Tuesday, June 20, 2017

5,000 டாக்டர்கள் அங்கீகாரம் செல்லுமா : கவுன்சில் பதவி சண்டையால் சிக்கல்

பதிவு செய்த நாள்20ஜூன்
2017
02:05

மதுரை: தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., முடித்த ஐந்தாயிரம் பேரின் அங்கீகார சான்றிதழில் மருத்துவ கவுன்சில் தலைவர் செந்திலுக்கு பதிலாக உறுப்பினர் பாலகிருஷ்ணன் கையெழுத்திட்டுள்ளதால், அவற்றின் செல்லுபடித் தன்மை கேள்விக் குறியாகியுள்ளது.

மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த, டாக்டர்கள் மட்டுமே பணி செய்ய அங்கீகாரம் பெற்றவர்கள். மாநிலத்தில் உள்ள அரசு, தனியார் டாக்டர்களில் ஒரு லட்சம் பேர் கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர்.

கவுன்சில் உறுப்பினர்களுக்கு இடையே நடந்த பதவி சண்டையில், சில மாதங்களுக்கு முன், தலைவர் பதவியிலிருந்து, டாக்டர் செந்தில் நீக்கப்பட்டார். இது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், உறுப்பினர்கள் சிலர் டாக்டர் பாலகிருஷ்ணனை தலைவராக தேர்வு செய்தனர்.
அவர் கடந்த மாதம் முதல், ஐந்தாயிரம் டாக்டர்களின் அங்கீகார சான்றிதழில் கையெழுத்திட்டுள்ளார். ஆனால் செந்தில் தான் கவுன்சில் தலைவர் என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது. இதனால், டாக்டர்களின் அங்கீகார சான்றிதழ்கள் செல்லுமா என கேள்வி எழுந்துள்ளது. திரும்ப பெற வேண்டும் 

டாக்டர் செந்தில் கூறியதாவது: கவுன்சில் தலைவர் உட்பட டாக்டர்களால் தேர்வு செய்யப்பட்ட ஏழு உறுப்பினர்களின் பதவிகாலம்,
ஜூன் 19ல் முடிவடைந்தது. வரும் தேர்தலை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் நடத்த வேண்டும். இது குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது.
நான் பதவி வகித்த ஓராண்டில், உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாததால், சட்ட திருத்தம், தவறு செய்த டாக்டர்கள், மருத்துவமனைகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை போன்றவற்றில் கவனம் செலுத்த முடியவில்லை. இருப்பினும், 'ஆன்லைன்' பதிவு முறை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

எதிர்காலத்தில், உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டாக்டர் பாலகிருஷ்ணன் கையெழுத்திட்ட
சான்றிதழ்களை, சட்ட ஆலோசனை பெற்று திரும்ப பெற வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024