Thursday, June 1, 2017

தி சென்னை சில்க்ஸில் பயங்கர தீ: தீயை அணைக்க நாள் முழுதும் போராட்டம்














சென்னை: சென்னை, தி.நகரில் உள்ள, பிரபல ஜவுளி நிறுவனமான, சென்னை சிலக்ஸ் கட்டடத்தில், நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.



தீ மளமளவென பரவியதில், அக்கட்டடத்தில் உள்ள ஏழு மாடிகளும் பற்றி எரிந்தன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள துணிகள், தங்க நகைகள், தீயில் கருகின. கட்டுக்கடங்காத தீயை கட்டுப்படுத்த, தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் நாள் முழுவதும் போராடினர்.

சென்னை, தி.நகர், உஸ்மான் சாலையில், ஏழு மாடிகள் கொண்ட பிரம்மாண்ட கட்டடத்தில், குமரன் தங்க மாளிகை என்ற நகை கடையும், சென்னை சில்க்ஸ் என்ற ஜவுளி கடையும் செயல்பட்டு வருகின்றன.இரண்டு கடைகளுக்கும், தனித்தனி நுழைவு வாயில்கள் உள்ளன. ஒரே கட்டடத்தில், இரண்டு கடைகள் இருந்த போதிலும், குமரன் தங்க மாளிகைக்கு என, தடுப்பு அமைக்கப்பட்டு, இரண்டு மாடிகளில் நகை கடை செயல்பட்டு வந்தது.

எனினும், வாடிக்கையாளர்கள், இரண்டு கடைகளுக்கும் செல்வதற்கு ஏற்ப, உட்பகுதியில் வாயில்கள் உள்ளன. அடித்தளத்தில் தேவையற்ற, மரச்சாமான்கள், 'ஜெனரேட்டர்' மற்றும் டீசல் பேரல்கள் இருந்துள்ளன.

மொட்டை மாடியில், கல்நார் கூரையால் வேயப்பட்ட, 'கேன்டீன்' உள்ளது. அங்கு, தங்கம் மற்றும் ஜவுளி கடை ஊழியர்களுக்கு, காலை மற்றும் மதிய உணவு தயாரிக்க, 14 பேர் தங்கி வேலை பார்த்து வந்தனர். அவர்களின் வசதிக்காக, சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களும் இருந்தன. இரவு காவலாளிகளும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை, 4:00 மணியளவில், குமரன் தங்க மாளிகை கடைக்கு கீழே, அடித்தளத்தில் திடீரென தீ பற்றி எரிந்து உள்ளது. தீ மளமளவென பரவியதால், தங்கம் மற்றும் ஜவுளி கடை என, ஏழு மாடிகளும் கொளுந்துவிட்டு எரிந்தன.இதனால், மொட்டை மாடியில் உள்ள, கேன்டீனில் இருந்தோர், உயிர் பயத்தில் அலறினர். செய்வதறியாது தவித்த, இரவு காவலாளி, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளார். உடனடியாக, தீயணைப்பு வீரர்கள், தி.நகர், அசோக் நகர் என, நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும், 'ஸ்கை லிப்ட்' எனப்படும் இயந்திர ஏணியுடன் கூடிய வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அப்போது, ஏழு மாடிகளிலும் இருந்த, பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், ஜவுளிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சாம்பலாகி கொண்டு இருப்பதை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர்.பின், ஆறு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

தகவல் அறிந்து, சென்னை கலெக்டர் அன்புச்செல்வன், தீயணைப்பு துறை இயக்குனர், ஜார்ஜ், சென்னை போலீஸ் கமிஷனர், விஸ்வநாதன், கூடுதல் கமிஷனர், சங்கர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின், தி.நகர் உஸ்மான் சாலை முழுவதும், போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அங்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தின் அருகே உள்ள கட்டடங்கள் மற்றும் வீடுகளில் இருந்தோர், உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

