Wednesday, December 6, 2017

ஜெயலலிதா நினைவுநாளில் சசிகலா என்ன செய்து கொண்டிருந்தார்?

By DIN  |   Published on : 06th December 2017 04:49 PM 
0000sasi_pays_homage_to_j

ஜெயலலிதா நினைவுநாளான நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் அனைத்து அமைச்சர்களும் கருப்புச் சட்டை அணிந்து மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு பேரணி சென்றனர். அங்கே அவர்களது ‘அம்மா’ விற்கு அஞ்சலி செலுத்தியபின் அம்மா வழியில், புரட்சித் தலைவர் எம்ஜிஆரை முன்மாதிரியாகக் கொண்டு தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சியை நடத்திக் கொண்டு செல்வதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இவையெல்லாம் அனைத்து தமிழ் ஊடகங்களிலும் காணொலிக்காட்சிகளாக விவரிக்கப்பட்டு செய்தியாகின.

ஆனால், அதே நேரம் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ஜெயலலிதாவுடனே இருந்து அவர் முதல்வராக இருந்த போதும் நிழல் ஆட்சி நடத்தியவராகக் கருதப்பட்ட சசிகலா என்ன செய்து கொண்டிருந்தார் என்பதையும் மக்கள் அறிந்து கொள்ளத்தானே வேண்டும். சசிகலா தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருப்பது அனைவரும் அறிந்ததே. கடந்த அக்டோபர் மாதம் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சென்னை குளோபல் மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறிய சமயம், கணவரை உடனிருந்து கவனித்துக் கொள்ள சசிகலாவுக்கு பரோல் வழங்கப்பட்டது. அதே போல, தற்போது ஜெயலலிதா நினைவுநாளன்றும் மெரினாவில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி துக்கம் அனுஷ்டிக்க தனக்கு பரோல் கிடைக்குமா என சசிகலா தனது வழக்கறிஞர் வட்டாரத்தில் விசாரித்ததாகவும். ரத்த சம்மந்தம் உடையவர்களுக்கு மட்டுமே அப்படி அனுமதி வழங்க சட்டத்தில் வாய்ப்பு இருப்பதால், இவரது பரோல் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறப்பட்டதால் அந்த முயற்சியைத் தவிர்த்து விட்டு, பெங்களூர் அதிமுக நிர்வாகியான புகழேந்தி மூலமாக ஜெயலலிதாவின் புகைப்படம் ஒன்று நேற்று சசிகலா இருக்கும் சிறை வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா புகைப்படத்தில் கண்ணாடி இருக்கக் கூடாது என்ற உத்தரவின்படி லேமினேட் செய்யப்பட்ட புகைப்படம் சிறைக்குள் சசிகலா இரங்கல் தெரிவிக்க வேண்டி அனுமதிக்கப்பட்டது. ஜெயலலிதா நினைவுநாளான நேற்றைய தினம் அதிகாலையில் விழித்தெழுந்த சசிகலா, உடனே தயாராகி ஜெயலலிதா புகைப்படத்துக்கு மாலை சூட்டி அஞ்சலி செலுத்தி விட்டு, புகைப்படத்தின் முன்பாகவே அமர்ந்து சுமார் 1 மணி நேரம் தியானத்தில் ஆழ்ந்து விட்டாராம். தியானம் முடிந்ததும் ஜெயலலிதா படத்தைப் பார்த்து கதறி அழுத சசிகலா, ‘அக்கா இறந்து ஒரு வருடம் முடிந்து விட்டதா? என்னால் நம்பவே முடியவில்லை, அவர் இப்போதும் என்னுடனேயே இருப்பது போலத்தான் உணர்கிறேன்’ என்றாராம்.

அதுமட்டுமல்ல, இளவரசி மகன் விவேக்கை அழைத்து, சென்னையில் ஏதாவது ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்று அவர்களது அன்றைய சாப்பாட்டுச் செலவை ஏற்றுக் கொண்டு உணவிடச் சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி விவேக்கும், அவர் மனைவி கீர்த்தனாவும் நேற்று சென்னை தாம்பரம் அருகே உள்ள ஆதரவற்றோர் இல்லம் ஒன்றுக்குச் சென்று மதியம் மற்றும் இரவு உணவுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அங்கே ஜெயலலிதா நினைவாக உணவிட்டுத் திரும்பினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024