Thursday, February 8, 2018

இனி வெளிநாடு சென்று மருத்துவம் படிக்கவும் "நீட்" தேர்வு அவசியம்: வருகிறது புது சட்டம்!

By DIN | Published on : 07th February 2018 01:48 PM


புதுதில்லி: இனி வெளிநாடு சென்று மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்ககளும் "நீட்" தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்று சட்டத்திருத்தம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

இந்தியாவைப் பொறுத்த வரை ஒவ்வொரு ஆண்டும் ஆறு முதல் ஏழாயிரம் மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக வெளிநாடு செல்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் செல்வது சீனா மற்றும் ரஷ்ய நாடுகளுக்குத்தான். தற்போதுள்ள விதிகளின் படி, இந்தியாவில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வினை 50% மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றவர்கள், வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விரும்பினால், இந்திய மருத்துவ ஆணையத்திடம் 'தகுதிச் சான்றிதழ்' பெற்றுக் கொண்டு செல்ல வேண்டும்.

பின்னர் அங்கிருந்து படிப்பினை முடித்து திரும்புபவர்கள் இந்தியாவில் மருத்துவராக பணிபுரிய விரும்பினால் இந்திய மருத்துவ ஆணைம் நடத்தும் 'அனுமதி உரிமத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால் தொடர்ச்சியாக இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. மொத்தம் தேர்வு எழுதுபவர்களில் 10 முதல் 15% பேரே தேர்ச்சி பெறுகின்றனர். இது அங்கு படிக்கச் செல்லும் மாணவர்களின் கலவி அறிவு குறித்தும், அங்கு அளிக்கப்படும் மருத்துவக் கல்வியின் தரம் பற்றியும் ஒருங்கே சந்தேகங்களைக் கிளப்புகிறது.

இவற்றில் ஒரு பகுதியினை மட்டுமாவது சரி செய்யும் பொருட்டு இந்த ஆண்டு முதல் வெளிநாடு சென்று மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களும் "நீட்" தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்று சட்டத்திருத்தம் வரவுள்ளது.

இதன் மூலம் 50% மதிப்பெண்கள் பெற்ற, சிறந்த மற்றும் தகுதி வாய்ந்த மாணவர்கள் மட்டுமே வெளிநாட்டில் மருத்துவம் படிக்கச் செல்வார்கள்.

இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024