Tuesday, October 3, 2017

2 மாதமாக சம்பளம் வழங்காததால் சென்னையில் இருந்து நெல்லைக்கு பஸ் கடத்தல்: டிரைவர், கண்டக்டரிடம் விசாரணை

2017-10-02@ 00:28:41




நெல்லை: சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் சத்யா(39). இவரிடம் 3 ஆம்னி பஸ்கள் உள்ளன. இந்த பஸ்கள் சென்னையில் இருந்து பெங்களூரு, திருப்பதி, திருச்சி, மதுரை மற்றும் நெல்லை, தூத்துக்குடி ஆகிய வழித்தடங்களில் இயங்கி வருகிறது. இதில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சென்று வரும் பஸ்சில் நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்த சாலமோன் (24) டிரைவராகவும், வள்ளியூர் அருகே பண்டாரக்குளத்தை சேர்ந்த ராஜேஷ் (22) கண்டக்டராகவும் உள்ளனர். இவர்களுக்கு பஸ் உரிமையாளர், கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என தெரிகிறது. நேற்று முன்தினம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்வதாக சாலமோன், ராஜேஷ் ஆகியோர் சத்யாவிடம் கூறிவிட்டு அங்கிருந்து நெல்லைக்கு பஸ்சை கடத்தி வந்தனர்.

பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே பஸ்சை நிறுத்தியிருந்தனர். இதுகுறித்து பஸ் உரிமையாளர் சத்யா தாம்பரம் போலீசில் புகார் செய்தார். சென்னை போலீசார் நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் கடத்தப்பட்ட பஸ்சை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். டிரைவர் சாலமோன், கண்டக்டர் ராஜேஷ் ஆகியோரிடம் விசாரிக்கின்றனர். மேலும் பஸ் உரிமையாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024