசை வெளியீட்டு விழாவில் சிநேகன் பேசிய போது | கோப்புப் படம்.

பிக் பாஸ் போட்டியாளர்களில் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வானார்கள். இறுதியில் ஆரவ் தான் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டது.

சிநேகன் மற்றும் கணேஷ் வெங்கட்ராம் இருவருக்குமே ஆரவ்வைத் தாண்டி ஆதரவு இருந்தது. இதனால் சமூக வலைதளத்தில் ஆரவ் வெற்றியடைந்ததிற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் சில நாட்கள் ஓய்விற்குப் பிறகு பாடலாசிரியர் சிநேகன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

''எனக்கு வாக்களித்த ஆதரவாளர்கள், உலகம் முழுக்க உள்ள தமிழர்கள், விஜய் தொலைக்காட்சி ரசிகர்கள், பிக் பாஸ் ரசிகர்கள், கமல் சார் ரசிகர்கள், என்னுடைய தோழமை உறவுகள் உள்ளிட்ட அனைவருக்கும் முதற்கண் நன்றி.

உங்கள் ஆதரவால் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் என் முழு வாழ்க்கையை, வேறொரு களத்தில் என்னை இயக்கிக் கொண்டிருந்தது. அதற்கு சாகும் வரை நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.

ஆரவ் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. அதற்கு மேடையிலும் வாழ்த்து சொன்னேன், தற்போதும் வாழ்த்து சொல்கிறேன். காரணம், என் குடும்பத்தில் ஒரு சகோதரன் வெற்றி பெற்றிருக்கிறான். அதில் எந்தவித வருத்தமும் எனக்கில்லை.

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வரும்போது எனக்கொரு சிறு அச்சம் இருந்தது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது நிறைய அழுதுகொண்டே இருக்கிறேன். எதற்கெடுத்தாலும் எமோஷன் ஆகுறேன் என்றார்கள். நான் கிராமத்துக்காரன். பாசத்தை கண்ணீரின் மூலமாகத் தான் வெளிப்படுத்த முடியும். எங்களுக்கு வார்த்தைகள் இல்லை உணர்வுகள் மட்டும். உணர்வுகளை எந்தமொழி கொண்டு மொழிபெயர்க்க முடியாது. அதன் வெளிப்பாடுதான் என்பது எனக்கு தெரியும். மக்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்ற அச்சத்தோடு தான் வெளியே வந்தேன்.

ஆனால், இன்றைக்கு எனது ஆதரவாளர்கள், தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் எதிரொலியாக ஊடகப் பதிவுகளைப் பார்க்கும் போது மெய்சிலிர்த்துப் போய் நிற்கிறேன். அனைவரது வருத்தங்கள், ஆதங்கங்களைப் பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது. சில இடத்தில் தொலைக்காட்சியைப் போட்டு உடைத்திருக்கிறார்கள், பஸ் மறியல் செய்திருக்கிறார்கள் என்று கேட்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. இவ்வளவு அன்பு வைக்க நான் என்ன பண்ணினேன். கிராமத்துக்காரனாக, விவசாயி மகனாக சமகால வாழ்க்கையை வாழ முயற்சி செய்தேன். அங்கு நானாக வாழ்ந்திருக்கிறேன்.

அன்பு தேவைப்படுகிற இடத்தில் எல்லாம், சிநேகன் கட்டிப்பிடிப்பதற்காகவே உள்ளே சென்றிருக்கிறான் என்று சொன்னீர்கள். ஒன்று தெரியுமா, ஒரு பெண்ணைத் தொடுவதற்குக் கூட, அந்தப் பெண் நம் மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். அப்போது தான் நெருங்கி வர முடியும். அவ்வளவு எளிதாக ஒரு பெண்ணைத் தொட்டுவிட முடியாது நண்பர்களே. அவர்கள் அந்த ஆதரவு என்னிடமிருக்கிறது என்று நம்பினார்கள். அன்பின் வெளிப்பாடாக தான் அரவணைத்தேன். தாயும், குழந்தையும் அரவணைக்கும் அன்புதான் அங்கு நடந்தது. அதையும் விமர்சனம் செய்தீர்கள். எனக்கு விமர்சனமும், தோல்விகளும் புதிதல்ல. பழகிப்போனது. காரணம், விமர்சனங்களும், தோல்விகளும்தான் இந்த உயரத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. வெற்றி, விமர்சனம், தோல்வி இதை எல்லாம் சமமாகப் பார்த்தவன்.

நிறைய ரணங்களை அனுபவித்தவன். இந்த தோல்வியைக் கண்டெல்லாம் துவண்டு போக மாட்டேன். சிநேகனைக் காணவில்லை என்று செய்திகள் வெளியான போது ஒரு பக்கம் சிரிப்பாகவும், மற்றொரு பக்கம் ஆதங்கமாகவும் இருந்தது. அய்யோ நம்மை தேடுகிறார்களே இவர்கள் என்று. அதற்கான பதிவு தான் இது.

நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. 100 நாட்கள் தனியாகவே இருந்தோமே, ஒரிரு நாட்கள் ஓய்வில் இருக்கலாம் என்று தான் அமைதியாக இருந்தேன். ரொம்ப நல்லாயிருக்கேன், மகிழ்ச்சியாக இருக்கேன். அதற்கு காரணம், ஊடகங்கள் வாயிலாக வரும் அன்பின் எதிரொலி. வெற்றியடைந்தால் கூட இது தெரியாமல் போயிருக்கோம் என்ற ஐயப்பாடு இருக்கிறது. உங்கள் அனைவரது ஆதரவு இருக்கும் வரை ஊர்க்குருவி மாதிரி மேலே பறந்து கொண்டுதான் இருப்பேன். தயவு செய்து வருத்தப்படாதீர்கள், வேறு எந்த விபரீதமான முடிவுக்கும் போக வேண்டாம். யாரையும் திட்டாதீர்கள், அனைவருமே நம் சகோதரர்கள்.

உங்களது ஆதரவை தொடர்ந்து கொடுங்கள். கூடிய விரைவில் அனைவரையும் சந்திப்பேன். என் மக்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். காரணம், நான் மக்கள் கவிஞன். கிராமத்துக்காரன். எங்கு நட்டாலும் முளைப்பேன், அந்த நம்பிக்கை இருக்கிறது. உங்கள் ஆதரவால் இன்னும் பல மடங்கு அந்த நம்பிக்கை பெருகியிருக்கிறது. நன்றி'' என்று சிநேகன் தெரிவித்திருக்கிறார்.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024