நெட்டிசன் நோட்ஸ்: செல்லாத நோட்டுகளும் மளிகைக்கடை நடத்தும் நல்லவரும்!
க. சே. ரமணி பிரபா தேவி
விலாசினி ரமணி
நேற்றுதான் கையில் இருந்த கடைசிப் பணம் வரை ஹாஸ்பிடலில் செலுத்தினேன். இன்று காலையிலிருந்து எங்கும் வெளியில் செல்லவில்லை. குழந்தைகள் உண்டியலில் சில்லறையாக 200 ரூபாய் தேறும். பக்கத்திலுள்ள எல்லா ஏ.டி.எம்மும் அத்தனை கூட்டமாகவும் பணம் இல்லாமலும் இருக்கின்றன. வீட்டில் மளிகை பொருட்கள், காய்கறி, பழங்கள் எதுவும் இல்லை. என் வங்கிக் கணக்கிலிருந்து எப்படி பணம் எடுப்பேன்? வீட்டிற்கு எப்படி பொருட்கள் வாங்குவேன்?
Amudha Suresh
இந்த ஐநூறு ஆயிரம் புரட்சியில் அந்தக் காவேரி வாரியமும், விவசாயிகள் தற்கொலையும், கூடங்குளமும் மறைஞ்சு போச்சு!
Marx P Selvaraj
காலையில் இருந்து உழைத்து மாலையில் கையில் வாங்கிய பணத்தை இரவில் செல்லாது என்று சொல்லும் ஒரு அரசு யாருக்காக இயங்குகிறது?
பொன் கார்த்திக்
நல்லதோ கெட்டதோ இதுவரை இல்லாத ஒரு புது முயற்சியை எடுக்குது அரசாங்கம். ரெண்டு நாள்தானே பொறுத்துக்குவமே... இதனால கள்ள நோட்டு ஒழியுமா, கருப்புப் பணம் ஒழியுமான்னு இப்பவே ஆராய்ச்சியோ பட்டிமன்றமோ தேவையில்லாத ஒன்று. இப்போதைக்கு வரவேற்போம். தீமைன்னு உறுதியா தெரிஞ்சா விமர்சிப்போம், எதிர்ப்போம்.
அரசு + மக்கள் இணையும் போது தான் எந்த திட்டமும் வெற்றி பெறும். திட்டங்கள் வெற்றி பெற்றால்தான் நாடு வளர்ச்சியடையும். இரு கைகள் இணைந்தால்தான் ஓசை வரும். ஒரு கையிலயும் ஓசை வரும், ஆனா கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும். வலி பொறுப்போம். வலிமை பெறுவோம்....
Ram Kumar
நாம் கொடுத்த எட்டணா, நாலணாவை வாங்க மாட்டேன் எனச் சொன்னக் கடைக்காரர்கள் எல்லாம், சில்லரைக்கு பதிலாக மிட்டாய் கொடுத்தக் கடைக்காரர்கள் எல்லாம் இனி வாலன்டியராக நம்மிடம் சில்லரைக்காகத் தவம் இருப்பார்கள்.. அரசியல்வாதி, உழைப்புறிஞ்சி முதலாளிகள், குறிப்பாக திடீரென முளைத்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் என எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சி இது.
Umamaheswari
ஆயிரம் ரூபாய் நோட்டு. காந்தி சிரிக்கிறார் மக்கள் அழுகின்றனர்.
சிவாஜி
மோடியின் இந்த அதிரடி திட்டத்தால் கருப்பு பணம் ஒழியுதோ இல்லையோ, கள்ள நோட்டு ஒழியும்!
