Wednesday, May 13, 2015

பள்ளிக்கூடம் திறக்கும் ஜூன் 1–ந் தேதி 67 லட்சம் மாணவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகம் வழங்க ஏற்பாடு


சென்னை,

பள்ளிக்கூடங்கள் ஜூன் 1–ந் தேதி திறக்கப்படுகின்றன. அன்று அனைத்து அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 67 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், அட்லஸ் ஆகியவை விலை இல்லாமல் வழங்கப்பட உள்ளன என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

கல்வி கற்க விலை இல்லா உதவி பொருட்கள்

பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம், புத்தகப்பை, காலணி, அட்லஸ் முதலியவற்றால் மாணவர்களின் கல்வி தடைபடக்கூடாது என்று தமிழக அரசு எண்ணி இந்த பொருட்கள் உள்பட கல்வி தொடர்பான 14 பொருட்களை விலை இன்றி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கொடுக்க முடிவு செய்து அதன்படி வழங்கி வருகிறது.

இந்த வருடம் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கு மட்டும், பாடப்புத்தகங்கள் அனைத்தும் விடுமுறையிலேயே கிடைக்க பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் த.சபீதா ஏற்பாடு செய்தார். அதன்படி அவை வழங்கப்பட்டுவிட்டது.

விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதம் 1–ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறக்கும் அன்று அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு (எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்–2 மாணவ–மாணவிகள் தவிர) பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் விலை இன்றி வழங்கப்பட இருக்கிறது.

அனுப்பப்பட்டன

பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி பணிகள் கழக நிர்வாக இயக்குனர் மைதிலி ராஜேந்திரன், செயலாளர் க.அறிவொளி ஆகியோர் அனைத்து மாவட்ட அரசு குடோன்களுக்கு அனுப்பி உள்ளனர். அங்கிருந்து அவை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் அவை பள்ளிக்கூடங்களுக்கு கொடுக்கப்பட இருக்கின்றன.

மே மாத இறுதியில் அனைத்து பள்ளிகளுக்கும் அனைத்து பாடப்புத்தகங்களும், நோட்டுபுத்தகங்களும் சென்றுவிடும்.

இது பற்றி பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1–வது வகுப்பு முதல் 9–வது வகுப்பு வரை படிக்கும் மாணவ–மாணவிகள் 60 லட்சம் பேருக்கும், 11–வது வகுப்பு படிக்கும் 7 லட்சம் மாணவ–மாணவிகளுக்கும் விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் அட்லஸ், ஒரு செட் சீருடை ஆகியவையும் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது’’ என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024