Friday, December 2, 2016

அரசு அலட்சியத்தால் பறிபோன 18 உயிர்கள்... திருச்சி வெடி விபத்தின் பின்னணி..!

vikatan.com

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த டி.முருங்கப்பட்டி கிராமத்தில் இயங்கிவந்த 'வெற்றிவேல் எக்ஸ்ப்ளோசிவ்' எனும் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில்பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

உயிரிழந்த 18 பேரின் உடல்களும் இந்த விபத்தில் சிதறிபோனது. மூன்று சிதறிய உடல்களை தவிர மற்ற உடல்களை அடையாளம் கூட காண இயலாத கோரத்தை இந்த விபத்து ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் பலியானவர்களுக்கு இறுதி சடங்கு கூட நடத்த முடியாமல், இறந்தவர்களின் உறவினர்கள் பரிதவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எப்படி வந்தது இங்கே வெடிமருந்து ஆலை?

திருச்சி மாவட்டம், துறையூர், உப்பிலியபுரம் பகுதியில் பச்சமலை அடிவாரத்தை குறிவைத்து மாந்தோப்பு வைப்பதாக கூறி சேலத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கடந்த 1996-ம் ஆண்டு இந்த இடத்தை வாங்கினார். ஆனால் மாந்தோப்ப்புக்கான எந்த ஏற்பாடும் நடக்கவில்லை. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இந்த இடத்தில் வெடிமருந்து குடோன் அமைக்க அனுமதி கோரி, ஊராட்சி நிர்வாகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது.

அப்போதே இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அதை துளியும் கண்டுகொள்ளாமல் அனுமதி கொடுத்தது அரசு. அனுமதிக்காகவே இந்த ஆலை நிர்வாகம் பணத்தை வாரி இறைத்ததாகவும் சொல்லப்படுகிறது.



அலட்சியப்படுத்திய அரசு...

மக்கள் அஞ்சியபடியே, கடுமையான சிக்கல்களை இந்த ஆலை ஏற்படுத்தியது. ஆலை அமைக்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த பகுதியின் நிலத்தடி நீர் மாசடைந்து, விவசாயமும் பொய்த்துப் போனது. தாசில்தார் துவங்கி கலெக்டர் வரை பொதுமக்கள் புகார் கொடுக்காத இடமில்லை. இந்த ஊரின் பிரச்னையை யாரும் கண்டுகொள்ளவில்லை. கடந்த மாதம் கூட இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டிருக்கிறார்கள். ஆனால் பதிலில்லை. மக்கள் தன்னெழுச்சியாக திரளும் போதெல்லாம், கண் துடைப்புக்காக ஆய்வு நடத்தி, அதன் பின்னர் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது என்பது தொடர்கதையாகி விட்டது. இந்த சூழலில் தான் இந்த கொடூர விபத்து நடந்துள்ளது.

விவசாயம் பொய்த்துப்போனதால் வேலையிழந்த தொழிலாளர்கள் பலர், ஆபத்து தான் என தெரிந்திருந்தும் இந்த ஆலைக்கு வேலைக்கு செல்லும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். டி. முருங்கப்பட்டி மட்டுமல்லாது கொப்பம்பட்டி, செங்கட்டு, நாகநல்லூர், பாதர்பேட்டை, சேலம் மாவட்டம் செங்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட்’ முறையில் வேலை செய்து வருகிறார்கள்.



விபத்து ஏற்பட்ட நேரத்தில்...

சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது இந்த வெடிமருந்து ஆலை. கல்குவாரிகள், சுரங்கங்கள், ராட்சத பாறைகள் உடைப்பதற்கான வெடிமருந்துகள், டெட்டனேட்டர்கள் இங்கு தயாரிக்கப்பட்டு, உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்துள்ளது. வேதிப்பொருட்களை கொண்டு தான் இந்த வெடிமருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. மிக கவனமாக கையாள வேண்டும். வெப்பநிலை, உயர் அழுத்தம் என அனைத்திலும் மிக கவனமாய் இருக்க வேண்டும். கொஞ்சம் தவறினாலும் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும். அப்படி அஜாக்கிரதையால் நிகழ்ந்த விபத்து தான் இது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

நேற்று அதிகாலை வெடிமருந்து தயாரிப்பு பணி யூனிட் 2ல் நடந்து கொண்டு இருந்தது. இரவு தயாரிக்கப்பட்ட வெடிமருந்து கலவையை அடுத்த யூனிட்டுக்கு எடுத்துச்செல்வதற்காக காலை 7.20 மணி அளவில் 17 தொழிலாளர்கள் வந்தனர். வெடிமருந்துகளை கொண்டு செல்ல சரக்கு ஆட்டோவை கொண்டு வந்து நிறுத்தியபோது தான் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டிருக்கிறது.

