கால்கள் செயலிழந்தாலும் மனம் தளராத மருத்துவர்: சக்கர நாற்காலியில் சுழலும் தன்னம்பிக்கை
என்.சுவாமிநாதன்
வைரஸ் காய்ச்சலால் தனது 2 கால்களையும் இழந்த மருத்துவர், நோயாளிகளின் நம்பிக்கையாலும் குடும்பத்தினரின் அரவணைப்பாலும் மீண்டு வந்து, சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி சிகிச்சை அளித்து வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம், தளக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ஆறுமுகம்(63), மாவட்டத்தின் முதல் மூளை நரம்பியல் மருத்துவர் இவர். தளக்குளம் பகுதியில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார். நடக்க முடியாத இவர், சக்கர நாற்காலியில் அமர்ந்தே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்.
அவசர சிகிச்சைப் பிரிவுக்கும், வார்டுகளுக்கும் சக்கர நாற்காலியிலேயே சென்று சிகிச்சை அளிக்கிறார். ஏழைகளுக்கு அவர்களது வருமானத்தின் அடிப்படையில் மிக சொற்ப கட்டணமே வசூலிக்கிறார்.
இதுகுறித்து மருத்துவர் ஆறுமுகம் கூறியதாவது:
எனது தந்தை பழனியாண்டி பெரிய விவசாயி. தான, தர்மம் அதிகமாக செய்வார். இரணியல் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில்தான் கல்வி பயின்றேன். அப்போதே மருத்துவம் படிக்கும் ஆசை உதயமானது.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தேன். தொடர்ந்து 1979-ல் எம்டி பொது மருத்துவம் முடித்தேன். என் தந்தையின் விருப்பப்படி, கிராமப்புறத்தில் சேவை செய்ய விரும்பி, நெய்யூரில் ஒரு மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தேன். 1985-ம் ஆண்டு வேலூர் சிஎம்சியில் இதயவியலும், 1987-ல் மதுரை மருத்துவக் கல்லூரியில் மூளை நரம்பியலும் படித்தேன். குமரி மாவட்டத்தின் முதல் மூளை நரம்பியல் மருத்துவர் நான்தான். ஆனாலும், தொடர்ந்து நெய்யூரிலேயே பணி செய்தேன்.
கடந்த 1992-ம் ஆண்டு எனக்கு வைரஸ் காய்ச்சல் வந்தது. சிகிச்சைக்குப் பிறகு, எனது முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2 கால்கள் உட்பட இடுப்புக்குக் கீழ் பகுதி செயல் இழந்துவிட்டது. வீட்டில் படுத்தே இருக்க வேண்டிய சூழல். அப்போதும் சிகிச்சைக்காக நோயாளிகள் தேடி வர ஆரம்பித்தனர். சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் நான் இருப்பதை, என் குடும்பத்தினர் சொன்னபோதும், ஆலோசனை மட்டுமாவது கேட்டுச் செல்கிறோம் என நோயாளிகள் தேடி வந்தனர். மக்கள் வைத்திருந்த அந்த நம்பிக்கையே என்னை ஆபரேட்டிவ் பேட்டரி வீல்சேருக்கு உயர்த்தியது.
தளக்குளம் கிராமத்தில் 1993-ல் சொந்த மருத்துவமனை கட்டி, சிகிச்சை அளித்து வருகிறேன். நர்ஸிங் கல்லூரி, நர்ஸிங் பள்ளி ஆகியவை அமைத்து ஏழை மாணவர்களுக்கு நன்கொடையே இல்லாமல் என்னால் முடிந்த கல்விச் சேவையையும் வழங்கி வருகிறேன் என்றார்.
மாநில அரசின் சிறந்த சேவைக்கான விருது, ஹெலன் கெல்லர் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ள மருத்துவர் ஆறுமுகத்தை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் தேசிய அறக்கட்டளை உறுப்பினராக மத்திய அரசு சமீபத்தில் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment