Tuesday, October 3, 2017

"கதிரியக்க மருத்துவப் பரிசோதனை தேவை அதிகரித்து வருகிறது'

By DIN | Published on : 02nd October 2017 04:18 AM

மருத்துவத்துறையில் எக்ஸ்ரே, எம்ஆர்ஐ, சிடி ஆகிய கதிரியக்க மருத்துவப் பரிசோதனைகளின் தேவை அதிகரித்து வருகிறது என பாரத் பல்கலைக்கழகத் துணை வேந்தர் மருத்துவர் வி.கனகசபை கூறினார்.

சென்னை குரோம்பேட்டை பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை (செப்.30) நடைபெற்ற சர்வதேச மருத்துவக் கதிரியக்கத் தொழில்நுட்பக் கருத்தரங்குத் தொடக்கவிழாவில் அவர் மேலும் பேசியது:-
மனித உடலைப் பாதிக்கும் சுமார் 150 வகை நோய்கள் மூலம் ஏற்பட்ட குறைபாடு, பிரச்னை, பாதிப்பு ஆகியவற்றைத் துல்லியமாகக் கண்டறிவதன் மூலம் உறுதி செய்து, உரிய சிகிச்சை அளிக்க எக்ஸ்ரே, எம்.ஆர்ஐ உள்ளிட்ட கதிரியக்க மருத்துவப் பரிசோதனைகள் பேருதவி புரிகின்றன. நோயைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் நவீன கதிரியக்க மருத்துவப் பரிசோதனைகளால் மருத்துவச் செலவு அதிகரிப்பது தவிர்க்க முடியாதது என்றாலும், வருங்காலத்தில் அது குறைய வாய்ப்புள்ளது.

சர்வதேச அளவில் கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கதிரியக்க மருத்துவப் பரிசோதனை, சராசரியாக 700 மடங்கு அதிகரித்துள்ளது. இது அடுத்த 10 ஆண்டுகளில் உலகெங்கும் அதிகரித்து வரும் ôர் மக்கள் தொகை காரணமாக, 1400 மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

நோய் அறிகுறிகளைக் கண்டறியும் மருத்துவர், நோய் எத்தகைய பாதிப்பை எந்த இடத்தில் எவ்வாறு ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஆதாரத்துடன் அறிந்து, உரிய சிகிச்சை அளிக்க உறுதுணையாகத் திகழ்ந்து வரும் கதிரியக்க மருத்துவப் படிப்பில் சர்வதேச அளவில் நிகழ்ந்து வரும் வளர்ச்சி குறித்த அறிவாற்றலைச் சர்வதேச மருத்துவ சமூகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

இதில் கல்வி ஆலோசகர் வீரபாகு, அமெரிக்க பெதஸ்டா மருத்துவப் பல்கலைக்கழக கதிரியக்கத்துறைத் தலைவர் மார்க் டி.மர்பி, பிரிட்டன் ஸ்டாக்போர்ட் பவுண்டேஷன் நியுரோ கதிரியக்க ஆலோசகர் டாக்டர் எம்.சரவணன், சென்னை மருத்துவக் கல்லூரி பெர்னார்டு கதிரியக்கவியல் துறை இயக்குநர் ஆர்.ரவி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி துறைத் தலைவர் சி.அமர்நாத், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி துறைத் தலைவர் ஜெ.தேவிமீனாள், ராமச்சந்திரா மருத்துவமனை துறைத் தலைவர் பி.எம்.வெங்கடசாய், பாலாஜி மருத்துவக்கல்லூரி முதல்வர் டி.ஆர்.குணசேகரன், துணை முதல்வர் சாய்குமார், துறைத் தலைவரும்,கருத்தரங்குத் தலைவருமான எம்.பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024