Wednesday, December 6, 2017

சட்ட சிக்கலில் பாரதிதாசன் பல்கலை

Added : டிச 05, 2017 22:08 |

பாரதிதாசன் பல்கலை யில், விதிகளை மீறி பணி நியமனம் மேற்கொள்வதை தடுக்கும்படி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர, சிண்டிகேட் உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.

பாரதிதாசன் பல்கலையில், இந்த ஆண்டு, ஜூன் முதல், துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. புதிய துணை வேந்தரை நியமிக்க, தேடல் குழு அமைக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 241 பேர் விண்ணப்பித்து உள்ளதாக, அவர்களின் பெயர் விபரங்களை, பல்கலை இணையதளத்தில், உயர்கல்வித்துறை வெளியிட்டது. விண்ணப்பித்தோரில், தகுதியானவரை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து, தகுதியான மூன்று பேர் பட்டியலை, தேடல் குழுவினர், கவர்னரிடம் வழங்குவர். இதனிடையே, துணைவேந்தர் நியமிக்கப்படும் முன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, பதிவாளர் மற்றும் தொலைநிலை கல்வி இயக்குனர் பதவிகளை நிரப்ப, உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
உயர்கல்வித்துறை செயலர், சுனில் பாலிவால், கல்லுாரி கல்வி இயக்குனர், மஞ்சுளா ஆகியோர் கொண்ட, பாரதிதாசன் பல்கலையின் தற்காலிக நிர்வாக கமிட்டி, இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்காக, வரும் 12ல், சிண்டிகேட் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, பல்கலையின் சிண்டிகேட் உறுப்பினர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் தரப்பில், கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த ஆண்டு, ஏப்., 20ல், உயர்கல்வி செயலர், சுனில் பாலிவால் பிறப்பித்த உத்தரவில், 'துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவதற்கு, மூன்று மாதம் உள்ள நிலையில், எந்த பல்கலையும் பணி நியமனம் மேற்கொள்ளக்கூடாது' என, குறிப்பிட்டுள்ளார். இதன்படி, பல்கலை துணைவேந்தர் இல்லாதபோது, பணி நியமனம் செய்யக்கூடாது. ஆனால், பாரதிதாசன் பல்கலைக்கு மட்டும், உயர்கல்வி செயலர், தான் பிறப்பித்த உத்தரவை, தானே மீறுவது போல் உள்ளது என, சிண்டிகேட் உறுப்பினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுதொடர்பாக, முதல்வரின் தனிப்பிரிவு, கவர்னர், உயர்கல்வி அமைச்சர் ஆகியோருக்கு, சிண்டிகேட் உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 


'வரும், 12ல் நடக்க உள்ள சிண்டிகேட் கூட்டத்தை நடத்தக்கூடாது; பணி நியமன நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, சிண்டிகேட் உறுப்பினர்கள் எழுப்பி உள்ளனர். இந்த பிரச்னை தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக, சிண்டிகேட் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024