Tuesday, December 5, 2017

ஓரங்கட்டப்பட்ட தமிழ்... புதுக்கோட்டை ரயில் நிலையம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறதா?

பாலஜோதி.ரா
ம.அரவிந்த்
சே.அபினேஷ்

"புதுக்கோட்டை ரயில் நிலையம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறதா..? இல்லை, குஜராத், டெல்லியில் இருக்கிறதா?' என்று புலம்பியபடிதான் ரயிலை பிடிக்கவே விரைகிறார்கள் புதுக்கோட்டை நகர மக்கள். ஆம் இத்தனை ஆண்டுகளாக தமிழில் இருந்த புதுக்கோட்டை ரயில் நிலையத்தின் முகப்புப் பலகை இப்போது இந்திக்கு மாறியுள்ளது. தமிழ் பக்கவாட்டு பலகைக்கு மாற்றப்பட்டுள்ளது.



நீண்ட கட்டடத்தின் முகப்பில், ஆங்கிலம், தமிழ், இந்தி என்ற வரிசையில் இருந்த ரயில்வே நிலைய பெயரில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது, பிரதான நுழைவாயிலில் இருந்த தமிழ்ப் பெயர், இப்போது இந்திக்கு மாறியுள்ளது. இந்தி இருந்த இடத்துக்குத் தமிழைத் தள்ளிவிட்டார்கள். ‎

அந்தப் பகுதியில் ஆட்டோ ஓட்டும் செந்தில்குமார் நம்மிடம் "இந்தப் பெயரை ஆறு மாசத்துக்கு முன்னாடியே மாத்திட்டாங்க. ரயில் நிலையம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால், அதிகமாக மக்களுக்குத் தெரியாமல் இருந்தது. ஆனாலும் கட்சிக்காரர்கள் கொஞ்சம் பேர் தகவல் தெரிந்து ரயில்வே அதிகாரிகளிடம் பேசிப் பார்த்தாங்க. 'இதோ பழையபடியே மாத்திடுறோம்'னு சொன்னாங்க ஆனா, இன்னிக்கு வரை மாற்றவே இல்லை"என்றார்.

இதற்காகப் போராட்டம் நடத்திய 'நாம்தமிழர்' கட்சியின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் இரா.கணேசனிடம் பேசினோம். பெயரை அவர்கள் இந்தியில் மாற்றிய மூன்றாவது நாளே நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மறுநாளே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்கூட்டி அதிகாரிகளுடன் பேசினோம். 'டெல்லியிலிருந்து வந்த உத்தரவு அதை மாற்ற முடியாது' என்று கூறினார்கள். 'புதுக்கோட்டை ரயில் நிலையத்துக்கு மட்டும் பெயரை மாற்றுங்கள்?' என்று உத்தரவு வந்ததா என்று நாங்கள் கேட்டதற்கு அவர்கள் சரியான முறையில் பதிலளிக்கவில்லை.


அதன் பிறகு நாங்கள் விசாரித்தபோது, இங்கே பணிசெய்யும் வட இந்திய அதிகாரி ஒருவர் செய்த வேலைதான் இது என்பதைத் தெரிந்துகொண்டோம். வட இந்திய ஊழியர்களைத் தமிழக ரயில் நிலையங்களில் பணியமர்த்தி, தனது இந்தி மொழிதிணிப்பு வெறியைத் தீர்த்துக்கொள்கிறது மத்திய அரசு. இன்றைக்குப் புதுக்கோட்டை ரயில் நிலையத்துக்கு நடந்தது நாளைக்குத் தமிழகத்தில் உள்ள எல்லா ரயில் நிலையங்களுக்கும் நடக்கலாம்" என்றார். ‎இதுகுறித்து விளக்கம்பெற நிலைய அதிகாரியைத் தொடர்பு கொண்டோம். போனை எடுத்தவரிடம் பெயர் பலகை ஏன் தமிழிலிருந்து இந்திக்கு மாறியது என்று கேட்டதற்கு "க்யா..க்யா போல்" என்று எதிர்முனையில் பேசுகிறார். பெயர்பலகை மட்டுமல்ல அதிகாரிகளிடமும் தமிழ் ஓரங்கட்டப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024