Thursday, June 1, 2017

கட்டுடையும் பிம்பங்கள்!

By பெ. சிதம்பரநாதன்  |   Published on : 01st June 2017 01:44 AM  |
chidabaranathan
Ads by Kiosked
சாதாரண மனிதன் சந்தர்ப்பவசத்தால் அசாதாரணமான மனிதனாக மாறுகிறான். செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.க்குச் சிறைத் தண்டனை வழங்கிய திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையின் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தது உண்மை. அந்த அதிருப்தியாளர்களில் ஓர் அதிருப்தியாளர் மட்டும் வித்தியாசமானார். பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் துப்பாக்கி எடுத்தார். ரயில் பெட்டிக்குள் உட்கார்ந்திருக்கிற ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றார்.
யார் சுட்டார் என்று திரும்பிப் பார்க்கும் முன்பே, சுட்டவர் தன்னையும் சுட்டுக் கொண்டு மாண்டார். அவர் 20 வயது இளைஞன் வாஞ்சிநாதன்.
இதை உடனுக்குடன் அறிந்த நெல்லை மக்கள், ஐயோ... ஆஷ் துரையைக் கொன்றுவிட்டானே என்று அதிர்ச்சியடையவில்லை. அடடா, இவன் தற்கொலை செய்து கொண்டானே என்றுதான் அதிர்ச்சியடைந்தார்கள்.
இந்தச் சம்பவத்தின் மூலமாக ஒன்று புரிகிறது. ஒரு சராசரி மனிதன் அசராசரி ஆகின்றான். ஒரு சாதாரண மனிதன் அசாதாரணமானவன் ஆகின்றான். சமூக தளத்தில் இவ்வாறு இப்படி வீசிய அலைதான் ஆஷ் துரை வழங்கிய தண்டனைக்கு எதிர்வினையாகியது. இந்த எதிர்வினைதான் வெகுஜன அபிப்ராயம்.
எதிர்வினை ஏற்படுத்தாத ஒரு சமூகம், அநேகமாகப் பிரக்ஞையற்றுப் போன சமூகம்தான். அந்த மக்களை நடமாடும் பிணங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
சமுதாய வளர்ச்சியில் மனிதன் ஒவ்வொரு மைல் கல்லாகத் தாண்டித் தாண்டித் தன் தொடர் பயணத்தை மேற்கொண்டிருக்கிறான். மொழி அவனுக்குக் கிடைத்த ஒரு மிக உன்னதமானப் பரிசு.
அதேபோல, காட்டுமிராண்டியாகத் தொடங்கிய அவன் வாழ்க்கையில் கால மைல் கற்கள் பலவற்றைக் கடந்து கடந்து, அவன் உருவாக்கிய ரத்த உறவுகள் மேம்பாடு பெற்று நாகரிகமடைந்தன. விலங்குகளுக்கு மத்தியில் அந்த மேம்பாடு இல்லை. ஈன்ற குட்டியே தாயைப் புணர்கின்ற ஆதி வாழ்க்கையே தொடர்கிறது.
ஆனால், மனிதனைப் பிராணியியல் வல்லுநர்கள் என்னதான் விலங்காகப் பிரித்து இனம் காட்டினாலும், இந்த மனித விலங்கு மட்டுமே அந்த மூல விலங்குகளிலிருந்து மாறுபட்டுத் தாயை தரிசிக்கின்றவனானான். சகோதரியைத் தனது சல்லாபத்துக்கு உள்ளாக்காமல் விட்டு விலகினான்.
மேம்பாடு பெற்ற இந்த நாகரிக உறவை ஒரு தேசம் இன்னொரு தேசத்திற்குக் கற்றுத் தரவில்லை. எல்லா தேசங்களிலும் இந்த உறவு இயற்கையாகவே வளர்ந்துள்ளது. இந்த மலர்ச்சியைத்தான் மனித நாகரிகத்தின் மகோன்னதம் என்கிறோம். பறவை, விலங்குகளுக்கு மத்தியில் இந்த நாகரிகத்தைப் பார்க்க முடியாது. மொழியாலும் ரத்த பாலியல் உறவாலும் உன்னதமடைந்த இந்த மனிதனுக்குள் ஏதோ இன்னொன்றும் உள்ளது. எரிமலை அக்னிக் குழம்பைக் கக்குவதைப் போல, இவனும் வெளியிடுகிறான். அந்த வெளியீடுதான் சமூகத்தின் தீய நிகழ்வுகளுக்கு இவன் காட்டுகிற எதிர்வினையாகும்.