Dinesh N
கருப்புப் பணத்துக்கெதிரான இந்த அதிரடி முடிவு திடீரென்று எடுத்த முடிவல்ல....ஆட்சி அமைத்த உடனேயே SIT எனப்படும் ஸ்பெக்ஷல் இன்வஸ்டிகேக்ஷன் டீம் கருப்புப் பணம் குறித்த தகவல்களை திரட்டத் தொடங்கப்பட்டது. பிரதான் மந்த்ரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் வாயிலாக சாமான்ய இந்தியனும் வங்கிக் கணக்கு தொடங்க வாய்ப்பு வழங்கப்பட்டது. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை முறைப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது....உள்நாட்டில் தானே முன் வந்து கணக்கில் காட்டப் படாத பணத்தை முறைப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
Mugil Siva
'எல்லாரும் நம்ம ரெகுலர் கஸ்டமர்ஸ்தாண்ணே. திடீர்னு சொன்னா எங்க போவாங்க. நேத்து நைட்ல இருந்து நிறைய பேருக்கு அக்கவுண்ட்ல எழுதிதான் பொருள் கொடுத்துக்கிட்டிருக்கேன்' என்று நோட்டை எடுத்துக் காண்பித்தார் எனது ஏரியாவில் மளிகைக்கடை நடத்தும் நல்லவர்.
Pattukkottai Prabakar Pkp
பிரதமர் மோடியின் இந்த அதிரடியான நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். பொது மக்களுக்கு ஒரு வாரத்திற்கு சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். அதையும் ஒருவருக்கு ஒருவர் உதவுவதன் மூலம் சரிசெய்துகொள்ள முடியும். சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றங்களின்போது சமாளிக்கவில்லையா என்ன? பஞ்சம், போர் சமயங்களில் முன் தலைமுறை மக்கள் சந்திக்காத பிரச்சினைகளா?
இந்த நடவடிக்கையின் மூலம் கண்டிப்பாக கணிசமாக கருப்புப் பணம் ஒழியும். தவிர.நம் நாட்டுக்குள் இறக்கி விட்டிருக்கும் கள்ள நோட்டுகள் பெரிய அளவில் கட்டுக்குள் வரும். நேர்மையாளர்களும், நாட்டில் தூய்மை பரவ வேண்டும் என்று விரும்புபவர்களும் இந்த நடவடிக்கையை எதிர்க்க மாட்டார்கள்.
Prabhu Mpr
இனி கேஷ் டிரான்ஸாக்ஷன்ஸ் குறைந்து, கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா ஆன்லைன் பரிவர்த்தனைகள் மட்டுமே கொண்ட நாடாக மாறும். நாட்டில் நடக்கும் எல்லா பரிவர்த்தனைகளும் கணக்கில் வரும்போது அரசின் வருமானம் கூடும். லஞ்சம் மற்றும் முறையற்ற, விஷயங்களை தவிர்க்க முடியும்.
தேர்தலின் போது வோட்டுக்கு பணம் கொடுக்கும் அனைவரும் கருப்பு பணத்தையே நம்பி இருக்கிறார்கள். இனி அது சாத்தியமில்லை. பெரும்பாலும் நல்ல விஷயங்களே இதில் இருப்பதாக தெரிந்தாலும் நிஜமான பாதிப்புகளை ஓரிரு மாதங்கள் கழித்தே சொல்ல முடியும். சின்ன சின்ன சிரமங்கள் இருக்கும். நாட்டின் நலனுக்காக மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என பிரதமரும் அறிவித்திருப்பதைக் கவனிக்க வேண்டும்.
Sowmiya
இன்று பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த பாட்டி ஆயிரம் முறை அவரிடம் இருந்த அந்த மூன்று நூறு ரூபாய் தாள்களை திருப்திப் பார்வை பார்த்துக் கொண்டே வந்ததார். அந்த பாட்டிக்கு பேங்குக்கு போகத் தெரியுமாங்கறத நெனச்சாதான் கஷ்டமா இருக்கு ..!