அதன்பின், தீயணைப்பு வீரர்கள், போலீசார், மெட்ரோ ரயில் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். புகை மூட்டம் அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின், ஆக்சிஜன் உதவியுடன், தீயை அணைக்க முயன்றனர்; அதுவும் பலன் அளிக்கவில்லை.பின், அதிநவீன இயந்திரம் வாயிலாக, கட்டடத்தின் பின்பக்க சுவரில் துளையிட்டு, தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. 'ஸ்கை லிப்ட்' வாகனம் வாயிலாக, கட்டடத்தின் பக்கவாட்டு பகுதிகளில், பல இடங்களில் துளையிடப்பட்டு, அதன் வழியாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. அப்போதும், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

பின், போலீசார், தண்ணீரை அதிவேகமாக பீய்ச்சி அடிக்க கூடிய, 'வஜ்ரா' வாகனம் வாயிலாக, தீயை அணைக்க முயன்றனர். அப்போதும், தீ கொளுந்துவிட்டு எரிந்தபடி இருந்தது. கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் அபாயமும் ஏற்பட்டது. மொட்டை மாடி கேன்டீனில் இருந்த சிலிண்டர்களும் வெடித்து சிதறின.

இதனால், தீயணைப்பு வீரர்கள், கட்டடத்தின் மேல் பகுதியிலும், தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மற்ற கட்டடங்களிலும் தீ பரவாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால், தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் கடுமையாக போராடினர்.தி.நகர் முழுவதும், புகை மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இச்சம்பவம் குறித்து, மேற்கு மாம்பலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தீயணைப்பு வீரர்கள் திணறல்

* தீயணைப்பு பணியில், அதிநவீன வசதி கொண்ட, இரு ஸ்கை லிப்ட் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன

* ஐம்பது தீயணைப்பு வாகனங்களுடன், 200 தீயணைப்பு வீரர்கள், தீயுடன் போராடினர். அவர்களுடன், போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் என, ஏராளமானோர் இருந்தனர்

* தீயணைப்பு வீரர்களுக்கு, அதிநவீன வசதிகள்

கொண்ட உபகரணங்கள் இல்லை. போதிய கவச உடைகள் கூட இல்லாததால், தீயணைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக, தி.நக ரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அங்குள்ள மேம்பாலத்திற் கும், 'சீல்' வைக்கப்பட்டு உள்ளது சென்னை குடிநீர் வாரிய லாரிகளில் இருந்த தண்ணீர், தீ விபத்துக்கு பயன்படுத்தப்பட்ட தால், தி.நகரில் குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது

* தீ விபத்துக்கான காரணம் தெரியாமல், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் திணறி வருகின் றனர். கட்டடத்தின் அடித்தளத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, டீசல் பேரல்கள் தீ பற்றி, இந்த விபத்து நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது

* இரவு முழுவதும் தீ அணைப்பு பணிகளை மேற்கொள்ள, உஸ்மான் சாலையில், கூடுதல் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. மின் தடை நேர்ந்தால் சமாளிக்க, ஜெனரேட்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன

* புகை மூட்டம் காரணமாக, மூச்சுத் திணறல் ஏற்பட்டு வருவதால், அருகில் வசிக்கும் வீடுகளில் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதி யோர்கள், உறவினர் வீடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

தாமதமே காரணம்!

தீ விபத்து பற்றி தெரிய வந்ததும், காலை, 4:00 மணிக்கெல்லாம், தீயணைப்பு துறைக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 15 நிமிடங்களில், தீயணைப்பு படை வீரர்கள் வந்து விட்டனர். 'பேஸ் மென்ட்' எனப்படும் அடித்தளத்தில் தான், தீ பிடித்திருப்பதாக, அவர்களுக்கு தெரிவிக்கப் பட்டது.ஆனால், தீ எங்கிருந்து வருகிறது என்பதை கண்டுபிடித்த பிறகே, அணைப்புநடவடிக்கையில் இறங்க முடியும் என, காலம் கடத்தி விட்டனர். எங்கிருந்து தீ வருகிறது என, அவர்கள் ஆராய்வதற்கே, ஒன்றரை மணி நேரம் போய் விட்டது.

