Monday, May 15, 2017

தலையங்கம் ரெயில்வேயில் சலுகைகளும், பாஸ்களும்

பிரதமர் நரேந்திர மோடி ஒருமுறை பேசும்போது, இந்தியாவின் வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும், ரெயில்வே துறையை முதுகெலும்பாக மாற்றுவது எனது கனவு என்றார்.

மே 15, 03:00 AM

பிரதமர் நரேந்திர மோடி ஒருமுறை பேசும்போது, இந்தியாவின் வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும், ரெயில்வே துறையை முதுகெலும்பாக மாற்றுவது எனது கனவு என்றார். அந்தவகையில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் மக்களின் அன்றாட வாழ்வில் ரெயில்வேயின் பங்கு மிகமுக்கியமானதாகும். இந்திய ரெயில்வேயில் 12,617 ரெயில்கள் தினமும் 2 கோடியே 30 லட்சம் பயணிகளை ஏற்றிக்கொண்டு, 7,172 ரெயில் நிலையங்கள் வழியாக ஓடிக்கொண்டிருக்கின்றன. பயணிகள் ரெயில்கள் மட்டுமல்லாமல், 7,421 சரக்கு ரெயில்களும் தினமும் 30 லட்சம் டன் சரக்குகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றன.

பயணிகள் ரெயிலை பொறுத்தமட்டில், பயணிகளிடமிருந்து வசூலிக்கும் கட்டணம், அவர்களுக்கான செலவை ஈடுகட்டும்வகையில் இல்லை. அந்தளவுக்கு ரெயில்வே கட்டணம் குறைவாக இருக்கிறது என்று ஒரு காரணத்தை சொன்னாலும், ரெயில்வேயில் ஏராளமான சலுகைகள், இலவசங்கள் இருக்கின்றன. ரெயில்வேயில் பணியாற்றுபவர்கள், ஓய்வுபெற்றவர்கள் மட்டுமல்லாமல், இலவச பாஸ்கள் கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியல் பெரிய பட்டியலாகவே இருக்கிறது.
ஒருபுறம் இலவச பாஸ்கள், மறுபுறம் கட்டண சலுகைகள் என்று ரெயில் பயணிகள் பெரும்பாலானோர் இலவச பாஸ்களையும், இலவச கட்டண சலுகைகளையும் வைத்துக்கொண்டுதான் பயணிக்கிறார்கள். தற்போது ரெயில்வேயை பொறுத்தமட்டில், ரெயில்களை இயக்குவதற்கான நஷ்டம் ரூ.34 ஆயிரம் கோடி அளவுக்கு இருப்பதால், கட்டண சலுகைகள் கொடுக்கும் பல்வேறு இனங்களில் தற்போது வழங்கும் சலுகைகளை குறைக்கவும், அதுபோல யாருக்காக கட்டண சலுகைகளை வழங்குகிறார்களோ, அவர்களுக்கான துறையே அந்த சலுகை தொகையை வழங்கவேண்டும் என்று கோரவும் முடிவெடுத்துள்ளது. இந்த முயற்சியின் ஒருபகுதியாக 53 கட்டண சலுகைகளில் இவ்வாறு நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்போது வழங்கும் ரூ.1,600 கோடி மதிப்பிலான செலவில் பெரும்பகுதியை குறைக்கத்திட்டமிட்டுள்ளது.

தற்போது ரெயில்வேயில் அனைத்து வகுப்புகளிலும் அடிப்படை கட்டணத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 30 சதவீத கட்டணச்சலுகையும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீத கட்டணச்சலுகையும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே பயணிகள் டிக்கெட் கட்டணம் மிகக்குறைவாக இருக்கும் நிலையில், ஒவ்வொரு டிக்கெட்டிலும் ஒரு ரூபாய் செலவில், 57 காசுகள்தான் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மீதி 43 காசுகள் அரசாங்கம்தான் உதவித்தொகையாக வழங்கவேண்டியதிருக்கிறது. இதுபோல, புறநகர் ரெயில்களில் ஒரு ரூபாய் செலவில், 37 காசுகள்தான் கட்டணம் மூலமாக வசூலிக்கப்படுகிறது. இந்தநிலையில், மூத்த குடிமக்களுக்கான சலுகையை 60 வயதிலிருந்து 70 வயதாக உயர்த்துவது குறித்து அரசு பரிசீலனை செய்துகொண்டிருக்கிறது. நிச்சயமாக ரெயில்வே துறை லாபகரமாக இயங்கவேண்டுமென்றால், இதுபோன்ற திட்டங்கள் வரவேற்புக்குரியவைத்தான். ஆனால், தேவையானவர்களுக்கு குறிப்பாக உடல் ஊனமுற்றோர், போர் விதவைகள் போன்ற சில இனங்களில் கண்டிப்பாக கட்டணச்சலுகைகள் வழங்கவேண்டியது அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்க முடியாது. அந்தவகையில், அந்த துறைகள் அந்த செலவை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால், பொதுவாக சலுகைகளில் கவனம் காட்டும் ரெயில்வே துறை, இலவச பாஸ்களிலும் தனது கவனத்தை செலுத்தவேண்டும். மொத்தத்தில், இலவச பாஸ்களை அடியோடு ஒழித்துவிடலாம். ரெயில்வே துறையினருக்கும், ஓய்வுபெற்றவர்களுக்கும் சலுகைகள், இலவச பாஸ்கள் வழங்கவேண்டுமென்றால், ஓரளவுக்கு அவர்களுக்கு அதற்குரிய அலவன்சுகளை வழங்கலாம். இவ்வாறு வழங்கும் இலவச பாஸ்கள் மற்றும் சலுகைகளை பெருமளவில் குறைத்தால், நிச்சயமாக டிக்கெட் எடுத்து பயணம் செய்பவர்களுக்கு ரிசர்வே‌ஷன் இல்லை, காத்திருப்போர் பட்டியலில் இருக்க சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் நிச்சயம் இருக்காது.






























































No comments:

Post a Comment

Minister says no Pongal gift due to financial crisis

Minister says no Pongal gift due to financial crisis  TIMES NEWS NETWORK 10.01.2025 Chennai : Chief minister M K Stalin on Thursday launched...