Wednesday, July 12, 2017

விமான பயணிகள் வசதிக்காக நேரு பூங்கா- விமான நிலையம் இடையே நேரடி மெட்ரோ ரெயில் சேவை

விமான பயணிகள் வசதிக்காக
நேரு பூங்கா- விமான நிலையம் இடையே நேரடி மெட்ரோ ரெயில் சேவை
 
விமான பயணிகள் வசதிக்காக நேரு பூங்கா- விமான நிலையத்துக்கு நேரடி மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆலந்தூரில் ரெயில் மாற வேண்டிய அவசியமில்லை. 
 
சென்னை,

ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் லூப் லைன் வசதி செய்யப்பட்டிருந்ததால், கோயம்பேடு மார்க்கத்தில் இருந்து வரும் ரெயில்கள் அனைத்தும் விமான நிலையம் வரை இயக்கப்பட்டது. இதில் தொழில்நுட்ப ரீதியாக சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் அந்த வசதி நிறுத்திக் கொள்ளப்பட்டது.

இதனால் மெட்ரோ ரெயிலில் கோயம்பேடு, நேரு பூங்கா பகுதிகளில் இருந்து விமானநிலையம் செல்லும் பயணிகள் ஆலந்தூரில் இறங்கி விமான நிலையத்துக்கு செல்ல வேறு ரெயில் மாற வேண்டும். சூட்கேஸ் உள்ளிட்டவற்றுடன் வரும் பயணிகள் இதனால் சிரமப்பட்டு வந்தனர்.

மீண்டும் சேவை

அத்துடன் ஆலந்தூர் ரெயில் நிலையத்தில் இறங்கி, விமான நிலையம் செல்லும் ரெயில் வரும் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகார்களை அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். அதனடிப்படையில் தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினை நிவர்த்தி செய்யப்பட்டது.

இந்தநிலையில், மீண்டும் கோயம்பேடு மார்க்கத்தில் இருந்து வரும் ரெயில்கள் ஆலந்தூரில் நிறுத்தப்படாமல் விமானநிலையம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு தற்போது இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு வழித்தடத்தில் இருந்து வரும் ரெயில்களில் சில ரெயில்கள் விமான நிலையம் வரை இயக்கவும், மற்ற ரெயில்களை வழக்கம் போல் பரங்கிமலை வரை இயக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

நேரு பூங்காவில் இருந்து விமான நிலையம் வரை 20 கிலோ மீட்டர் தூரத்தை ரூ.54 கட்டணத்தில் 40 நிமிடங்களில் செல்ல முடியும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024