மதுரையில் 50-வது நாளை நோக்கி 'ராஜாபார்ட் ரங்கதுரை'!
டெக்னிக்கலில் மிரட்டும், மாறுபட்ட கோணங்களில் காட்சிப்படுத்தப்பட்ட, பெரிய ஸ்டார்கள் நடித்த படங்கள் ஒருவாரம் ஓடினாலே வெற்றிப்படம் என்று கொண்டாடிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், நாற்பது வருடங்களுக்கு முன்பு சிவாஜி கணேசன் நடித்த 'ராஜபார்ட் ரங்கதுரை', தற்போது மதுரை மீனாட்சி பாரடைஸில் ஐம்பதாவது நாளை நோக்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகிறது.
மதுரையில் பழைய படங்கள் பார்ப்பதற்கென்று தனியாக ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. உடல் உழைப்பு தொழிலாளர்கள் நிறைந்திருக்கும், வில்லாபுரம், அவனியாபுரம், சுப்ரமணியபுரம், ஜெய்ஹிந்துபுரம், செல்லூர், தெற்குவாசல் பகுதிகளில் அமைந்துள்ள திரையரங்குகளில் தியாகராஜபாகவதர், டி.ஆர்.மகாலிங்கம், நாகேசுவரராவ், என்.டி.ராமராவ், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோர் நடித்த பழைய படங்கள் அடிக்கடி திரையிடப்படும். 75 முதல் 80 களில் ரஜினி, கமல் நடித்த படங்களும், ஐம்பது வயது தாண்டியவர்களுக்காக திரையிடப்படுகின்றன.
மாலை வேளைகளில் குடும்பமாகவோ, நண்பர்களுடனோ இதுபோன்ற பழைய படங்கள் பார்க்க வருகிற மக்கள் மதுரையில் நிறைந்திருப்பதால்தான், 'ராஜபார்ட் ரங்கதுரை' தற்போது ஐம்பதாவது நாளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. தினமும் மாலை மற்றும் இரவு காட்சியாக இப்படம் திரையிடப்பட்டு வருகிறது.
இதுபற்றி படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவரிடம் கேட்டால், ''சிவாஜி நடித்த மிகச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. சிவாஜியின் நடிப்புக்கு இணையே இல்லை. நாடக நடிகராக அவர் நடித்திருக்கும் இப்படத்தில் உறவுகளால் ஏமாற்றப்படுவதுதான் கதை. இந்த படத்தின் கதையை அடிப்படையாக வைத்து பல தமிழ் படங்கள் வந்ததன. அதெல்லாம் இதுபோல இல்லை. இப்படத்தின் பாடல்களும் அவ்வளவு அருமையானது. அதனால்தான் திரும்பத் திரும்ப படம் பார்க்க வருகிறோம்'' என்றார்.
வருகிற ஒன்பதாம் தேதி இப்படத்தின் ஐம்பதாவது நாள் விழாவை பெரிய அளவில் கொண்டாட மீனாட்சி பாரடைஸ் திரையரங்க உரிமையாளரும், சிவாஜி ரசிகர்களும் முடிவு செய்திருக்கிறார்கள். அன்றைய தினம் படம் பார்க்க வருகிற ரசிகர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.
Dailyhunt
s
No comments:
Post a Comment