Sunday, May 17, 2015

இட்லிக் கடை அல்ல தொழிற்சாலை


இட்லிக் கடைகளைப் பார்த்திருப்பீர்கள். சென்னை மறை மலை நகரில் தீபக்ராஜும் அவருடைய சகோதரர்களும் இட்லித் தொழிற்சாலையே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இங்குத் தினமும் 15,000 இட்லிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

சென்னையைச் சேர்ந்த பாஸ்கர், அவருடைய தம்பிகள் ரமேஷ், தீபக்ராஜ் மூவரும் ஆறு வருடங்களுக்கு முன்பு கரூரில் ஜவுளி ஏற்றுமதித் தொழில் செய்துகொண்டி ருந்தார்கள். ஓரளவுக்கு வருமானம் இருந்தாலும் திருப்தி இல்லாமல் நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தனர்.

அப்போது கேட்டரிங் சர்வீஸில் ஈடுபட்டிருந்த இவர்களுடைய சித்தி சித்ரா சென்னையில் ரசாயனம் கலந்த இட்லிதான் கிடைக்கிறது. வீட்டுப் பக்குவத்துடன் இட்லி வார்த்துக் கொடுத்தால் வாங்குவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் எனச் சொல்லியிருக்கிறார்.

குடும்ப இட்லி

“சித்தி இப்படிச் சொன்னதுமே நானும் பாஸ்கர் அண்ணனும் மறைமலை நகரில் சின்னதா ஒரு இட்லி ஸ்டாலை ஆரம்பித்தோம். மல்லிகை பூவா இட்லி வார்ப்பதில் அம்மா சகுந்தலா திறமைசாலி. அவர் கைப்பக்குவத்தில் தயாரான இட்லிகளைத் மக்கள் விரும்பி வாங்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 200 இட்லிகளைத் தயாரித்தோம். இன்னொரு அண்ணன் ரமேஷும் எங்களோடு சேர்ந்துகொண்டார்.

அப்பா நாராயணசாமிக்கு ஆடிட்டிங் அனுபவம் இருந்ததால் கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொண்டார். கூடுதல் உதவிக்கு எங்களோடு என் மனைவியும் அண்ணிமார்களும் கைகோத்தார்கள்.” என்கிறார் தீபக்ராஜ். இப்படித்தான் தினமும் 15 ஆயிரம் இட்லிகளைத் தயாரிக்கும் 'Barade Fluffies' என்ற இட்லித் தொழிற் சாலை உருவாகியது. இப்போது இவர்களது இட்லித் தொழிற்சாலையில் 12 பெண்கள் உள்பட மொத்தம் 15 பணியாளர்கள் வேலைச் செய்கிறார்கள்.

ஸ்டார் ஓட்டல் முதல் தள்ளு வண்டி வரை

40 கிராம் எடை அளவுள்ள ஒரு இட்லியை ரூ.3.50-க்கு இவர்கள் தருகிறார்கள். ஆயிரம் இட்லிகளுக்கு மேல் ஆர்டர் என்றால் மூன்று ரூபாய்க்கே தருகிறார்கள். சென்னைக்குள் ஸ்டார் ஓட்டல்கள் முதல் தள்ளுவண்டி வரைக்கும் இவர்களது இட்லி சப்ளை ஆகிறது. இவர்களது இட்லியை அவரவர் தகுதிக்கேற்ப கூடுதல் விலை வைத்து விற்றுக் காசாக்குகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது கேண்டீனுக்கு இந்தத் தொழிற் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கில் இட்லிகளைக் கொள்முதல் செய்கின்றன. இட்லிக்குத் தேவையான சட்னி, சாம்பார் வகைகளை மட்டும் அவரவர்கள் தயாரித்துக் கொள்கிறார்கள்.

“குஷ்பு இட்லி என்ற பெயரில் இட்லி உப்பலாக வர வேண்டும் என்பதற்காக மாவில் சோடா மற்றும் ஆமணக்கு விதைகளைப் போடுகிறார்கள். ஆனால், நாங்கள் எந்த கெமிக்கலும் பயன்படுத்து வதில்லை என்பதால் எங்களது இட்லியைக் கைக் குழந்தைக்குக்கூட அச்சமில்லாமல் கொடுக்கலாம். கைபடாமல் இருந்தால் மூன்று நாட்கள் வரை எங்கள் இட்லிகெடாது. குழந்தைகளுக்காக இட்லி வாங்க வருபவர் களுக்கு எங்கள் தொழிற்சாலையில் இட்லி இலவசம். தள்ளுவண்டியில் டிபன் விற்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இட்லி சப்ளை செய்கிறோம்.

காலை, மாலை, நடுநிசி ஆகிய மூன்று வேளைகளில் எங்கள் தொழிற்சாலையிலிருந்து இட்லி சப்ளை செய்கிறோம். இதற்காகத் தினமும் 12 மணி நேரம் உழைக்கிறோம். எங்களால் ஒரு மணி நேரத்தில் 2,500 இட்லி தயாரிக்க முடியும். இப்போது தினமும் 200 கிலோ அளவுக்குத் தோசைமாவும் சப்ளை பண்ண ஆரம்பித்திருக்கிறோம்.

தினமும் ஒரு லட்சம் இட்லிகளைத் தயாரிக்க வேண்டும். எங்களது இட்லிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இந்த இரண்டு இலக்குகளையும் எண்ணத்தில் கொண்டு வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் தீபக் ராஜின் அண்ணன் பாஸ்கர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024