Friday, May 15, 2015

அன்று விதைத்தது; இன்று தழைக்கட்டும்

பிரதமர் நரேந்திர மோடி, சீனாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ளார். பிரதமர் என்ற முறையில் மோடிக்கு இது சீனாவுக்கு செல்லும் முதல் பயணம் என்றாலும், ஏற்கனவே குஜராத் முதல்–மந்திரியாக இருந்தபோது, நான்கு முறை அரசு பயணமாக சீனாவுக்கு சென்றிருக்கிறார். அந்த சுற்றுபயணங்களும் குஜராத்துக்கு பல தொழில் முதலீடுகளை ஈர்த்து கொண்டுவந்தன. இந்த வரலாற்று சிறப்புமிக்க சீனா சுற்றுப்பயணத்தில், பிரதமர் மோடி கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜெயலலிதாவின் அனுமதியோடு சென்னை மேயர் சைதை துரைசாமி சென்றிருப்பது, தமிழ்நாட்டுக்கு பெருமை அளிக்கிறது.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே உள்ள கலாசார, வர்த்தக உறவு என்பது இன்று நேற்றல்ல, பண்டையகாலம் தொட்டே இருந்திருக்கிறது என்பதற்கு, இருநாடுகளிலுமே சரித்திர சான்றுகள் இருக்கின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு 1954–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14–ந்தேதி ஜவகர்லால் நேரு சீனாவுக்கு சென்று, இருநாட்டு நல்லுறவுக்கு விதை விதைத்தார். அன்று அவரும், சீன அதிபர் மா சே துங்கும் 4½ மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தை, இருநாடுகளும் எதிர்காலத்தில் செல்லவேண்டிய புதிய பாதையை வகுத்துக்கொடுத்தது. அன்று மா சே துங் பேசும்போது, ‘பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவைவிட, சீனா மிகவும் பின்தங்கியிருக்கிறது.

அத்தகைய அளவில் தொழில்வளர்ச்சி அடைய சீனாவுக்கு 10 முதல் 20 ஆண்டுகள் ஆகும்’ என்று கூறினார். அத்தகைய நிலையில் இருந்த சீனாவின் முதலீடுகள் இந்தியாவுக்கு வேண்டும் என்று இப்போது கேட்கும் நிலையைப் பார்க்கும்போது, இத்தகைய வளர்ச்சிக்கான காரணங்களை ஆராய்ந்து, அதை பாடமாகக் கொண்டு கடைபிடிக்கவேண்டும். அன்று மாவோ பேசும்போது, ‘இந்தியாவும், சீனாவும் மோதிக்கொள்ளவேண்டிய அவசியமே இல்லை’ என்றார். இதற்கு பதில் அளித்த நேரு, ‘நமக்குள் சில வேறுபாடுகள் இருந்தாலும், நாம் மோதிக்கொள்வதில்லை’ என்றார். இந்த இருதலைவர்களும் விரும்பிய பரஸ்பர உறவு தழைக்க இந்த சுற்றுப்பயணம் உதவவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

மோடிக்கு பிரதமர் என்ற முறையில் இது முதல் பயணம் என்றாலும், சீன அதிபர் ஜி ஜின்பிங், மோடி பிரதமரானவுடன் இந்தியாவுக்கு வந்தபோது வழக்கமாக தலைவர்கள் தலைநகர் டெல்லியில் வந்து இறங்கும் மரபை மீறி, மோடியின் சொந்த ஊரான ஆமதாபாத்தில் தொடங்கினார். காந்தி ஆசிரமத்துக்கும் அவர் சென்றார். ஆமதாபாத்தில் இருதலைவர்களும் ஒரே ஊஞ்சலில் மகிழ்வோடு ஆடியதை இந்தியா, சீனா நாட்டு மக்கள் மட்டுமல்ல, உலக நாடுகளே ஆச்சரியத்தோடு பார்த்தன. அதுபோல, மோடியின் சீன பயணமும் ஜி ஜின் பிங்கின் சொந்த ஊரான ஜியான் நகரில் நேற்று தொடங்கியது. மோடியின் இந்த சுற்றுப்பயணம் வர்த்தக மற்றும் பொருளாதார பிரச்சினைகள், எல்லைப் பிரச்சினைகளை சுற்றி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு சீன அதிபர் ஜி ஜின் பிங், இந்தியா வந்திருந்தபோது, இந்தியாவில், சீனாவின் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளுக்கு உறுதி அளித்தார். அந்த உறுதியை நிறைவேற்றும் வகையில், பல ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படும் எனவும், பெங்களூரில் சீனா அமைக்கப்போகும் கலாசார பூங்காவில் ஒரு ரெயில்வே கல்லூரியை அமைக்கப்போவதுபோல, தமிழ்நாட்டுக்கு பலன் அளிக்கும் ஏதாவது ரெயில்வே திட்டம், அல்லது வேறு ஏதாவது முதலீடும் கையெழுத்து ஆகும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024