Monday, February 5, 2018

7 மடங்கு பெரிதாகிறது சென்னை நகரம் : எல்லை விரிவாக்க அரசாணை வெளியீடு

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லை விரிவாக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சில கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 

அதேபோல் அரக்கோணம், நெமிலி தாலுகாவில் உள்ள சில கிராமங்களும் சிஎம்டிஏ உடன் இணைக்கப்பட்டுள்ளது. தரமான உள்கட்டமைப்பு மற்றும் சீரான வளர்ச்சி ஆகியவற்றை இலக்காக கொண்டு சென்னை நகரத்தின் எல்லையில் விரிவாக்கப்படும் என்று சென்ற ஆண்டு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

முன்னதாக சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 55 வருவாய் கிராமங்களுடன் சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளாக இருந்து வரும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 67 வருவாய் கிராமங்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்படுவதாக அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, சென்னை மாவட்டம் இனி 122 வருவாய் கிராமங்கள், 16 வட்டங்கள், 3 கோட்டங்களுடன் சுமார் 426 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாக இருக்கும். மேலும் தண்டையார்பேட்டையை தலைமையிடமாகக் கொண்ட வடசென்னை கோட்டத்தில் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மாதவரம், பெரம்பூர், புரசைவாக்கம் ஆகிய 5 வட்டங்களும், அம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்ட மத்திய சென்னை கோட்டத்தில் அம்பத்தூர், அயனாவரம், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், எழும்பூர் ஆகிய 6 வட்டங்களும், கிண்டியை தலைமையிடமாகக் கொண்ட தென்சென்னை கோட்டத்தில் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 5 வட்டங்களும் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1974-ம் ஆண்டு சிஎம்டிஏ செயல்பட தொடங்கிய போது சென்னை பெருநகர எல்லை 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக இருந்தது. 40 ஆண்டுகளாக சென்னை பெருநகர எல்லையில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. இந்நிலையில் தற்போது சென்னை பெருநகரத்துடன் காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களும் அரக்கோணம் தாலுக்காவும் இணைக்கப்படவுள்ளன.

இதனால் சென்னையின் எல்லை 8,878 சதுர கிலோமீட்டராக பிரம்மாண்ட வடிவம் பெற இருக்கிறது. சென்னை பெருநகர விவரிவாக்கத்தின் முறையான திட்ட அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026-ம் ஆண்டில் சென்னையின் மக்கள் தொகை 1.30 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதை எதிர்கொள்ளும் நடவடிக்கையாக பெருநகர விரிவாக்கம் பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Holiday calling: Daily direct flights to Bangkok now

Holiday calling: Daily direct flights to Bangkok now Arvind.Chauhan@timesofindia.com 05.01.2025 Lucknow : To cater to the increasing rush fo...