Wednesday, December 6, 2017

300 தனியார் பொறியியல் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்க்க தடை: ஏ.ஐ.சி.டி.இ

By DIN  |   Published on : 04th December 2017 11:22 AM  |
aicte
நாடு முழுவதும் உள்ள 300 தனியார் பொறியியல் கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் புதிய மாணவர் சேர்க்கை நடத்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தடை விதித்துள்ளது. 
இந்தியாவில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 13.56 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவற்றில் 800 கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. 
கடந்த சில வருடங்களாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. என்ஜினீயரிங் படிப்பு மீதுள்ள மோகம் குறைந்ததால் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டவில்லை.

சிறந்த கட்டமைப்பு வசதிகள் கொண்ட கல்லூரிகளை மட்டும் மாணவர்கள் தேர்வு செய்து வருவதால் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்லூரிகளை புறக்கணித்தனர். இதனால் அந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேராததால் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியியல் இடங்கள் நிரப்பப்படாமலேயே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் சேர்கை இல்லாமலும் மிக குறைந்த எண்ணிக்கையில் சேர்ந்த மாணவர்களை வைத்துக்கொண்டு தொடர்ந்து கல்லூரிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ச்சியாக 30 சதவீதத்திற்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளை விரைவில் மூடப்பட வேண்டும். அந்த கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களை சேர்க்கையை உடனிடியாக நிறுத்த வேண்டும் என அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) அனுமதி அளித்துள்ளது.

மேலும் மாணவர் சேர்க்கை 30 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள 500 பொறியியல் கல்லூரிகளை கண்காணித்து வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர் சேர்க்கைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள கல்லூரிகள் விரும்பினால், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாகவோ, தொழில்பயிற்சி கல்லூரிகளாகவோ மாறிக்கொள்ளலாம் என ஏ.ஐ.சி.டி.இ. கூறியுள்ளது. 

பொறியியல் கல்லூரிகளின் வங்கிக்கடன், முதலீட்டுத்தொகை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கலை, அறிவியல் கல்லூரிகளாக மாற வாய்ப்பு அளிக்கப்படுவதாக ஏ.ஐ.சி.டி.இ. விளக்கமளித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024