பயங்கரமான சத்தத்துடன் நிகழ்ந்தது அந்த விபத்து. 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு விபத்தின் அதிர்வு, சத்தமும் உணரப்பட்டது. ஆலையின் ஒரு பகுதி வெடித்துச் சிதற ஆலை தீப்பற்றி புகை மண்டலமாக மாறியது அந்த இடம். ஆலையின் இரண்டுமாடி கட்டடம் முழுவதுமாக இடிந்து, வெடிவிபத்து ஏற்படுத்திய 20 அடி பள்ளத்தில் புதைந்தது. ஆலையின் ஒரு பகுதியில் நடந்த விபத்தினால், மற்ற பகுதியில் பணியாற்றிய தொழிலாளர்கள் என்ன நடந்தது என தெரியாமல் பதறியபடி வெளியேறினர்.

சிதறிய உடலும் கூட கிடைக்கவில்லை...

கொட்டும் மழை ஒரு பக்கம், வெடி விபத்தால் ஏற்பட்ட புகை மண்டலம் ஒரு பக்கம் என மீட்பு பணியை தாமதமாக்கியது. வெடித்துச் சிதறிய ஆலையில் பணியாற்றிய தொழிலாளார்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. கை, கால்கள் கொத்துக்கொத்தாக கிடந்தன. இரவு 9 மணி வரை இறந்தவர்கள் பட்டியலை உறுதி செய்யமுடியாமல் மாவட்ட நிர்வாகம் தடுமாறியது.

மறுபுறம் விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் சோகத்தில் செய்வதறியாமல் தவித்தனர். கொட்டும் மழையிலும் இறந்தவர்களின் உடலையாவது தரமாட்டார்களா என சோகத்துடன் காத்திருந்தனர். இரவு நேரமாகி விட்டதால் மீட்பு பணியை கைவிட்டார்கள். 3 உடல்கள் மட்டுமே சிதறிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 18 பேர் இந்த விபத்தில் இறந்ததாகவும், அனைவரது உடலும் சிதறியதால் யாருடைய உடலையும் மீட்க முடியவில்லை என சொல்லப்பட்டது.

குடும்பத்தில் ஒருவரை பலி கொடுத்த சோகத்தில் இருந்தவர்களும், உடலும் கிடைப்பது சிக்கல் தான் என்ற அறிவிப்பு இன்னும் சோகத்தில் ஆழ்த்தியது. விபத்தில் 11 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



அமைச்சர் மீது செருப்பு, கற்கள் வீச்சு...

விபத்து குறித்து தகவல் அறிந்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களை பார்த்த பொதுமக்கள் கொந்தளித்தனர். "எத்தனை முறை மனுக்கொடுத்தோம். ஒரு முறைகூட வந்து பார்க்கல. இப்போ எதுக்கு வந்தீங்க. செத்துபோனவங்க உடல் இருக்கா இல்லையான்னு பார்க்கவா?" என வாக்குவாதத்தில் ஈடுபட அங்கு பதற்றம் ஏற்பட்டது.

மக்களின் கோரிக்கையை அப்போதும் கூட மதிப்பளிக்காமல் இருக்க ஆவேசமடைந்த மக்கள், அமைச்சர் மீதும் அதிகாரிகள் மீதும் செருப்பு, கற்களை வீசினர். "தொழிலாளர்களின் உயிரை பறித்த வெடிமருந்து தொழிற்சாலையை இடித்து தரைமட்டமாக்க வேண்டும். பலமுறை மனு அளித்தும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த விபத்தில் இவ்வளவுபேர் பலியாகி உள்ளார்கள். உடனே தொழிற்சாலையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இனி இந்த பகுதியில் வெடிமருந்து தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது," என கோரினர்.

இனியாவது ஆலையை மூடுவாங்களா?

இதையடுத்தே இந்த தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நம்மிடம் பேசிய ஊர் மக்கள், "கடந்த 15 வருஷமா இந்த ஆலையே கூடாதுன்னுதான் போராடுகிறோம். ஆனால் பல அதிகாரிகள் பணம் வாங்கிக்கொண்டு ஆலைக்கு சாதகமாக செயல்படுறாங்க. இந்த அலட்சியம் தான் இப்படி ஒரு விபத்தை ஏற்படுத்தியிருக்கு. இந்த ஆலையில் வேலை செய்பவர்களும், பலியானவர்களும் படிக்காதவர்கள். இவர்களை பணியில் அமர்த்தி, உயர் வேதிப் பொருட்களை கையாள வைத்துள்ளார்கள். இந்த விபத்தையும் எதையாவது சொல்லி மூடி மறைத்துவிட்டு, மீண்டும் இந்த ஆலையை இயக்கினால் இந்த பகுதியே நாசமாகும்," என்றார்கள்.

அரசு அலட்சியத்துக்கு கொடுத்த விலை 18 உயிர்கள். இனியாவது மக்களைப்பற்றியும், மக்கள் நலனைப்பற்றியும் கவலைப்படுமா அரசு?

சி.ய.ஆனந்தகுமார்,

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...