ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய எம்.ஜி.ஆர்!
By வழக்கறிஞர் சி.பி. சரவணன் |
Published on : 06th December 2017 01:56 PM
தமிழ்த் திரையுலகில் பல சாதனைகள் புரிந்து, சரித்திரம் படைத்தவர் டைரக்டர் பி.ஆர்.பந்துலு.
தேசப்பற்று
மிக்கவர். “கப்பலோட்டிய தமிழன், “வீர பாண்டிய கட்டபொம்மன்” போன்ற படங்களை
பத்மினி பிக்சர்ஸ் சார்பில் அவர் தானே தயாரித்து வழங்கினார். கொடைக்கே கொடை
வழங்குவதைப் போல “கர்ணன்” திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கியவர்.
“ஆயிரத்தில்
ஒருவன்” படத்திற்காக கதை எழுதப்பட்டு, கதாநாயகனாக நடிப்பதற்கு ஒரு நடிகரை
ஒப்பந்தம் செய்யவும் முடிவு செய்துவிட்டார் பி.ஆர்.பந்துலு.
இந்நிலையில்...
பழுத்த அனுபவமிக்க தயாரிப்பாளரான வீனஸ் கிருஷ்ணமூர்த்தியும்,
பி.ஆர்.பந்துலுவும் சந்தித்தனர். தான் அடுத்து தயாரிக்கப்போகும் படத்தின்
கதையை பந்துலு அவரிடம் கூறினார். நடிகரைக் கூட முடிவு செய்துவிட்டதாகத்
தெரிவித்தார்.
“இது எம்.ஜி.ஆர் நடிக்க
வேண்டிய கதை. இந்த மாதிரி படத்தில் அவர் நடித்தால் தான் நன்றாக இருக்கும்,
படமும் அமோகமாக வெற்றி பெறும்’ எனப் பிரகாசமான முகத்துடன் வீனஸ்
கிருஷ்ணமூர்த்தி உறுதியாகக் கூறினார்.
”அவரை வைத்து நான் படம் எடுக்க முடியுமா? அவர் சம்மதிப்பாரா? பி.ஆர்.பந்துலு தயங்கிக் கேட்டார்.
“ஏன்
முடியாது? நானே அவரிடத்தில் இதைப்பற்றி பேசிவிட்டு, உங்களிடம் சொல்கிறேன்’
என நம்பிக்கை விதையை விதைத்து, புறப்பட்டுச் சென்றார்.
எம்.ஜி.ஆரைப் பார்த்து இது குறித்து பேசினார். எம்.ஜி.ஆர் சம்மதம் தெரிவித்தார்.
பி.ஆர்.பந்துலு
உடனே எம்.ஜி.ஆரை சந்திக்க விரும்பினார். ராமாவரம் தோட்டத்திற்குப் போன்
செய்தார். தான் புறப்பட்டு வருவதாக” எம்.ஜி.ஆரிடம் சொன்னார்.
எம்.ஜி.ஆரோ, “நீங்கள் பெரியவர் ..உங்களைப் பார்க்க நான் வருவது தான் முறை. நானே வந்து சந்திக்கிறேன்” என்று கனிவோடு கூறினார்.
“இல்லை...
இதோ நான் புறப்பட்டுவிட்டேன். நானே வந்து உங்களை சந்திக்கிறேன். அது தான்
சரி!” என்று பி.ஆர்.பந்துலு பதில் கூறிவிட்டு உடனே ராமவரம் தோட்டத்திற்குச்
சென்றார்.
அன்னை சத்யா இல்லத்தில்
எம்.ஜி.ஆர் வாசலில் நின்று வரவேற்று, அவரை உள்ளே அழைத்துச் சென்றார்.
இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.
“ஆயிரத்தில்
ஒருவன் “ படத்தில் நடிப்பதற்கு எம்.ஜி.ஆர் ஒப்புதல் அளித்ததற்கு
பி.ஆர்.பந்துலு நன்றி தெரிவித்துக் கொண்டார். கலையுலகைப் பற்றி சிறிது
நேரம் உரையாடினர்.
