Monday, May 15, 2017

பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் ஜூலையில் முடிகிறது ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதில் பா.ஜனதா தீவிரம்

அடுத்து நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுக்க பா.ஜனதாவும், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 
 பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் ஜூலையில் முடிகிறது
ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதில் பா.ஜனதா தீவிரம்
 
 
புதுடெல்லி,

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் ஜூலை மாதம் முடிவடைகிறது. இதையொட்டி, அடுத்து நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுக்க பா.ஜனதாவும், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

பரிசீலனை தொடங்கியது

ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவி ஏற்று வருகிற ஜூலை மாதம் 25-ந்தேதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை பரிசீலிக்கும் பணிகள் இப்போதே தொடங்கி விட்டன.

பா.ஜனதாவில் பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய மந்திரி வெங்கையா நாயுடு மற்றும் ஜார்கண்ட் மாநில கவர்னர் திரவுபதி மர்மு போன்ற மூத்த தலைவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன.

இந்த மூவரில் ஒருவரை பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும் கலந்து பேசி முடிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சோனியாவுடன் சந்திப்பு

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும், பா.ஜனதாவுக்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டி வலுவான வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், இடது சாரி கட்சிகளின் முக்கிய தலைவர்களுடன் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.

இதேபோல் மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை இந்த வாரத்தில் சோனியா காந்தி சந்தித்து பேசுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் கோபால கிருஷ்ண காந்தி நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருமுனை போட்டி

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால், தேசிய ஜனநாயக கூட்டணி- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் என இரு முனை போட்டி மட்டுமே நிலவும்.

ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பாராளுமன்ற, டெல்லி மேல்-சபை எம்.பி.க்கள் மற்றும் மாநில சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பார்கள். மாநில மக்கள் தொகையின் அடிப்படையில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுகளுக்கு மதிப்பு உண்டு.

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் உத்தரபிரதேசத்திலும், ஜார்கண்டிலும் பா.ஜனதாவுக்கு அமோக வெற்றி கிடைத்தது. இதனால் பா.ஜனதாவுக்கு ஜனாதிபதி தேர்தலில் அதிக மதிப்பு கொண்ட ஓட்டுகள் கிடைக்கும்.

ஓட்டு மதிப்பு
தற்போது பாராளுமன்றத்தையும், டெல்லி மேல்-சபையையும் சேர்த்து மொத்தம் 776 எம்.பி.க்களும், அனைத்து மாநில சட்டசபைகளிலும் 4,120 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இவர்களின் மொத்த ஓட்டு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 882 ஆகும். இதில் 5 லட்சத்து 49 ஆயிரத்து 422 ஓட்டுகளை ஒரு வேட்பாளர் பெற்று விட்டாலே அவர் ஜனாதிபதி ஆகி விடுவார்.

அந்த அடிப்படையில் பார்த்தால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தற்போது 410 எம்.பி.க்கள் மற்றும் 1,691 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மூலம் 5 லட்சத்து 32 ஆயிரத்து 19 ஓட்டுகள் கிடைக்கும். எனவே கூடுதலாக 17 ஆயிரத்து 422 ஓட்டுகள் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு தேவை.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவு

அண்மையில் ஆந்திர மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி டெல்லியில் பிரதமரை சந்தித்து பேசினார். அப்போது, ஜனாதிபதி தேர்தலில் தனது கட்சி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரிக்கும் என்று தெரிவித்தார். இதனால் அவருடைய கட்சி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுகளும் கூடுதலாக கிடைக்கும்.

இது தவிர, தமிழ்நாட்டில் 2 அணிகளாக உள்ள அ.தி.மு.க. மற்றும் ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் ஆகியவையும் பா.ஜனதா நிறுத்தும் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டை மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் 6 லட்சத்துக்கும் அதிக மதிப்புள்ள ஓட்டுகளை பெறும் வாய்ப்பு உள்ளது. அதே நேரம் எதிர்க்கட்சிகள் பொதுவான வேட்பாளரை நிறுத்தினாலும் கூட 3 லட்சத்து 90 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.

தேர்தலுக்கு பிறகு ராஜினாமா

உத்தரபிரதேச முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்ட யோகி ஆதித்யநாத் மற்றும் கோவா முதல்-மந்திரி பதவியாக ஏற்றுக்கொண்ட மனோகர் பாரிக்கர் உத்தரபிரதேச துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் தற்போது எம்.பி.க்களாக உள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு எம்.பி.யின் ஓட்டும் மிகவும் மதிப்பு வாய்ந்தது என்பதால் இதுவரை இந்த மூவரும் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரே இவர்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்து மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார்கள்.

மார்ச் மாத மத்தியில் மாநில முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரி பதவிகளை ஏற்றுக்கொண்ட இவர்கள் அடுத்த 6 மாதத்துக்குள் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது. 

No comments:

Post a Comment

Minister says no Pongal gift due to financial crisis

Minister says no Pongal gift due to financial crisis  TIMES NEWS NETWORK 10.01.2025 Chennai : Chief minister M K Stalin on Thursday launched...