இங்கு சில்லறை கிடைக்கும்: மாற்றி யோசித்த மற்றும் சிலர்
கே. டி. ஜெகன்னாதன்
"நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இந்த உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வரும் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்" என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை இரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து பணத்தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், நம் மக்கள் சில உத்திகளைக் கையாண்டு நிலைமையைச் சமாளித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முழுக்க 36 கிளைகளைக் கொண்டு, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சரவண பவன் உணவகத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.
இதுகுறித்து சரவண பவன் உணவக நிர்வாகி கே. கமலக்கண்ணன் கூறும்போது, ''நாங்கள் எந்த தயக்கமும் இல்லாமல் ரூபாய் நோட்டுகளை வாங்கிக்கொள்கிறோம். வங்கிகள் திறந்தவுடன் அவற்றை மாற்றிக் கொள்வோம்'' என்றார்.
சில சுவாரஸ்யமான தீர்வுகள்
சில வாடிக்கையாளர்கள் இந்தப் பிரச்சனைக்கு வேறு விதமாகத் தீர்வு கண்டனர். சாப்பிட்ட/ செலவழித்த இருவரின் தொகையை ஒருவரே செலுத்த மற்றொருவர், அவருக்கு ஆன்லைனில் ரீசார்ஜ் செய்துவிடுவதாக உறுதிகூறிச் சென்றார்.
இன்னும் சிலர் காஃபி குடித்துவிட்டு, கிரெடிட் கார்டு மூலமாக அதற்கான தொகையைக் கட்டினர். இது இந்திய வழக்கமில்லைதான். ஆனால் மாறித்தானே ஆகவேண்டும். சின்னத் தொகையாக இருந்தாலும், பணமில்லாத இந்த நேரத்தில் இதுவே சிறந்த வழியாக இருக்க முடியும்.
''யூடூ டாக்ஸி நிறுவனம் 500 ரூபாய் நோட்டுகளை வாங்கிக்கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கிறது. அதே நேரம் மீதிச் சில்லறையைத் தருவதில்லை. அதற்குப் பதிலாக அடுத்த பயணத்துக்கான அட்டையை வழங்கிவிடுகிறது'' என்கிறார் அதன் வாடிக்கையாளர் சிவசங்கரன்.
இண்டஸ்இண்ட் வங்கி, கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் தனது வாடிக்கையாளர்களுக்கு 2 மடங்கு அதிக பாயிண்டுகளை வழங்குகிறது.
பிரச்சனைகள் எழும்போதுதான் மனிதர்கள் கண்டுபிடிப்பாளர்களாக மாறுகிறார்கள் போல!
No comments:
Post a Comment