குறள் இனிது: தண்டிக்கத் தயங்கலாமா..?
சோம.வீரப்பன்
2004-ல் வெளியான காமராசர் திரைப் படத்தில் ஒரு காட்சி.முதலமைச் சரான அவர் அலுவலகத்திற்கு அவசரமாகக் கிளம்பும் பொழுது கையில் குழந்தையுடன் ஒரு ஏழைப் பெண் ஓடி வந்து அவர் காலில் விழுந்து அழுவாள்.
‘ஐயா, என் கணவரைப் போலீஸ் பிடித்துக் கொண்டு போய் விட்டாங்க' என்பவளிடம், அவள் கணவன் என்ன தப்பு செய்தான் எனக் கேட்க, அவன் சாராயம் விற்றதாகவும், இனிமேல் சாமி சத்தியமாகச் சாராயம் விற்க மாட்டான் என்றும் சொல்வாள்.
அதற்குக் காமராசர் ‘உனக்கு வெட்கமாக இல்லையா? கொலை காரனைக் கூட மன்னிக்கலாம், ஓர் உயிர் தான் போகும். ஆனால் சாராயம் விற்றால் ஊரே நாசமாகும்' என்பார்.
அப்பெண்ணோ ‘ஐயா, அவர் இல்லைன்னா இந்தப் பச்சைக் குழந்தை பட்டினி கிடந்து சாக வேண்டியது தான்' எனக் கதறுவாள்.
லட்சக்கணக்கான ஏழைக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்ளில் மதிய உணவு அளித்த கருணை உள்ளம் கொண்டவர் அவர்.ஆனால் அந்தக் கைக்குழந்தை பட்டினி கிடக்கும் என்பதைக் கேட்டும் மனம் இரங்க வில்லை, மாறவில்லை!
சிறிதும் தயங்காமல் ‘அவனை வெளியே விட்டால் ஊரில் இருக்கும் எல்லாக் குடும்பமும்ல பட்டினி கிடக்கணும்’ எனச் சொல்லி விட்டு கிளம்பி விடுவார்!
தவறு செய்பவர்களைத் தண்டிக்கும் அதிகாரமும் கடமையும் உள்ளவர்கள் சிந்திக்க வேண்டிய உண்மை நிகழ்ச்சி இது!
ஐயா, அலுவலகங்களில் அனுபவப்பட்டு இருப்பீர்கள்.யாரேனும் கையூட்டுப் பெற்றோ வேறு பெருந்தவறு செய்தோ மாட்டிக் கொண்டு விட்டால் அவருக்கு உரிய தண்டனை கொடுக்க நீங்கள் முற்படும் பொழுது பலரும் குறுக்கிடுவார்கள்.
இதற்குக் காலங்காலமாய் சொல்லப்படும் காரணங்கள் தெரிந் தவைதானே! ‘ஏதோ தெரியாமல் பண்ணிட்டானுங்க. முதல் தடவை மன்னித்து விடுங்க' என்பார்கள். சிலரோ ‘பாவங்க, அவன் பிள்ளை குட்டிக்காரனுங்க. அவன் செய்த தப்புக்கு அவன் குடும்பத்தைத் தண்டிக்கக் கூடாதுங்க' என்பார்கள்! ‘ ஏங்க, இவன் ஒருத்தன் தானா தப்பு செய்கிறான்? ஏதோ போறாத காலம் மாட்டிக்கினான். மத்தவனெல்லாம் சாமர்த்தியமாக தப்பிச்சுகிறானுங்க' என்பவர்களும் உண்டு!
அல்லது, ‘இவன் ஒருத்தனைத் திருத்திட்டா எல்லாம் மாறிடுமா? அதற்கு அப்புறமும் தப்பு நடந்துகிட்டு தானுங்க இருக்கும்' என்பார்கள்!
சற்றே சிந்தித்துப் பாருங்கள். இதைப் போன்ற வாதங்கள் எதுவுமே செய்த தப்பை நியாயப்படுத்த முடியாது. செய்யக் கூடாதது என்று தெரிந்தும் செய்வதில் என்னங்க முதல் முறை?
குடும்பம் இருப்பவனைத் தண்டிப்பதில்லை என்றால் எந்தக் குற்றவாளியையாவது தண்டிக்க முடியுமா? இரண்டு, மூன்று குடும்பம் வைத்திருப்பவனை அத்தனை முறைகள் மன்னிப்பதா?
தவறு செய்தவர்களென்று தெரிந்தும் தண்டிக்காவிட்டால், குற்றங்களுக்கு முடிவேது? நல்ல பணியாளர்களைப் பாதுகாப்பது போலவே கெட்ட பணியாளர்களைத் தண்டிப்பதும் மேலாளரின் கடமை தானே? பொல்லாதவனிடம் எதற்குங்க நல்ல பெயர்?
நாட்டு மக்களைக் காத்து, அவர்களிடையே உள்ள குற்றவாளிகளைத் தண்டனைகளால் ஒழிப்பது அரசனுடைய தொழிலாகும், பழி அல்ல என்கிறார் வள்ளுவர்!
குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுஅன்று வேந்தன் தொழில் (குறள்: 549)
somaiah.veerappan@gmail.com
No comments:
Post a Comment