Wednesday, July 12, 2017

மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு: விசாரணை தள்ளிவைப்பு

பதிவு செய்த நாள் 11 ஜூலை
2017
23:08

சென்னை: மருத்துவப் படிப்பில், 85 சதவீத உள் ஒதுக்கீடு அளித்து, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து, தாக்கல் செய்த மனுக்கள் மீதான உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. அதுவரை, தற்போதைய நிலை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர், ஞானம் நகரைச் சேர்ந்த, தார்னிஷ்குமார் சார்பில், அவரது தாயார் கயல்விழி தாக்கல் செய்த மனு:என் மகன் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்று, மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வான, 'நீட்'டிலும், அதிக மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றுள்ளான். மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் தேர்வு, நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் நடக்க வேண்டும்.

மாநில பாட திட்டம் : மாணவர்கள் சேர்க்கை விதிமுறைகளின்படி, ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதுதவிர, வேறு விதத்தில் ஒதுக்கீடு வழங்க முடியாது. மாநில பாடத் திட்டம், மத்திய இடைநிலை கல்வி திட்டத்தில் படித்தவர்கள் என, மாணவர்களை வகைப்படுத்த முடியாது. இதை, இந்திய மருத்துவ கவுன்சிலும் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், ஜூன், 22ல், தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதில், மருத்துவப் படிப்பில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, 85 சதவீதம்; மத்திய இடைநிலை கல்வி வாரிய திட்டத்தில் படித்தவர்களுக்கு, 15 சதவீதம் ஒதுக்குவதாக கூறப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கை இருக்கும் போது, அவர்கள் படித்த பாடத்திட்டத்தின் அடிப்படையில், வேறுபாடு காட்டக் கூடாது என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.மத்திய இடைநிலை கல்வி திட்டம்மற்றும் இதர திட்டங்களில் படித்த மாணவர்களின் உரிமையை, 15 சதவீதங்களுக்கு என, கட்டுப்படுத்த முடியாது.எனவே, ஜூன், 22ல், தமிழக அரசு கொண்டு வந்த ஒதுக்கீட்டு முறை பாரபட்சமானது; அதை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று, சி.பி.எஸ்.இ., மாணவர்கள் பலர் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்கள், நீதிபதி ரவிச்சந்திரபாபு முன், விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் நளினி சிதம்பரம், பி.எஸ்.ராமன், சுந்தரேஷன் உள்ளிட்டோர் வாதாடினர்.

அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் முத்து குமாரசாமி வாதாடியதாவது: தேர்வு 'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரி, தமிழக அரசு அனுப்பிய சட்ட மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. மாநில பாடத்திட்டத்தில் படித்த, 4.30 லட்சம் மாணவர்களில், 84 ஆயிரம் பேரும், சி.பி.எஸ்.இ.,யில் படித்த, 4,000 மாணவர்களில், 2,000 பேரும், 'நீட்' தேர்வு எழுதி உள்ளனர்.
தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில், 50 சதவீதம், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருந்தன. மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு, 85 சதவீத ஒதுக்கீடு என்றால், 2,000 பேருக்கு இடங்கள் கிடைக்கும்; சி.பி.எஸ்.இ., படித்தவர்களில், 520 பேருக்கு கிடைக்கும்.
இவ்வாறு அவர் வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட, நீதிபதி ரவிச்சந்திரபாபு, வழக்கின் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். அதுவரை, தற்போதைய நிலை நீடிக்கும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024