Sunday, July 9, 2017

எம்.ஜி.ஆருக்கு நுாற்றாண்டு விழா... தலைமைச்செயலாளருக்கு நோட்டிஸ்! - மதுரை சோகம் 

சே.சின்னதுரை



மதுரையில் அரசு நடத்திய எம்.ஜி.ஆர் நுாற்றாண்டு விழாவில் அனுமதியின்றி ஃபிளக்ஸ் பேனர்கள் வைத்ததை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் தமிழக தலைமைச்செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு மதுரை உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

மதுரையில் கடந்த ஜூன் 30ம் தேதி முன்னாள் முதல்வர் எம்.ஜி,ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது . முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட இந்த விழாவிற்காக மதுரை முழுவதும் ஃபிளக்ஸ் பேனர்கள் , ராட்சத பலூன்கள், போஸ்டர்கள் என அ.தி.முக அமைச்சர்கள் மதுரையை கலங்கடித்துவிட்டனர். நகர் முழுவதும் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் பேனர்கள் பொதுமக்களுக்கு தொந்தரவாக இருந்ததோடு முறையாக அனுமதியின்றியும் வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

விளம்பர பேனர்கள் ஒருபக்கம் என்றால் இதையொட்டி நடந்த ஊர்வலமும், இசைக் கச்சேரி ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் அ.தி.மு.க வினருக்கு மகிழ்ச்சியை தந்தாலும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி, பொதுமக்களை பெரும் தொந்தரவுக்குள்ளாக்கியது. இதனைத் தொடந்து முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி ஃபிளக்ஸ் போர்டு வைத்ததாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இதில், “ ஜூன் 30ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மற்றும் திண்டுக்கல்லில் அனுமதியற்று விளம்பர போர்டுகள் அதிகமாக வைக்கப்பட்டு இருந்தன. அனுமதியின்றி ஃபிளக்ஸ் போர்டுகள் வைத்தால் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. எனவே அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த பேனர்களை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள், மதுரை மாநகரக் காவல்துறை ஆணையாளர், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பி இருந்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காத அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

  இந்த மனு, நீதிபதிகள் சசிதரன்- சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் வழக்கு சம்பந்தமாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை ஜூலை 24ம் தேதிக்கு ஒத்தியும் வைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024