Tuesday, December 5, 2017

சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்.! – கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல்.!

எம்.கணேஷ் வீ.சக்தி அருணகிரி

'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு` என்பார்கள். அந்தவகையில், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக உயர்ந்துவருகிறது. குறிப்பாக தென் தமிழகத்தைச் சேர்ந்த பலர் சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகளில் வேலை பார்த்துவருகிறார்கள். அவர்களின் உரிமைகள் சார்ந்த பல பிரச்னைகளை இந்திய அரசும், சம்பந்தப்பட்ட நாட்டின் அரசும் தீர்த்து வருவது வரவேற்கத்தக்க விஷயமாக இருந்தாலும், ஏமாற்றும் பேர்வழிகள் சிலர் புதிது புதிதாக பொறிவைத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். அதில், சிக்குண்டு பலர் தங்கள் பணத்தையும் உடைமைகளையும் இழக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது சிங்கப்பூரில் உள்ள கும்பல் ஒன்று, இந்திய மக்களைக் குறிவைத்து போலி போன்கால்கள் மூலம் பணம் பறித்துக்கொண்டிருக்கிறது. அந்த மோசடிக் கும்பலின் வலையில் சிக்க இருந்து தப்பித்தவரும், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பேரிடர் மேலாண்மை பயிற்றுநருமான ஹரிபாலாஜி சிங்கப்பூரிலிருந்து நம்மை தொடர்புகொண்டு பேசினார்.

"பணி நிமித்தமாக சில மாத விசாவில் சிங்கப்பூர் வந்திருக்கிறேன். இது எனக்குப் புதிது இல்லை என்ற போதிலும், கடந்த வாரம் எனக்கு சிங்கப்பூரின் மனித ஆற்றல் அமைச்சகத்திலிருந்து (Ministry of Man Power) பேசுவதாக ஒரு போன்கால் வந்தது. தன் பெயர் ஜான் மேத்யூ என்று அறிமுகம் செய்துகொண்டு, தன்னுடைய ஐ.டி. நம்பரை (MOM2120) சொல்லி மிகக் கண்ணியமாகப் பேசினார். இம்மிகிரேஷன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும்போது, என்னுடைய பிறந்த தேதியை மாற்றி எழுதிவிட்டதாகச் சொன்னார். அதாவது தேதி, மாதம், வருடம் என்ற வரிசையில் எழுதியதால் விண்ணப்பம் பிழையாகிவிட்டதாகவும், மாதம், தேதி, வருடம் என்ற வரிசையில்தான் எழுத வேண்டும் என்றும், இந்தத் தவறால் நீங்கள் சிங்கப்பூரில் இருப்பது சட்ட விரோதம் என்றும் சொன்னான். எனக்கு பயம் வந்துவிட்டது. விண்ணப்பத்தை மீண்டும் பூர்த்திசெய்ய இரண்டு வழிகள் இருப்பதாகச் சொன்னார். டெல்லில் இருக்கும் சிங்கப்பூர் தூதரக அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். அல்லது சிங்கப்பூரில் உள்ள அவரின் அலுவலகத்திற்கு வரவேண்டும். அதற்குக் கணிசமான தொகையை அந்த நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என்றார். எனக்குச் சந்தேகம் வரவே, "நான் எப்படி உங்களை நம்புவது?" என்று கேட்டேன். உடனே அமைச்சகத்தின் இணையதளத்தில் பார்க்கச் சொன்னார். பேசிக்கொண்டே இணையதளத்திற்குள் சென்றேன். அதில் இருக்கும் தொடர்பு எண்ணைப் பார்க்கச் சொன்னார். பார்த்தேன். அந்த எண்ணும், என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் எண்ணும் சரியாக இருந்தது. சிங்கப்பூரின் அதிகாரபூர்வ அமைச்சகத்தின் தொலைபேசி எண்ணும் இவன் பேசிய எண்ணும் சரியாக இருந்ததால் உடனே வங்கிக்கணக்கில் பணம் செலுத்தி என்னுடைய பிழையைச் சரிசெய்யலாம் என்று முடிவெடுத்தேன். அதனை அவரிடம் சொன்னேன்.



உடனே, நான் இருக்கும் இடத்தின் அருகில் இருக்கும் ஒரு இடத்தைக்குறிப்பிட்டு, உடனடியாகப் பணத்தை டெபாசிட் செய்யச் சொன்னார். மீண்டும் எனக்குச் சந்தேகம் வரவே, நான் பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளரிடம் நடந்ததைத் தெரிவித்தேன். அவர் கேட்டதோ 970 டாலர். அப்போதுதான் தெரிந்தது அது ஒரு போலி போன்கால் என்று.

வேலை விஷயமாக சிங்கப்பூர் வரும் அனைவரையும் இந்த மோசடிக் கும்பல் இப்படித்தான் ஏமாற்றி வருகிறது. ஏமாறுபவர்களை மொத்தமாக மொட்டையடித்து பணத்தைச் சுருட்டிக்கொள்வார்கள். பின்னர் அந்த நம்பரை பிளாக் செய்துவிட்டேன். தொடர்ந்து பல முறை கால் வந்தது. வேறு நம்பரிலிருந்து பேசினார்கள். 'போலீஸ் உங்களை கைது செய்யும். உடனே பணம் செலுத்தித் தப்பித்துக் கொள்ளுங்கள்' என்று சொன்னார்கள். போலீஸ் வந்தால் நான் பேசிக்கொள்கிறேன். உங்களைத் தேடி போலீஸ் வராமல் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்ன பிறகுதான் போன் செய்வதை நிறுத்தினார்கள். பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலைக்காக சிங்கப்பூர் வருகிறார்கள். அவர்களில் பலர் இந்த மோசடிக்காரர்களின் வலையில் சிக்கி பணத்தை இழக்கிறார்கள். இதனை சிங்கப்பூர் அரசும், இந்திய அரசும் கவனத்தில் எடுத்துக்கொண்டு குற்றவாளிகளைப் பிடித்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும்`` என்றார்.

தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் :

சிங்கப்பூரில் இருக்கும் உறவுகள் இதுபோன்ற போலி போன்கால்கள் வந்தால் உடனே இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவசியம். அத்துடன் சில நுணுக்கமான விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். உலக நாடுகளின் எந்த விண்ணப்பமாக இருந்தாலும் தேதி-மாதம்- வருடம் என்ற வரிசையில்தான் எழுதுவார்கள். அமெரிக்காவில் மட்டும்தான் மாதம்-தேதி-வருடம் என்ற வரிசையில் எழுதுவார்கள்.

மேலும், சிங்கப்பூர் அரசாங்கத்தைப் பொறுத்தவரை, ஒருபோதும் போன் செய்யமாட்டார்கள். எந்தத் தவறாக இருந்தாலும் கடிதம் மூலமாக மட்டுமே தொடர்புகொள்வார்கள். அவர்களின் அலுவலகத்திற்கு வரவழைத்து விளக்கம் கேட்டு, தேவையான உதவிகளைச் செய்வார்கள். அதனால், சிங்கப்பூர் அரசாங்கத்தின் பெயரைச் சொல்லி போனில் பேசுபவர்களை நீங்கள் ஒரு மிரட்டு மிரட்டி விடலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024