Tuesday, October 3, 2017

மத்திய பிரதேசத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு அரசு சலுகைகள்: முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்பு

Published : 02 Oct 2017 17:13 IST

ஆர்.ஷபிமுன்னாஆர்.ஷபிமுன்னா




சிவராஜ் சிங் சவுகான் | கோப்புப் படம்.

மத்திய பிரதேச மாநிலத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு அரசு சலுகைகள் வழங்கப்படும் என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். இதற்காக, அம்மாநில அரசு சார்பில் ஒரு புதிய திட்டம் அறிவிக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதிலும் இன்று உலக முதியோர் தினம் கொண்டாடப்பட்டது. பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான மத்தியப் பிரதேசத்திலும் அதற்காக ஒரு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் முதியோருக்காக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

இது குறித்து சிவராஜ் சிங் தனது உரையில் கூறியதாவது: ''எங்கள் மாநிலத்தில் வசிக்கும் முதியோர்களை இந்த அரசு கலங்க விடாது. இவர்களுக்குத் தேவையான அனைத்து வகை சலுகைகள் மற்றும் பாதுகாப்புகளை நாம் அரசு சார்பில் வழங்குவோம். இதற்காக, விரைவில் ஒரு புதிய திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இதில், ஆதரவு இன்றி தனியாக நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசித்து வரும் முதியோர்கள் பயன்பெறுவார்கள். தம் வயதான காலத்தில் அனைத்து முதியோரும் மகிழ்வுடன் வாழும் வகையில் அவர்களுக்கு ம.பி. அரசு துணை நிற்கும்'' எனத் தெரிவித்தார்.

ம.பி. அரசின் திட்டப்படி முதியோர்களுக்காக ஒரு அவசர உதவிக்கான தொலைபேசி எண் அறிவிக்கப்பட உள்ளது. அரசு சார்பில் ஒரு ஒவ்வொரு வருடமும் ஒரு முதியோர் பஞ்சாயத்து முதல்வரின் அரசு பங்களாவில் நடத்தி அதில், அனைவரும் கவுரவிக்கப்பட உள்ளனர். இதில், முதியோருக்காக ஒரு சிறப்பு பூஜையும் நடத்தப்பட உள்ளது. முதல்வர் சிவராஜ் சிங் கலந்து கொண்ட உலக முதியோர் தின விழா மேடையில் அவருடன் 100 வயது நிரம்பிய புனியாபாய் மற்றும் கன்னையாலால் ஆகிய இருவரும் அமர வைக்கப்பட்டனர். முதியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த விழாவில், கணினியின் மவுசில் ஒரே முறையான கிளிக்கில் ஓய்வு ஊதியம கிடைக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. ம.பி. அரசின் சமூக நீதித்துறை சார்பிலான இந்த விழாவில் அம்மாநில அமைச்சரான கோபால் பார்கவும் கலந்து கொண்டார். தம் வயதான பெற்றோர்களை கைவிடுவோர் மீது தம் அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் பார்கவ் எச்சரித்தார். வெளிநாடுகளில் வசிக்கும் சில பிள்ளைகளின் பெற்றோர் இந்தியாவில் உயிரிழக்கும் செய்தி ஆறு மாத காலம் தாமதமாக போய் சேர்வதாகவும் குறிப்பிட்ட பார்கவ், இந்தநிலை மபியில் நிகழாத வகையில் அரசு பார்த்துக் கொள்ளும் என உறுதி அளித்தார்.

இவ்விழாவின் பார்வையாளராக திரளான முதியோர் கலந்து கொண்டனர். இவர்களுக்காக சில சிறப்பு உணவு வகைகளுடன், உடல் பரிசோதனை முகாமும் நடைபெற்றது.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024