Vaa Manikandan
புழக்கத்தில் இருக்கிற அதே சமயம் கணக்கில் வராத பணத்தை முடக்குவதுதான் முதல் காரியமாக இருக்க வேண்டும். அதைச் செய்திருக்கிறார்கள். இதோடு எல்லாமும் முடிந்துவிடுவதில்லை. இன்னமும் நிறையச் செய்ய வேண்டியிருக்கிறது.
இந்த திட்டத்துக்கான முக்கியக் காரணம் வெளியிலிருந்து வரும் ஹவாலா பணத்தைத் தடுப்பது, இங்கேயிருந்து வெளிநாடு செல்லும் பணத்தை முடக்குவது என என்னுடைய குருவி மண்டைக்கே நிறையத் தோன்றுகிறது. நாட்டை ஆள்கிறவர்களும் பொருளாதார வல்லுநர்களும் யோசித்திருக்க மாட்டார்களா? செய்வார்கள் என நம்பலாம். என்னவோ ஒரே ராத்திரியில் மோடி முடிவெடுத்துவிட்டு ஸ்டண்ட் அடிப்பதாக எழுதியும் பேசிக் கொண்டிருப்பவர்கள் துளியாவது யோசித்துப் பார்க்கலாம். இது அவ்வளவு எளிய முடிவா? ரிசர்வ் வங்கியிலிருந்து, பொருளாதார நிபுணர்கள் வரை ஆலோசனை நடத்தாமலா முடிவெடுத்திருப்பார்கள்? ஏதாவது குதர்க்கம் நிகழ்ந்தால் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரமும் ஆட்டம் கண்டுவிடும் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலா அறிவித்திருப்பார்கள்? பிசகினால் நாடு திவாலாகிவிடும்.
Aishwarya Govindarajan
ரயிலில் சுண்டல் விற்கும் நரைமுடி ஊமை ஆச்சிக்கும், 16 வயதிலேயே கையில் குழந்தையை வைத்துக்கொண்டு கடலை மிட்டாய் விற்கும் சிறுமிக்கும் தங்கள் கையில் இருக்கும் பத்து ரூபாயை கொடுத்து வீணடிக்க வேண்டாம் என பத்திரப்படுத்துகிறார்கள் சக பயணிகள். அவர்களது இந்த இரண்டு நாட்களை நரகமாக்கிவிட்டு அரசும் சட்டமும் அப்படியென்ன தன் கடமையை செய்துவிடப் போகிறது.. !
P Kathir Velu
பொருளாதாரம் பேசுவது, அரசைக் குறை சொல்வது, அவகாசம் கொடுத்திருக்கலாமே எனச்சொல்வது, அந்த பதினைந்து லட்சம் என்னானது எனக்கேட்பது, தொலைக்காட்சியில் நாம எப்படியாச்சும் சமாளிச்சுக்குவோம்ங்க தினக்கூலிகளை நினைச்சுப் பாருங்க எனச்சொல்வது, பதுக்கல் பணக்காரர்கள் சிக்கல் குறித்து மகிழ்வது... ஆகியவற்றிற்கு முன்னால் அவசியமான ஒன்று இப்படியான பதைபதைப்புக்குள்ளாகும் மனிதர்களை ஆற்றுப்படுத்துவது.
சாமானியர்களுக்கு தாம் கஷ்டப்பட்டு சம்பாதித்து, கையில் வைத்திருக்கும் பணத்திற்கு உத்திரவாதம் தேவைப்படுகிறது. அவர்களை எந்த வகையிலும் பதட்டப்படுத்தாமல், நிதானமான வழிகளைச் சொல்லி, அவர்களின் பணம் எவ்வகையிலும் இழப்பாகிவிடாது என்பதை அழுத்தமாகச் சொல்லி வழி நடத்துவது படித்தவர்கள், நிலைமை புரிந்தவர்களின் கடமை.உண்மையில் இப்போது பலருக்கு உடனடியாகப் பணம் தேவையில்லை. ஆறுதலும், நம்பிக்கையும் தான். அதைக் கொடுங்கள்.
No comments:
Post a Comment