எதிர்வினையைப் போலவே உடன்பாட்டு வினையும் உண்டு. அந்த உடன்பாட்டு வினையில் இவனுடைய உள்மனம் எதை நல்லதென்று காட்டுகிறதோ, அதை ஆமோதிக்கிறான். அங்கீகரிக்கிறான். அதன் வெற்றிக்காகத் தன்னை அர்ப்பணிக்கிறான்.
அடிமைப்பட்ட இந்திய தேசத்தின் விடுதலைக்காகத் தொடங்கிய போர், ஆரம்ப நிலையில் மிகப் பலவீனமாகத்தான் தொடங்கியது. காந்திஜியின் பின்னால் உப்பு சத்தியாகிரகத்திற்கு வரிசையாக வந்தவர்கள் சொற்ப எண்ணிக்கையாளர்கள்தான்.
காலம் அவரை மக்கள் மத்தியில் பிரகாசப்படுத்திக் காட்டிய பிறகு, வெள்ளையனே வெளியேறு என்று அவர் எழுப்பிய அந்தத் தேசிய முழக்கத்தைக் கேட்டு, காந்திஜியின் பின்னால் அணிவகுத்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட முடியவில்லை.
வெகுஜன அபிப்ராயம் என்ற மக்கள் கருத்துக்கு அத்தகைய மகத்தான சக்தி இருப்பதை அகிம்சை வழியில் பலமுறை பிரிட்டிஷாருக்குப் புலப்படுத்திக் காட்டியவர் காந்திஜி.
ஆயுதப் பிரயோகத்தால் பெறக்கூடிய அதே வெற்றியை ஆயுதப் பிரயோகம் இல்லாமலும் பெற முடியும் என்பதை காந்திஜி நிரூபித்தார். இதற்கு அவர் பெற்ற சக்தி, வெகுஜன அபிப்ராயம் என்ற மக்கள் கருத்தோட்டம்தான்.
சுதந்திரத்திற்கு முன்பிருந்த இந்தியாவில் இதைச் சாதித்தார். சுதந்திரத்திற்குப் பின்புள்ள இந்தியாவில் ஜனநாயகம் என்ற பெயரில் இதை நாம் வடிவமைத்திருக்கிறோம்.
ஜனநாயகம் என்பது எதிர்வினையினால்தான் எழுச்சி பெறுகிறது. அந்த எதிர்வினை, குறைந்தபட்ச சேதத்தில் விரும்பத்தக்க மாற்றத்தை விரோதியும் ஒப்புக்கொள்ளும் வகையில் ஏற்படுத்தித் தரும் ஒரு மாயவித்தையாகும்.
அமெரிக்காவின் அதிபராக நிக்ஸன் இருந்தார். அப்போது பிற அரசியல் தலைவர்களின் தொலைபேசிப் பேச்சுகளை இவர் வாட்டர் கேட் என்ற இடத்தில் ஒட்டுக் கேட்டார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது தாக்கலானது. அமெரிக்க நீதிமன்றம் விசாரணை செய்தது.
இறுதியாகத் தீர்ப்பளிக்கும் தேதியில், குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டிருந்த நிக்ஸனைப் பார்த்து, ஒட்டுக் கேட்கப்பட்டது உண்மை என்று நீங்கள் ஒப்புக் கொண்டால், நீங்கள் உண்மை பேசுகிற அதிபராகிவிடுகிறீர்கள். அதன் பலன் உங்களுக்கு உண்டு.
ஒட்டுக் கேட்கவில்லை என்று சாதித்தால், அதற்கான தஸ்தாவேஜ்கள், வாதங்கள், பிரதிவாதங்கள் அனைத்தின்படி முடிவு செய்யப்பட்ட தீர்ப்பு வெளியிடப்படுவதற்கு இங்கே தயாராக இருக்கிறது. நீங்கள் இவற்றில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம் என்றார்.
நிமிட நேரங்கள் கழித்து நிக்ஸன், நான் ஒட்டுக் கேட்கவில்லை என்றே கூறினார். இப்படிப் பொய் சொன்ன குற்றத்திற்காகவே அவர் பதவி இழந்தார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் அதிசயமான மற்றொன்று நிகழ்ந்தது. நியூயார்க்கில் அதிபரின் வெள்ளை மாளிகையைக் காலி செய்துவிட்டு, சற்றுத் தொலைவில் உள்ள சொகுசு வசதிகள் நிறைந்த ஓர் அடுக்குமாடிக் கட்டடத்தில் குடிபெயர்வதற்காக நிக்ஸன் செல்கிறார்.
