Friday, December 1, 2017

வெளிச்சம் போதவில்லை!

By ஆசிரியர் | Published on : 01st December 2017 01:34 AM |

 'வியாபம்' முறைகேடு வழக்கில் மத்தியப் புலனாய்வு அமைப்பு 592 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. இவ்வளவு பெரிய ஊழல், அரசு மற்றும் நிர்வாகத் தலைமைகளின் ஆசியுடனோ, தொடர்புடனோ அல்லாமல் நடந்திருக்கவே முடியாது என்பது அனைவருக்குமே தெரியும். ஐந்தாண்டுகளாக நடத்தப்படும் விசாரணையின் முடிவில், மத்தியப் புலனாய்வு அமைப்பினரால் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் யாரென்று பார்த்தால், இந்த ஊழலில் வெளிப்படையாகக் கையும் களவுமாகப் பிடிபட்ட சாதாரணமானவர்களே தவிர, பின்னணியில் இருந்தவர்கள் ஒருவர்கூடக் கிடையாது.

மத்தியப் பிரதேசத்தில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையிலும், அரசுப் பணியிடங்களை நிரப்புவதிலும் நடந்த முறைகேடுதான் 'வியாபம்' முறைகேடு என்று பரவலாக அறியப்படுகிறது. 'வ்யவசாயிக் பரிக்ஷô மண்டல்' என்கிற ஹிந்தி வார்த்தையின் சுருக்கம்தான் 'வியாபம்'. தமிழகத்தில் பணியாளர் தேர்வு ஆணையம் இருப்பதுபோல, மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்த அமைப்பு இது. இப்போது இதற்குத் 'தொழில்முறைத் தேர்வு ஆணையம்' என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள்.


ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், 'வியாபம்' ஆணையம் நடத்திய போட்டித் தேர்வுகளில், முறைகேடான வழியில் தகுதியற்றவர்கள் பணம் கொடுத்து, குறுக்கு வழியில் அரசுப் பணி, பொறியாளர் பணி, மருத்துவப் பணிகளில் சேர்ந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மருத்துவக் கல்லூரிச் சேர்க்கையிலும் இதுபோல முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மத்தியப் பிரதேச நீதிமன்றம், சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்து விசாரிக்கும்படி மாநில அரசுக்கு உத்தரவிட்டது.


2007 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் நடந்திருக்கும் இந்த முறைகேடு குறித்த விசாரணை தொடங்கியது முதல், இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மர்மமான முறையில் மரணமடைவது ஊடகங்களின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. பெரும்பாலானவர்கள் வாகன விபத்திலும், ஏனையோர் சிலர் தற்கொலை செய்து கொண்டும் இறந்திருக்கிறார்கள். மரணமடைந்தவர்களில் 32 பேர், 25-க்கும் 30-க்கும் இடையிலான வயதுடையவர்கள் என்று சிறப்பு விசாரணைக் குழு தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது.
தனியார் கல்வி நிறுவனங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நுழைவுத் தேர்வு எழுதாமலேயே, எழுதியதாகப் பதிவு செய்யப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். 

மத்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணை, மாநில அரசின் சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையைவிட விரிவாகவும், முறையாகவும் நடந்திருக்கிறது என்றாலும்கூட, இந்த விசாரணை முடிவுகள் நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமையவில்லை என்பதுதான் உண்மை.

மத்தியப் புலனாய்வு அமைப்பின் வளையத்துக்குள் 'வியாபம்' ஆணையத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த மூத்த இந்திய அரசுப்பணி அதிகாரிகளோ, அவர்களை வழிநடத்தும் துறைசார்ந்த அமைச்சர்களோ ஏன் வரவில்லை என்று புரியவில்லை. இது குறித்துத் தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று அரசியல் தலைமை பதில் சொல்லித் தப்பிக்க முடியாது, கூடாது.
'வியாபம்' முறைகேட்டில் மாநில ஆளுநர் ராம் நரேஷ் யாதவ், மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், அவரது மனைவி சாதனா, மத்திய அமைச்சர் உமாபாரதி உள்ளிட்டோர் தொடர்புடையவர்கள் என்று இடித்துரைப்பாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இவர்களது மனுவை ஏற்றுத்தான், 'வியாபம்' தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்தியப் புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கும்படியும், தனது நேரடி மேற்பார்வையில் விசாரணை தொடரும் என்பதால் போபால் உயர்நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும் உச்சநீதிமன்றம் இரண்டாண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது.


பதவியின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதால், மாநில ஆளுநர் விசாரணை வளையத்திலிருந்து அகற்றி நிறுத்தப்பட்டார். மற்றவர்கள், மத்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணையில் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அகற்றி நிறுத்தப்பட்டனரா, இல்லை அவர்கள் வசதியாக விசாரணையிலிருந்து தவிர்க்கப்பட்டிருக்கிறார்களா என்பது தெரியவில்லை.


ஏறத்தாழ ரூ.2,000 கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடந்திருப்பதாகக் கூறப்படும் 'வியாபம்' முறைகேடு குறித்த விசாரணையிலும்கூட முறைகேடு நடக்கிறதோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது, மத்தியப் புலனாய்வு அமைப்பின் செயல்பாடு.
'வியாபம்' முறைகேடு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சுமார் 2,000 பேரில் முன்னாள் மாநிலக் கல்வி அமைச்சர் லட்சுமிகாந்த் சர்மா, இந்தியக் காவல் பணி அதிகாரி ஆர்.கே. ஷிவாரே, மருத்துவர் வினோத் பண்டாரி, சுரங்க அதிபர் சுதீர் சர்மா என்று பல பெருந்தலைகள் இருந்தனர். அவர்கள் குறித்து மத்தியப் புலனாய்வு அமைப்பின் இப்போதைய குற்றப்பத்திரிகையில் எதுவும் கூறப்படவில்லையே ஏன்?


1,087 மாணவர்கள் முறைகேடாக மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது சேர்க்கை ரத்து செய்யப்பட்டு, கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள், சரி. அத்துடன் முடிந்துவிட்டதா? 'வியாபம்' முறைகேட்டில் தொடர்புடைய பலர் வாகன விபத்துகளில் மர்மமான முறையில் இறந்திருக்கிறார்களே, அது குறித்து ஏன் விசாரணை இல்லை, குற்றவாளிகள் ஏன் அடையாளம் காணப்படவில்லை?
இப்படி இன்னும் பல அவிழ்க்காத, அவிழ்க்க முடியாத முடிச்சுகள் இந்த முறைகேட்டில் தொடர்கின்றன. நிஜம்தான் என்ன? 


மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானுக்குத்தான் வெளிச்சம்!

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...