Tuesday, July 18, 2017

பிளஸ் 2 அசல் சான்றிதழில் தமிழ் பிழைகள் : திருத்த வழியின்றி பெற்றோர் திணறல்

பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ள, பிளஸ் 2 சான்றிதழில், மாணவர்கள் பெயரில், தமிழில் எழுத்து பிழைகள் உள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு, மே, 12ல் வெளியானது. முதலில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதில், மாணவர்களின் பெயர், பள்ளியின் பெயர் போன்றவை, இந்த ஆண்டு முதல், தமிழ் மொழியிலும் இடம் பெற்றது. இதில், பல மாணவர்களின் தமிழ் பெயர்கள், தவறுமாக இருந்தது. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. அசல் மதிப்பெண் வழங்கும்போது, இந்த தவறுகள் இல்லாமல், பள்ளிக்கல்வித்துறை வழங்க வேண்டும்என, பெற்றோர்கள் கூறினர்.ஒரு வாரத்திற்கு முன், அசல் சான்றிதழ்கள் வழங்கும் பணி துவங்கியது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மாணவர்கள், அசல் சான்றிதழை பெற்று வருகின்றனர்.

இந்த சான்றிதழில், ஆங்கில மொழியுடன், தமிழிலும் மாணவர்களின் பெயர், இனிஷியலுடன் தமிழில் இடம் பெற்றுள்ளது.இதில் தமிழ் பெயர்கள், பெரும்பாலும் தப்பும், தவறுமாக இடம் பெற்றுள்ளன. அதனால், உயர்கல்வி நிறுவனங்களிடம், மாணவர்கள் தங்கள் சான்றிதழை கொடுத்தபோது, அவற்றை திருத்தி வர உத்தரவிட்டுள்ளனர். ஆனால், எங்கே திருத்துவது, எப்படி திருத்துவது என, பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர். சிலர் தேர்வுத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, விண்ணப்பம் கொடுத்து, கட்டணம் செலுத்தி செல்லுமாறு, அறிவுறுத்துகின்றனர். பள்ளிகளை அணுகினால், சான்றிதழை எப்படி திருத்துவது என்பது தெரியாது என, தலைமை ஆசிரியர்கள், பெற்றோரை திருப்பி அனுப்புகின்றனர்.இதுகுறித்து, பெற்றோர் கூறியதாவது: தற்காலிக மதிப்பெண் சான்றிதழை கொடுக்கும்போதே, பிழைகள் இருப்பதை பள்ளிக்கு தெரிவித்தோம். ஆனாலும், அசல் மதிப்பெண் சான்றிதழ்களில் பிழைகளை சரி செய்யாமல், பள்ளிக்கல்வித்துறை அலட்சியமாக இருந்துள்ளது.

அதனால்,நாங்களும், மாணவர்களும் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளோம். தேர்வுத்துறையில் திருத்தி தர கோரினால், கட்டணம் கேட்கின்றனர்.கல்வித்துறை செய்த தவறுக்கு, உரிய தீர்வு காணாமல், துறை செய்த தவறை திருத்த, மாணவர்களிடம் பணம் வசூலிப்பது வேதனைக்குரியது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி செயலர் மற்றும் இயக்குனர் ஆய்வு செய்து, சான்றிதழில் பிழை திருத்தும் முகாமை, தாமதமின்றி நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024