Wednesday, October 25, 2017


உயிரோடு இருக்கும் நபர்களின் கட் அவுட், பேனர்களை பொது இடங்களில் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை

சென்னை

உயிரோடு இருக்கும் நபர்களின் கட் அவுட், பேனர்களை பொது இடங்களில் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணாநகரைச் சேர்ந்த திருலோச்சண குமாரி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளது.
திருலோச்சண குமாரி தாக்கல் செய்த  மனுவில், ''சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணாநகரில் எனக்குச் சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் மெக்கானிக் கடை உள்பட பல்வேறு கடைகளை வாடகைக்கு விட்டுள்ளேன். இந்நிலையில், இந்த இடத்தில் தொடர்ந்து அரசியல் தலைவர்களின் பேனர், கட் அவுட் வைக்கப்படுகிறது. இது வாடகைதாரர்களுக்கு இடையூறாக இருக்கிறது. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்டவர்களிடம் எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டோம். பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பலரிடம் புகாரும் செய்துவிட்டோம்.
ஆனால், எந்தப் பயனும் இல்லை. மேலும், கட் அவுட், பேனர்களை அகற்றக் கூறினால் சம்பந்தப்பட்டவர்கள் எங்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளிப்போம் என மிரட்டுகின்றனர். எனவேதான் நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். எங்களுக்குச் சொந்தமான இடத்தில் கட் அவுட், பேனர்கள் வைப்பதை நிறுத்துமாறு உத்தரவிடவேண்டும். பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் கட் அவுட், பேனர், பிளக்ஸ் போர்டு வைக்கும் முறையை முறைப்படுத்த வேண்டும்" என்று கோரியுள்ளார்.
இந்த மனு இன்று (அக்.24 2017) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், "தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் தூய்மையான சுற்றுப்புறத்தைப் பேணும் விதமாக குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சுவர்களில் தேவையற்ற படங்களை வரைதலைத் தடுக்க வேண்டும்.
இது தொடர்பாக ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் தமிழ்நாடு திறந்தவெளிச் சட்டம்- 1959-ல் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் திருத்தங்களைக் கடைபிடிப்பதை அரசு உறுதி செய்யுமாறும் உத்தரவிடுகிறது.
அதையும் மீறி எப்போதாவது கட் அவுட், பிளக்ஸ், பேனர் வைக்க அதிகாரிகள் அனுமதி அளித்தாலும் உயிரோடு இருக்கும் நபர்களுக்கு இத்தகைய கட் அவுட், பேனர், பிளக்ஸ் போர்டுகள் வைக்க அனுமதிக்கக் கூடாது.
இது தொடர்பாக, தமிழக தலைமைச் செயலர் அனைத்து டவுன் பஞ்சாயத்து, பஞ்சாயத்து, யூனியன், முனிசிபாலிட்டி மற்றும் மாநகராட்சிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பும்படி இந்த நீதிமன்றம் அறிவுறுத்துகிறது" என நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

212 PG medical seats vacant after Round 2

212 PG medical seats vacant after Round 2 TIMES NEWS NETWORK 29.12.2024 Ahmedabad : Following the second-round allocations for postgraduate ...