அக்குடியிருப்புக்கு அவர் வருகைக்கு முன்பே, அந்த அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் அனைவரும் ஒன்று திரண்டு கீழ்த்தளத்தில் ஒரு தகவல் பலகையோடு அமர்ந்திருந்தார்கள். அந்தத் தகவல் பலகையில், முன்னாள் அதிபர் நிக்ஸன் இங்கு குடியிருக்க வருவாரேயானால், நாங்கள் அனைவரும் எங்கள் வீடுகளைக் காலி செய்துவிட்டு வெளியேறி விடுவோம் என்பதுதான்.
இதை அறிந்த நிக்ஸன் அந்த அடுக்குமாடிக் கட்டடத்திற்குக் குடிபெயரவில்லை. இதுதான் எதிர்வினை என்ற வெகுஜன அபிப்ராயம். இந்த வெகுஜன அபிப்ராயம் மக்களுக்குள் எப்போதும் உறங்கிக் கொண்டுதான் இருக்கும். அது விழித்துவிட்டால் அசுர பலம் பெறும். சூறைக் காற்றைப் போலச் சுழன்று அடித்துப் புரட்டிப் போடும்.
இந்த எதிர்வினை எந்த தேசத்தில் வீரியத்தோடு இருக்கிறதோ, அந்த தேசத்தில் எந்த அரசியல் தலைவனும் தீமைகளை மர்மமாகவும் செய்ய முடியாது.
தமிழ்நாட்டு அரசியல் தளத்தில் இந்த எதிர்வினை என்கிற வெகுஜன அபிப்ராயம் சென்ற 5 ஆண்டுகளுக்கு முன்பு 2000 தொலைத்தொடர்பு ஊழல் குற்றச்சாட்டு மூலம் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஆட்சிக்கு வரமுடியாமல் தடுத்துவிட்டது.
எத்தனை சாதுர்யமாக அந்த வழக்கிலிருந்து சம்பந்தப்பட்டவர்கள் விடுதலையாகியிருந்தாலும், மக்களுடைய மனவோட்டத்தில் அவர்களின் குற்றம் நிழலாடுகிறது. காரணம், இந்த மண்ணுக்கு அந்த உணர்வு இதிகாசக் காலத்திலிருந்து வந்துள்ளதை விபீஷணனின் கதை நமக்கு விளக்குகிறது.
கவிச்சக்ரவர்த்தி கம்பர், விபீஷணனை ஆழ்வார் என்று வழிபடுகிறார். ராமபிரான் அவனை இலங்கையின் அரசனாக்கினான். இவர்கள் இருவரும் போல அல்லாமல், இந்தச் சமுதாயம் விபீஷணனுக்குத் தந்த மெளனத் தீர்ப்பு அவன் ஒரு சகோதரத் துரோகி என்பதுதான்.
அதனால்தான் அவன் பெயரை சமூகம் யாருக்கும் சூட்டுவதில்லை. இராவணன், சுக்ரீவன், வாலி பெயர்கள் சூட்டப்படுகின்றன. ஆனால், விபீஷணன் பெயரை யாரும் வைத்துக் கொள்வதில்லை. இதுதான் வெகுஜனத் தீர்ப்பின் வெற்றி.
இந்த வெகுஜன அபிப்ராயத்தை ஒரு சூத்திரமாக தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் சூழ்நிலையில் பிரயோகித்துப் பார்த்தால், காட்சிப்படுத்தப்பட்ட பிம்பங்கள் கட்டுடைகின்றன.
சொத்துக் குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியின் திருவுருவப்படத்தை அரசு அலுவலகங்களிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அரசின் திட்டங்களை அம்மா திட்டங்கள் என்று அழைக்கக் கூடாது. சட்டப்பேரவை வளாகத்தில் அவருடைய திருவுருவப் படம் வைக்கக் கூடாது என்ற குரல்கள் அசரீரிகளாக அல்ல } சரியான முக விலாசங்களோடு ஒலிக்கின்றன.
வெகுஜன அபிப்ராயம் என்பது எரிமலையின் அக்னிக் குழம்பாக ஒவ்வொருவரின் ஆழ்மனதிலும் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அதற்கு ஏற்ற சந்தர்ப்பம் வந்தால், அத்தீக்குழம்பு பெரிய வீச்சில் வெளிப்படும்.
ஒருவேளை இந்த எரிமலை வெடிக் காமல் போகுமானால், அடுத்து நிகழ்வது எல்லாவற்றையும் கலைத்துப்போடும் அசம்பாவிதமாகவும் இருக்கலாம் என்பதே வரலாறு காட்டும் படிப்பினைகள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024