அதற்குள் தீ பரவத் துவங்கியதை பார்த்ததும், அணைக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால், அவர்கள் கொண்டு வந்த வண்டியில் போதுமான தண்ணீர் இல்லை. வெளியிடங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரலாம் என்றால், டீசல் இல்லை என இழுத்தடித்துள்ளனர்.

இதற்கிடையில், சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அவர் முதல் தளம் வரை சென்று பார்த்த பிறகு தான், போலீஸ் படையை வரவழைத்துள்ளார்.
அதன் பிறகே, தீயணைப்பு நடவடிக்கை துரிதமாகி இருக்கிறது.

தகவல் கிடைத்து, சம்பவ இடத்திற்கு வந்த நேரத்திலேயே, தீயை அணைக்க முயன்றிருந்தால், இந்தளவுக்கு போராட வேண்டிய அவசியம், தீயணைப்பு படையினருக்கு ஏற்பட்டிருக்காது என
கூறப்படுகிறது.

தீ தடுப்புக்கு அடுக்கு மாடிகளில்இருக்க வேண்டிய வசதிகள் என்ன

தி.நகரில் உள்ள, சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, அடுக்குமாடி கட்டடங்களில் இருக்க வேண்டிய, பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கேள்வி எழுந்துள்ளது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வின் விதிமுறைகளின்படி கட்டடங்களில் கடைபிடிக்க வேண்டிய தீ தடுப்பு வசதிகள்:

* தீ விபத்து ஏற்பட்டால், மீட்புக்கு தீயணைப்புத் துறையின் லேடர் வாகனம் வந்து செல்லும் அளவுக்கு, பக்கவாட்டில் காலி இடம் இருக்க வேண்டும்

* அவசர காலங்களில், கட்டடத்தில் உள்ளோர் உடனே வெளியேற, வெளிப்புறமாக தனி படிக்கட்டுகள் அமைக்கப்பட வேண்டும்

* கட்டடத்தின் மேல் தளத்தில், தீ விபத்தின் போது பயன்படுத்த, பிரத்யேகமான தண்ணீர் தொட்டி அமைத்து, போதிய அளவு நீர் இருப்பு வைக்க வேண்டும்

* ஒவ்வொரு தளத்திலும், தீ விபத்தின் போது தண்ணீரை பீய்ச்சி அடிப்பதற்கான, 'ஹோஸ்' குழாய் வசதி இருக்க வேண்டும்

* அறைகள், நடைபாதைகளில் தீ விபத்து ஏற்பட் டால், அதை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைப்பதற் கான, 'ஸ்பிரிங்க்சர்'கள் அமைப்பது அவசியம்

* அடுக்குமாடி கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் உடனே எச்சரிக்கும், புகை கண்டுபிடிப்பான் கருவி அறைகள், நடைபாதைகளில் அமைக்க வேண்டும்

* கட்டடத்தின் உயரம், 45 மீட்டருக்கு மேல் சென் றால், அவசர கால மீட்பு பணிகளுக்கு கட்டடத்தின் மேல் பகுதியில், 'ஹெலிபேட்' அமைக்கலாம்.

சி.எம்.டி.ஏ.,வின் முழுமை திட்ட அடிப்படையிலான வளர்ச்சி விதிகளில், இந்த பாதுகாப்பு அம்சங்கள் வலியுறுத்தப்பட்டு உள்ளன.

மீட்பு பணிகள் மும்முரம்

வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர், உதயகுமார் கூறுகையில், ''இந்த தீ விபத்தில், உயிர் இழப்புகள் எதுவும் இல்லை. தீயை முழுவதும் கட்டுக்குள் கொண்டு வர, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்,'' என்றார்.

