முடிவுக்கு வரும் ஆஃபர்கள்... ஜியோ வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்தியத் தொலைதொடர்புத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தையே ஜியோ ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 5-ம் தேதியிலிருந்து ஜியோ தனது நெட்வொர்க் சேவையைத் தொடங்கியது. இலவச டேட்டா, கால்ஸ் எனத் தொடக்கம் முதலே ஆஃபர்களை அள்ளிவீசும் அந்நிறுவனம், நெட்வொர்க் சேவையைத் தொடங்கி ஆறே மாதத்தில் 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்று உலகையே வியக்க வைத்தது. ஜியோ இல்லாத ஊரே கிடையாது எனச் சொல்லும் அளவுக்கு அந்த நெட்வொர்க் தற்போது நாடு முழுவதும் வளர்ந்துள்ளது.தொடக்கத்தில் 2016-ம் ஆண்டு இறுதிவரை இலவச கால் மற்றும் டேட்டா ஆஃபரை அறிவித்த அந்நிறுவனம், அதன்பின் இந்த இலவச ஆஃபரை அடுத்தாண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை நீட்டித்தது. மார்ச் மாதம் இந்த ஆஃபர் முடிவடைவதற்குள் ரூ.99 செலுத்தி ஜியோ பிரைம் சேவையில் இணைந்து கொள்ளுமாறு வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் அறிவுறுத்தியது. பிரைம் சேவையில் உறுப்பினராகும் வாடிக்கையாளர்கள், ஒரு வருடத்திற்கு ஜியோ வழங்கும் அதிரடி ஆஃபர்களைப் பெறலாம். பிரைம் சேவையில் இணைந்துகொள்ளும் கால அவகாசமும் அதன்பின் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜியோவின் இலவச ஆஃபரைப் பயன்படுத்தியவர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான பேர் தற்போது ஜியோ பிரைம் சேவையில் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
தடுமாறும் இணைய வேகம் :
4G சிக்னல்கள் தடையில்லாமல் கிடைத்தாலும், டேட்டா ஸ்பீடு விஷயத்தில் ஜியோ கவனம் செலுத்தியே ஆகவேண்டும். லண்டனைச் சேர்ந்த 'ஓபன்சிக்னல்' என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், ஜியோ நிறுவனத்தின் சராசரி டேட்டா டவுன்லோடு ஸ்பீடு 3.92 Mbps ஆகப் பதிவாகியுள்ளது. இது 3G சேவையின் உலக சராசரியான 4.4 Mbps என்பதைவிடக் குறைவாகும். சில சமயம் 2ஜியை விட பொறுமையாக இருக்கிறது ஜியோ.
ஆஃபர்கள் ஒரு ப்ளாஷ்பேக் :
பிரைம் சேவையில் இணைந்து ரூ.303 செலுத்துபவர்களுக்கு 'சம்மர் சர்ப்ரைஸ்' என்ற பெயரில் அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவச ஆஃபர் வழங்கியது அந்நிறுவனம். இதன்படி, ரூ.303-க்கு ரீசார்ஜ் செய்தவர்களுக்கு, இலவசமாக நாளொன்றுக்கு ஒரு ஜி.பி அளவுக்கு 4G டேட்டாவும் மற்ற ஜியோ சேவைகளும் வழங்கப்பட்டன. ஏப்ரல் மாதம் 15-ம் தேதிக்குள் ரூ.303-க்கு ஒருவர் ரீசார்ஜ் செய்திருந்தால், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு (ஒவ்வொரு மாதமும் தலா 28 நாள்கள் வேலிடிட்டி) இதற்கு முன்னர் அனுபவித்த இலவச சேவைகள் தொடரும். ஏப்ரல் மாதம் செலுத்தியிருந்த ரூ.303 தொகையை ஜூலை மாதத்திற்கான ப்ரீபெய்ட் தொகையாக ஜியோ கணக்கெடுத்துக்கொள்ளும். உதாரணமாக ஏப்ரல் மாதம் 1-ம் தேதி ஒருவர் ரூ.303 செலுத்தியிருந்தால், அவரது 'சம்மர் சர்ப்ரைஸ்' ஆஃபரின் வேலிடிட்டியானது ஜூலை 20-ம் தேதியோடு முடிவடையும்.
ஜியோ அறிவித்த இந்த இலவச ஆஃபர் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் விதிமுறைகளுக்கு எதிரானது என மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புகாரளித்தன. இதையடுத்து, இந்த சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபரைக் கைவிடும்படி ட்ராய், ஜியோ நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டது. இதனையடுத்து, ஏற்கெனவே இந்த ஆஃபரில் இணைந்தவர்களுக்கு மட்டும் இலவச சேவைகள் தொடரும் என ஜியோ
கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி அறிவித்தது.
ஏப்ரல் 7-ம் தேதியிலிருந்து புதிதாக ஜியோ நெட்வொர்க்கில் இணைபவர்களும், பிரைம் சேவையைத் தொடர்பவர்களும் ரூ.309 அல்லது ரூ.509 செலுத்தி 'ஜியோ தன் தனா தன்' என்ற ஆஃபரில் இலவச சேவைகளைப் பெறலாம் என ஜியோ அறிவித்தது. ரூ.309 செலுத்துபவர்களுக்கு நாளொன்றுக்கு 1 ஜி.பி 4G டேட்டாவும், ரூ.509 செலுத்தியவர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜி.பி 4G டேட்டாவும் இந்த ஆஃபரில் இலவசமாக வழங்கப்பட்டது.
வேலிடிட்டி முடியும் நாள் :
ஜியோ நிறுவனத்தின் இலவச ஆஃபர்கள் முடிவடைந்த பின்னர்தான், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களோடு அதன் சேவையை ஒப்பிட முடியும் என்பதால், இந்த மாதம் முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும்.
No comments:
Post a Comment