Wednesday, October 4, 2017

திரை விமர்சனம்: கருப்பன்

ஜல்லிக்கட்டில் தனது முரட்டுக்காளையை அடக்கினால், தங்கையைத் திருமணம் செய்து தருவதாகச் சவால் விடுகிறார் செல்வந்தர் பசுபதி. காளையை அடக்கி, அவரது தங்கை தன்யாவை கரம்பிடிக்கிறார் முரட்டு இளைஞரான விஜய் சேதுபதி. தன்யாவின் மீது ஒருதலைக் காதல் கொண்டிருந்த முறைப்பையன் பாபி சிம்ஹா, அவரை அடையத் துடிக்கிறார். இதற்காக அவர் பின்னுகிற வன்மம் கலந்த சூழ்ச்சி வலையில் இருந்து விஜய்சேதுபதி, தன்யா, பசுபதி எப்படி மீள்கிறார்கள் என் பதுதான் கதை.
தமிழ் சினிமா பலமுறை துவைத்துக் காயப்போட்ட கதை தான் என்றாலும், தனது பாணியில் அதைப் புதிதாகக் காட்ட முயன்றிருக்கிறார் இயக்கு நர் பன்னீர்செல்வம், அதற்காக அண்ணன் – தங்கை பாசம், அம்மா - மகன் பாசம், தாய் மாமனின் மோகம், புதுமணத் தம்பதியின் உருக்கம், நெருக்கம் என கதாபாத்திரங்களை உணர்வுபூர்வமாக வார்த்த விதத்திலும், வசனங்களை எழு திய விதத்திலும் ஈர்த்துவிடுகிறார்.
சட்டையைக் கழற்றி உடம்பைக் காட்டி, ஏறுதழுவி அக்மார்க் கிராமத்து வாலிபராக என்ட்ரி கொடுக்கிறார் விஜய்சேதுபதி.
‘‘கருப்பனைப் பார்த்தா மாடு வாடிவாசலையே தாண்டாது.இந்த மாடு முட்டி செத்தா வாடிவாசல்ல சிலை வைக்கச் சொன்னேன்னு சொல்லு’’ என களத்தில் நின்று வசனம் பேசுவதிலும், உடல்மொழியிலும் ஜல்லிக்கட்டின் வீரத் தைக் கடத்துகிறார்.
மனவளர்ச்சி குன்றிய தாயை, தன் குழந்தையைப் போல நேசிப்பது, மனைவியின் சொல்லுக்கு மட்டுமே அடங்கிப்போவது,கெட்ட மனிதர்கள் மீது எந்தச் சூழ்நிலையிலும் கைநீட்டுவது என சராசரி கிராமத்து கதாபாத்திரமாகத் தன்னை வெளிப்படுத்தும் விஜய்சேதுபதி, சண்டை, பாடல் காட்சிகளில் வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகனாக மாறிவிடுகிறார்.
விஜய்சேதுபதியைத் தூக்கிச் சாப்பிடுகிறது தன்யாவின் நடிப்பு. விஜய்சேதுபதியுடனான காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் அந் நியோன்யம் அருமை. விஜய் சேதுபதியின் மாமாவாக வரும் சிங்கம் புலியின் நகைச்சுவை ரசிக்கும்படி உள்ளது. சொந்தமாக தொழில் தொடங்க முடிவு எடுக்கும் விஜய்சேதுபதியிடம் சிங்கம் புலி, ‘‘நீ வேண்ணா டாஸ்மாக் கடை போட்டுக்குறியா? வேணாம் வேணாம். அப்புறம் கவர்மென்ட் எப்படி குடும்பம் நடத்தும்?’’ என்று கூறும்போதும்,
‘‘விவசாயம் பண்ணு. இன்னும் கொஞ்ச நாள்ல விவசாயம் பண்றவனைத்தான் இந்த உலகம் சாமியா கும்பிடப் போகுது’’ என்று கூறும்போதும் கைதட்டல்.
குடிகாரன், சண்டை போடுபவன் என்று விஜய்சேதுபதியைப் பற்றி ஊர்க்காரர்கள் சொல்லும்போது, ‘‘அவன் குடிப்பான். ஆனா, குடிகாரன் இல்லை. சண்டை போடுறதுதான் ஆம்பளைக்கு அழகு’’ என வசனம் பேசும் இடத்தில் இளைஞர்களை ஈர்க்கிறார் பசுபதி. கிளைமாக்ஸில் பாபி சிம்ஹாவின் நடிப்பு சிறப்பு.
இமானின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். ஜல்லிக்கட்டு காட்சி, இறுதி சண்டை, கிராமத்து தெருக்களின் அழகு என போட்டி போட்டு காட்சிகளை மனதில் நிறைத்திருக்கிறது சக்திவேலின் ஒளிப்பதிவு.
அடுத்தடுத்து வரும் காட்சிகளை ஊகிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைத்திருந்தால் கருப்பன் அனைவருக்குமே ‘விருப்பன்’ ஆகியிருப்பான்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024