மருத்துவ முகாம்

நிதியமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது: இந்த கட்டடத்தில், தீ தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு இருந்தனவா, விதிமீறல் கட்டடமா என்பது குறித்து, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. இப்பகுதி வாசிகளுக்கு, மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தீ முழுவதும் கட்டுப்படுத் தப்பட்ட பின், கட்டடம் பயன்பாட்டிற்கு உகந்ததா என்பது பற்றி, ஆய்வு செய்த பின்னரே, உரிமை யாளரிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தீயணைப்புத்துறை மீது சென்னை சில்க்ஸ் புகார்

'தீயணைப்புத்துறையின் அலட்சியத்தால், கட்டடத் தின் கீழ் தளத்தில் ஏற்பட்ட தீ, மற்ற தளங்களுக்கும் பரவி, பெரிய விபத்தானது' என, சென்னை சில்க்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர், மாணிக்கம் கூறியதாவது:கட்டடத்தின்

அடித்தளத்தில், பரிசு பொருட்கள் இருப்பு வைக்கும் இடத்தின் அருகே, அதிகாலை, 3:45 மணிக்கு புகை வர ஆரம்பித்தது. தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தோம்; 4:00 மணிக்கு தீயணைப்பு வாகனங்கள் வந்தன. புகை அதிகம் வந்த, கட்டட அடித்தளத்தை காண்பித்தோம்.

தண்ணீர் அடிக்காமல், 'தீ எரியும் இடத்தை காட்டுங் கள்; அங்கு தான் தண்ணீர் அடிப்போம்' என, தீயணைப்பு வீரர்கள் கூறினர்.வண்டியில், தண்ணீர் குறைவு; டீசல் பற்றாக்குறை; நான்கு ஆக்சிஜன் சிலிண்டர்களில் ஒன்று மட்டுமே வேலை செய்தது போன்ற, ஒருங்கிணைப்பு இல்லாத தால், மீட்பு பணிகள் தாமதமாயின.

காலை, 6:00 மணிக்கு தான், ஜவுளிகள் இருக்கும் இடத்துக்கு, தீ பரவியது. அப்போதும், தண்ணீரை அதிகம் பீய்ச்சி அடிக்காமல், தீயணைப்பு வீரர்கள் அலட்சியம் காட்டியதால், கட்டடத்தின் அடுத்தடுத்த தளங்களுக்கும் தீ பரவியது. பகல், 12:00 மணிக்கு, போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன், நேரில் வந்து ஆய்வு செய்தார். அவரிடம், தீயணைப்புத்துறை யின் அலட்சிய போக்கு குறித்து புகார் செய்தோம்.

அவர், மற்ற அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு களை பிறப்பித்த பிறகே, அதிக எண்ணிக்கை யில் தீயணைப்பு வாகனங்களும், வீரர்களும் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டன.ஆரம்ப நிலையிலேயே கட்டுப் படுத்தி இருக்க வேண்டிய தீ, பிற இடங்களுக் கும் பரவ தீயணைப்புத்துறையின் அலட்சியமே காரணம். அவர்களின் செயல்பாடு வருத்தம் அளிக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புகையால் குழந்தைகளுக்கு ஆபத்து: அலட்சியம் வேண்டாம்

''புகையால் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம்,'' என, தமிழக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர், டாக்டர் இளங்கோ கூறினார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:

சென்னையில், ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தால், அதிக புகை வெளியேறுகிறது. நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடையில் தீ விபத்து நடந்திருப்பதால், வேதிபொருட்கள் மற்றும் நச்சு வாயு, 5 கி.மீ., வரை பரவி இருக்கும்.இதை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு, மூச்சு திணறல், நுரையீரல் பாதிப்பு, அடிக்கடி சளி தொல்லை, போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பெரியவர்களுக்கு தலைவலி, மயக்கம், கண் எரிச்சல், காது பிரச்னை, இருமல் போன்றவை உடனே வரலாம். நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா, ஒவ்வாமை, சளியுடன் ரத்தம் வரு தல் போன்ற நீண்ட கால பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.இதுபோன்ற பாதிப் புள்ளோர், உடனே டாக்டரை அணுகி, உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு டாக்டர் இளங்கோ கூறினார்.

காற்று மாசு ஆய்வு

புகையால் ஏற்பட்ட காற்று மாசு அளவிடும் பணியை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டது.இதுகுறித்து, வாரிய அதிகாரி கள் கூறுகையில், 'நடமாடும் காற்று தர கண் காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், அளவிடப்பட்ட காற்று மாசு குறித்த ஆய்வறிக்கை, இன்று வெளியிடப்படும்' என்றனர்.

