Thursday, May 14, 2015

கேள்விகள், சிரிப்புகள், கவலைகள்!

Return to frontpage

மிக விரைவில் முன்னாள் முதல்வராகவிருக்கும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார். நீதிபதி குமாரசாமியை அவர் மனம் எந்த அளவுக்கு வாழ்த்தியிருக்கும் என்று கற்பனைகூடச் செய்ய முடியாது. ராமனின் பாதுகைகளின் கீழ் அமர்ந்து ஆட்சிசெய்த பரதனே கூச்சமடையும் அளவுக்குப் பணிவுடன் தன் கடமையைச் செய்த அவர், இனி தலை நிமிர்ந்து நடக்கலாம். அரியணை என்னும் சிறையை விட்டு விலகலாம். முள்முடியைவிடவும் மோசமான அந்தக் கிரீடத்தைக் கழற்றிவைக்கலாம்.

பன்னீர்செல்வத்தின் பிரச்சினை ஓய்ந்தது. தமிழகத்தின் பிரச்சினை? தமிழகக் கட்சிகளின் பிரச்சினை? நீதிமன்றப் பிரச்சினை? வழக்கு? மேல்முறையீடு? அடுத்த ஆண்டு வரவிருக்கும் தேர்தல்?

ஆட்டம் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. பன்னீர் செல்வத்துக்கு இருக்கும் நிம்மதி வேறு பலருக்கு இருக்காது. ஜெயலலிதா தேர்தலில் நிற்க இயலாத நிலையைக் கணக்கில் கொண்டு தேர்தல் கோட்டை கட்டியவர்கள் இப்போது புழுங்குகிறார்கள். வேறு சிலரோ தேர்தல் காலத்தில் ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வை நம் மீது விழாதா என்ற ஏக்கத்துடன் காய் நகர்த்துகிறார்கள். இன்னும் ஆறு மாதங்களுக்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டிய நிலையில் இருக்கும் ஜெயலலிதா, தீர்ப்பு தந்திருக்கும் புத்துணர்வை நம்பிச் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டுப் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளக்கூடும் என்றும் யூகங்கள் உலவுகின்றன.

இவை அரசியல் கணக்குகள். இப்போதைக்கு வெறும் கணக்குகள். இந்தத் தீர்ப்புதான் தற்போதைக்கு நிச்சயமானது. எவ்வளவு விமர்சனத்துக்கு உள்ளானாலும் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுவிட்டார் என்பதும் அவர் மீண்டும் முதல்வராகிறார் என்பதும்தான் இன்றைய நிதர்சனங்கள். இவற்றின் அடிப்படையில்தான் ஒவ்வொருவரும் தனக்கான எதிர்காலம்குறித்த திட்டங்களை வகுக்க வேண்டும்.

ஒரு தீர்ப்பும் ஒரு சமூகமும்

திட்டங்கள் வகுக்கப்படவும் வெளிப்படவும் சில நாட்கள் ஆகலாம். இப்போதைக்குத் தீர்ப்பே தமிழகத்தின் பேச்சு. எல்லாத் தரப்புகளிலிருந்தும் எதிர்பார்த்த எதிர்வினைகளைக் காண முடிகிறது. சிலருக்கு இது தர்மம் வென்றதன் அடையாளம். மற்றும் சிலருக்கோ ‘இது இறுதித் தீர்ப்பு அல்ல’. வேறு சிலருக்குத் தீர்ப்பு பற்றி எந்தக் கருத்தும் இல்லை.

விடுதலை பெற்றுள்ள ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதைத் தங்கள் கடமையாகச் சிலர் உணர் கிறார்கள். வேறு சிலருக்கு இந்தத் தீர்ப்பு ஒரு ஆய்வுக் களம். அதிலுள்ள சட்டச் சிக்கல்களை, ஓட்டைகளை ஆராய்கிறார்கள். ஊடகங்களுக்கோ இது பெரும் தீனி. தீர்ப்பின் சட்ட விவகாரங்கள், உள் விவகாரங்கள், அரசியல் பரிமாணங்கள் ஆகியவை அலசி ஆராயப்படுகின்றன. மேல் முறையீட்டுச் சம்பிரதாயங்கள்பற்றிப் பேசப்படுகிறது.