பி.ஆர்.பந்துலு தன் படத்தில் நடிப்பதற்கு எவ்வளவு சம்பளம் வேண்டும், முன்பணம் எவ்வளவு தர வேண்டும் என தயங்கித் தயங்கி கேட்டார்.
எம்.ஜி.ஆர் ”கலகல” வென்று சிரித்தார். பந்துலு வியப்போடு இமையாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“சம்பளம்… முன்பணம்…! சரி ஒரு ரூபாய் கொடுங்கள்…” என அமைதியாகப் புன்னகை புரிந்தார்.
ஒரு
லட்ச ரூபாய் முன் பணம் கேட்பதற்குத் தான்.... “ஒரு ரூபாய்” என்று
மறைமுகமாக அவர் சொல்கிறார் என்று கருதி, நோட்டுகளை பையிலிருந்து எடுக்க
முயன்றார்.
“ஏன் சிரமப்படுகிறீர்கள்?
என்ன எடுக்கிறீர்கள். ஒரு ரூபாய்… ஒரே ஒரு ரூபாய்… சாதாரண நாணயம் இருந்தால்
கொடுங்கள் போதும்” என எம்.ஜி.ஆர் தீர்மானமாகச் சொன்னார்.
அதிசயத்தை ஆச்சரியத்தோடு பார்ப்பது போல் பந்துலு பார்த்தார்.
“இல்லை…வந்து…” என மறுப்பதற்கு முயன்றார்.
“இந்த விசயத்தில் நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும், தயவு செய்து ஒரு ரூபாய் கொடுங்கள் பெற்றுக் கொள்கிறேன்” என்றார்.
பெரிய தயாரிப்பாளர், பிரமாண்டப் படங்களை இயக்கிய பி.ஆர்.பந்துலு இப்படி ஒருவரை சந்தித்ததில்லை.
அவர்
எழுந்து வெளியில் சென்று, தன் உதவியாளர்களிடம் கேட்டு, தேடிப் பிடித்து
ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார்.
பந்துலு வருவதைக் கண்ட எம்.ஜி.ஆர் எழுந்து நின்றார் புன்னகை மாறாமல்…
ஒரு ரூபாய் நாணயத்தை “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் நடிப்பதற்கு முன் பணமாக எம்.ஜி.ஆரிடம் பந்துலு வழங்கினார்.
“ஆயிரத்தில் ஒருவன் “ படத்திற்காக கோவாவில் 35 நாட்கள் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டார்.
இந்தப்படத்தில்
தான் ஜெயலலிதா அவருடன் இணைந்து முதன்முதலில் நடித்தார். பாய்மரக்
கப்பலிலும், இயற்கை எழில் சூழ்ந்த கோவா பகுதி கார்வார் கடற்கரையிலும்
படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது.
பத்மினி
பிக்சர்ஸ் கதை இலாக்காவில் அப்போது இருந்தவர்கள் தான் ஆர்.கே.சண்முகமும்,
ஓம்சக்தி ஜெகதீசனும். ஆயிரத்தில் ஒருவன், படத்திற்கு முதன் முதலாக
உரையாடல்களை எழுதிய ஆர்.கே.சண்முகம், பின்பு அவரது பல படங்களுக்கு
எழுதினார். இயக்குனராகவும் உயர்ந்தார்.
படம்
வெளிவந்து, அமோக வெற்றி பெற்று, வெற்றிச் செய்தியோடு பந்துலு ஒருநாள்
ராமாவரம் தோட்டத்திற்குச் சென்றார். திடீரென்று தாமாகவே உரிய சம்பளத்தை
எம்.ஜி.ஆரிடம் அளித்தார்.
எம்.ஜி.ஆர் எவ்வளவோ மறுத்தும், அவருக்கு சேர வேண்டியதை வற்புறுத்தி வழங்கினார்.
No comments:
Post a Comment