மீட்பு பணிகள் மும்முரம்

வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர், உதயகுமார் கூறுகையில், ''இந்த தீ விபத்தில், உயிர் இழப்புகள் எதுவும் இல்லை. தீயை முழுவதும் கட்டுக்குள் கொண்டு வர, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன,'' என்றார்.

சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் கூறிய தாவது:பொது மக்கள் யாரும், இந்த பகுதிக்கு வர வேண்டாம். தி.நகர்வாசிகள், எவ்வித அச்சமோ, பயமோ கொள்ள வேண்டாம். கட்டடம் இடிந்து விழாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

2,500 கட்டடங்களில் தீயணைப்பு வசதி இல்லை

சென்னையில் தற்போது, 2,500 கட்டடங்களுக்கு மேல், 'மக்கள் பயன்படுத்தலாம்' என்ற, தீயணைப்புத் துறையின் உரிமம் இன்றி பயன் பாட்டில் உள்ளது தெரிய வந்துள்ளது. நகர மைப்பு சட்டப்படி, மூன்று தளங்களுக்கு மேலான கட்டடங்களுக்கு, திட்ட அனுமதி வழங்கும்போது, வரைபட நிலையிலேயே, தீ விபத்து கால மீட்பு பணிக்கான இட வசதி உள் ளதை உறுதி செய்ய வேண்டும்.கட்டி முடிக் கப்படும் நிலையில், கட்டடத்தின் ஒவ்வொரு தளத்திலும், தீ தடுப்பு வசதிகள் இருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே, அந்த கட்டடத்தை தீயணைப்புத் துறை ஆய்வு செய்து, மக்கள் பயன்பாட்டுக் கான உரிமம் வழங்கும்.இதன்படி முறையான தீ தடுப்பு வசதிகள், விதிமுறைகள் பின்பற்றா ததால், 2,500 கட்டடங்களுக்கு மக்கள் பயன் பாட்டுக்கான உரிமம் வழங்கப்பட வில்லை.

'இந்த கட்டடங்களை, மக்கள் பயன்படுத்த ஏன் தடை விதிக்கக் கூடாது; ஏன், 'சீல்' வைக்கக் கூடாது' என, விளக்கம் கேட்டு தீயணைப்புத் துறையும், சி.எம்.டி.ஏ.,வும் நோட்டீஸ் அனுப்பி யுள்ளன. ஆனால், அதோடு நடவடிக்கை முடங்கி விட்டது.

இது குறித்து, தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபல தனியார் வணிக வளாகத்தில், 2008ல், தீ விபத்து ஏற்பட்டு, இரண்டு ஊழியர்கள் உயிரி ழந்தனர். இதையடுத்து, இங்குள்ள கட்டடங் களின் பாதுகாப்பு குறித்து, அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறோம்.ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை பகுதிகளில் உள்ள, 90 சதவீத வணிக வளாகங்களில், தீயணைப்பு வசதிகள் இல்லாதது, ஆய்வுகளில் உறுதியானது. நகர் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தீயணைப்புத் துறையின் உரிமம் பெறாமல், 2,500 கட்டடங்கள், மக்கள் பயன்பாட்டில் உள்ளன.

எந்த பகுதிகள்?

இதில், தி.நகர், ஜார்ஜ் டவுன், மயிலாப்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, பிரபல வணிக வளாகங்கள், பிரதானமாக உள் ளன. இந்த கட்டடங்களில், ஸ்மோக் டிடெக்டர், அனைத்து தளங்களிலும் தீயணைப்புக்காக தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் குழாய் வசதிகள் அமைத்தல், அவசர கால வழிகளை ஏற்படுத்த வும் வுறுத்தப்பட்டுஉள்ளது.சி.எம்.டி.ஏ.,வும், மாநகராட்சி நிர்வாகங்களும் தான், இந்த கட்ட டங்கள் மீது, சீல் வைப்பு உள்ளிட்ட நடவடிக் கைகள் எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Minister says no Pongal gift due to financial crisis

Minister says no Pongal gift due to financial crisis  TIMES NEWS NETWORK 10.01.2025 Chennai : Chief minister M K Stalin on Thursday launched...