கொண்டாட்டங்கள், குமுறல்கள், அலசல்கள், யூகங்கள் ஆகிய களேபரங்களுக்கு மத்தியில் தீர்ப்பின் சட்டச் சிக்கல்கள் குறித்த பேச்சு உரக்க ஒலிப்பது தனித்துக் கேட்கிறது. வருமானத்துக்கு மேல் 10% வரை அதிகமாகச் சொத்து இருந்தால், அதைக் குற்றமாகக் கருத இயலாது என்னும் முந்தைய தீர்ப்பு ஒன்றைச் சுட்டிக்காட்டிய நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா விஷயத்தில் 8.5%-தான் அதிகமாக இருக்கிறது என்கிறார். இந்த முடிவுக்கு அவர் வந்த விதம்பற்றி விமர்சிக்கப்படுகிறது. தீர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ள கணக்கு வழக்குகள் தவறாக இருப்பதைச் சுட்டிக்காட்டும் சிலர், பிழையின்றிக் கூட்டினால் இந்தச் சதவீதம் 70-ஐத் தொடும் என்றும் கணக்குப்போட்டுக் காட்டுகிறார்கள்.

ஆச்சார்யாவின் வாதம்

வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக ஆஜரான பி.வி. ஆச்சார்யா முன்வைக்கும் விமர்சனங்களில் ஒரு வாதம் மிகவும் முக்கியமானது. தன் தரப்பை முன்வைத்து வாதிடத் தனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று கூறுகிறார். தன் தரப்பு வாதத்தை எழுத்துபூர்வமாகக் கொடுக்கும் படி கேட்ட நீதிமன்றம், அதற்கு ஒரே ஒரு நாள் மட்டுமே அவகாசம் கொடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார். சாட்சிகள், பிறழ் சாட்சிகள், விசாரணை நடந்த விதம் ஆகியவை பற்றியெல்லாம் விமர்சனங்கள் நுட்பமான தளத்தில் விரிவாக முன்வைக்கப்படுகின்றன. நீதிபதி குன்ஹா அளித்த ஆயிரத்துச் சொச்சம் பக்கத் தீர்ப்புக்கும் நீதிபதி குமாரசாமி கொடுத்துள்ள தொள்ளாயிரத்துச் சொச்சம் பக்கத் தீர்ப்புக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் தீவிரமாக அலசப்படுகின்றன.

இவை அனைத்தும் குறிப்பது ஒரே ஒரு விஷயத்தைத் தான். இந்த வழக்கில் இறுதி வார்த்தை இன்னமும் சொல்லப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கான வலுவான காரணங்கள் உள்ளன என்று ஆச்சார்யா கூறுகிறார். வழக்கை நடத்திய கர்நாடக அரசு, மனுதாரர்களான சுப்பிரமணியன் சுவாமி, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகிய மூவரில் யார் வேண்டு மானாலும் மேல் முறையீடு செய்யலாம். செய்வார்கள் என்றே தோன்றுகிறது.

ரூ. 7,000-மும் 2 ஆண்டு சிறையும்!

தொலைக்காட்சி விவாதத்தில் இந்த வழக்கு பற்றிய ஆவேசமான விவாதம் நடந்துகொண்டிருந்தபோது, அடியில் ஒரு செய்தி ஓடிக்கொண்டிருந்தது. “ விவசாயியிடம் 7,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் துறை ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை - தர்மபுரி நீதிமன்றம் தீர்ப்பு” என்றது அந்தச் செய்தி. இந்தச் செய்தியைக் கண்ட சாமானியனின் முகத்தில் வறட்சியான ஒரு சிரிப்பு எழுந்திருக்கக்கூடும். ஜெயலலிதாவுக்குத் தண்டனை அல்லது விடுதலை ஆகியவற்றால் அரசியல் அரங்கில் நூறு சாத்தியக்கூறுகள் உருவாகலாம். பல நூறு மாற்றங்கள் நிகழலாம். ஆனால், சட்டத்தின் மீது மக்களுக்கு முழு நம்பிக்கை ஏற்பட வேண்டு மானால், சட்டத்தின் விநோதமான சாத்தியக் கூறுகள் சார்ந்த பல கேள்விகளுக்குப் பதில்கள் கிடைக்க வேண்டும். அரசியல் விளையாட்டுகளுக்கும் பழிவாங்கல்களுக்கும் அப்பாற்பட்ட முக்கியத்துவம் கொண்டது இது.

இன்றைய இந்தியப் பொது வெளியில் அறம் என்பது எத்தனை கேலிக்குரியதாக இருந்தாலும், அறம் சார்ந்த கனவை நாம் இழந்துவிட முடியாது. ஏனெனில், அந்த அறம்தான் என்றேனும் ஒருநாள் நிகழக்கூடிய நமது மீட்சிக்கான ஒரே வழி.

- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024