காலநீட்டிப்பிலேயே காலம் தள்ளும் வல்லுனர் குழு : போராடத்தயாராகும் ஊழியர்கள்
Added : பிப் 01, 2018 02:36
சிவகங்கை: ஓய்வூதியத் திட்ட வல்லுனர் குழுவின் இயங்கும் காலத்தை 7 முறை நீடித்தும் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யவில்லை என, அரசு ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 2003 ஏப்.,1 ல் செயல்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 4.50 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளனர். ஊழியர்களின் சந்தா, அரசு பங்கு தொகை என, மொத்தம் 22 ஆயிரம் கோடி ரூபாயை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்தவில்லை.
இதனால் ஓய்வூதிய பணப்பலன் பெறுவதில் சிக்கல் உள்ளது. அரசு ஊழியர்கள் போராட்டத்தையடுத்து ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு செய்ய ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலாநாயர் தலைமையில் 5 பேர் வல்லுனர் குழுவை 2016 பிப்., 26 ல் அரசு அமைத்தது. அரசு ஊழியர் சங்கங்களைச் சந்திக்காமலேயே அக்குழுவின் இயங்கும் காலம் முடிந்தது.
இப்பிரச்னை சட்ட சபையில் எழுப்பப்பட்டதால், இக்குழு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இக்குழு அரசு ஊழியர், ஆசிரியர் அமைப்புகளை சந்தித்தது. அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில் நவ., 14 மற்றும் 2017 மார்ச் 2 என, இரண்டு முறை தலா மூன்று மாதங்களுக்கு
நீட்டிக்கப்பட்டது. குழுத் தலைவராக இருந்த
சாந்தாஷீலா நாயர் ராஜினாமா செய்ததால்
வல்லுனர் குழு நடவடிக்கை முடங்கியது.
ஆக., 3 ல் புதிய தலைவராக ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதரை அரசு நியமித்தது. இக்குழுவின் அறிக்கையை பெற்று நவ., 30 க்குள் ஓய்வூதியத் திட்டம் குறித்து முடிவு அறிவிக்கப்படும் என, உயர்நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தது. அதன்பின் டிச., 14 மற்றும் ஜன., 4ல் இரண்டு முறை தலா ஒரு மாதத்திற்கு அக்குழு நீடிக்கப்பட்டது. அந்த நீட்டிப்பும் நேற்றுடன் முடிவடைந்தது. அக்குழு இதுவரை அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர்.
ஓய்வூதிய மீட்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திண்டுக்கல் பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: வல்லுனர் குழுவை ஏழு முறை நீடித்தும் பயன் இல்லை. எங்களை ஏமாற்றவே நீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் அளித்த உறுதியை கூட காப்பாற்ற அரசு தயாராக இல்லை. இதனால் மீண்டும் போராட்டத்திற்கு தயாராகி
வருகிறோம், என்றார்.
No comments:
Post a Comment