இனியும் சகித்துக் கொள்ள மாட்டேன்: அரசு நிர்வாகம் முற்றிலும் செயலிழந்து விட்டது; லஞ்சத்தில் திளைக்கும் அதிகாரிகள் - வெளிப்படையாக ஆவேசம் காட்டிய கருணாஸ்
Published : 03 Oct 2017 09:50 ISTநீரை.மகேந்திரன்சென்னை
தமிழக அரசு முற்றிலும் செயலிழந்துவிட்டது. அமைச்சர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை. கடமை ஆற்ற வேண்டிய அதிகாரிகளும் லஞ்சத்தில் திளைக்கின்றனர் என்று திருவாடணை எம்எல்ஏ கருணாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: மறைந்த முதல்வர் அம்மாவின் ஆட்சி நடக்கிறது என்று தற்போதைய முதல்வரும் அமைச்சர்களும் கூறுகின்றனர். ஆனால் இவர்கள் சொல்வதில் கொஞ்சம்கூட உண்மையில்லை. இது அம்மாவுக்கு களங்கத்தை உருவாக்கும் ஆட்சி.
கல்விக் கொள்கை, சமூக நீதி திட்டங்கள், சிறுபான்மையினர் ஆதரவு, மாநில உரிமை எதிலும் அம்மாவின் கொள்கைகளை கடைபிடிக்கவில்லை. மத்திய அரசு சொல்வதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்துகிறார்கள். அமைச்சர்களும், அமைச்சர்களின் உறவினர்களும்தான் இந்த ஆட்சி நிலைக்க வேண்டும் என நினைக்கின்றனர்.
கடந்த ஒரு ஆண்டு காலத்தில் எந்த உருப்படியான திட்டங்களையும் நிறைவேற்ற முடியவில்லை. எல்லாவற்றுக்கும் அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர். மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளிடத்தில் சென்றால் யார் ஆள் என்பதை பொறுத்துதான் வேலை நடக்கிறது.
விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவரே வெளிப்படையாக லஞ்சம் கேட்கிறார். ஏழைப் பெண்கள், விதவைத் தாய்மார்களுக்கு அளிக்க வேண்டிய சத்துணவு ஆயா வேலைக்கு கூட 3 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள். இதை இனிமேலும் சகித்துக் கொள்ள கூடாது என்பதால்தான் இப்போது வெளிப்படையாக சொல்ல வேண்டி இருக்கிறது.
இந்த ஆட்சி இனிமேலும் தொடர்வதில் சட்டப் பேரவை உறுப்பினரான எனக்கு விருப்பமில்லை. மக்களை சந்தித்து நேரடியாக விளக்கங்களை அளிக்க உள்ளேன். ஓபிஎஸ் அணியா, ஈபிஎஸ் அணியா, தினகரன் அணியா என்கிற அடையாளம் எல்லாம் இல்லை. இரட்டை இலை சின்னத்தில் நிற்க மறைந்த முதல்வர் அம்மா வாய்ப்பளித்தார். அதை உருவாக்கி தந்தவர் சின்னம்மா. அந்த விசுவாசம் உள்ளது.
ஊழலை ஒழிப்பேன் என்றுதான் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். அதை நம்பிய கோடிக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன். ஆனால் தமிழ்நாட்டில் ஊழல் அரசாங்கத்துக்கு வெளிப்படையாக மத்திய அரசு துணை போவது நியாயமா என்கிற கேள்வியை சராசரி இளைஞனாக மட்டுமல்ல; குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் வாக்குறுதி கொண்ட உறுப்பினராகக் கேட்கிறேன்.
இந்த ஊழல் அரசு நிலைத்திருப்பது நியாயமா. வாக்களித்த தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் இது. முதலாவதாக, நான் இப்போது வெளிப்படையாக பேசத் தொடங்கி இருக்கிறேன். அடுத்ததாக ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினராக பேசத் தொடங்குவர்கள்.
இவ்வாறு கருணாஸ் கூறினார்.
No comments:
Post a Comment