திருப்பதியில், வார இறுதி நாட்களில் மலை பாதை தரிசனம் இனி இல்லை!
திருமலை: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திவ்ய தரிசனம் எனப்படும் மலைப்பாதை பக்தர்களுக்கான தரிசனம் வார இறுதிகளில் ரத்து செய்யப்படும் திட்டத்தை நேற்று முதல் அமலுக்கு வந்தது.
திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் மிகவும் பிரசித்த பெற்ற கோயிலாகும். இங்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
அதிக வருவாயைத் தரும் பணக்கார கடவுளாக கருதப்படும் வெங்கடாஜலபதி, ஏழைகளின் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்று நம்பிக்கை மக்களிடையே காணப்படுகிறது. இதனால் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பொதுவாக அரசு, தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை தினம் என்பதால் வெள்ளிக்கிழமை மாலை முதல் திருப்பதியில் ஞாயிற்றுக்கிழமை வரை கூட்டம் அதிகமாகவே காணப்படும். இதிலும் வார இறுதி நாள்களுக்கு முன்போ, பின்போ அதாவது வெள்ளி மற்றும் திங்கள் ஆகிய நாள்களில் விடுமுறை வந்தால் கேட்கவே வேண்டாம். கூட்டம் அலைமோதும்.
இதேபோல் கோடை விடுமுறையின்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வைகுண்டம் காம்ப்ளக்ஸ்களில் உள்ள 31 அறைகளும் நிரம்பி வெளியே 1 கி.மீ. தூரத்துக்கு கூட்டம் அலைமோதும். இதனால் பக்தர்களின் தரிசனம் நேரமும் அதிகரிக்கும். தற்போது விஐபி தரிசனம், ரூ.50 கட்டண தரிசனம் (தேவஸ்தான மையங்களில் மட்டுமே கிடைக்கும்), ரூ.300 விரைவு தரிசனம், திவ்ய தரிசனம் ஆகிய வகைகளில் ஏழுமலையானை மக்கள் தரிசித்து வருகின்றனர்.
திவ்ய தரிசனம் என்பது மலை பாதை வழியாக நடந்தே சென்று சுவாமியை தரிசிப்பதாகும். இதில் இரு வழிகள் உள்ளன. ஒன்று அலிபிரி வழியாக திருமலை சென்றடைவது, மற்றொன்று ஸ்ரீ வாரி மெட்டு வழியாக செல்வதாகும். இதில் அலிபிரி என்பது 3550 படிக்கட்டுகளை கொண்டது. இங்கிருந்து மேலே செல்ல 11 கி.மீ. தூரம் ஆகும். மற்றொன்று, திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து 19 கீ.மீ. தூரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வாரி மெட்டு. 3 கி.மீ. தூரம் கொண்ட ஸ்ரீ வாரி மெட்டில் வழியாக திருமலை செல்ல 2384 படிக்கட்டுகள் மட்டுமே உள்ளன.
வார இறுதி நாள்களில் பெரும்பாலானோர் திவ்ய தரிசனத்தை தேர்ந்தெடுப்பதால் மற்ற தரிசன முறைகளின் நேரம் அதிகரிக்கிறது. மேலும் கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். இதனால் சோதனை ஓட்டமாக ஜூலை 7-ஆம் தேதி முதல் வார இறுதி நாள்களில் திவ்ய தரிசன நேரத்தை ரத்து செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.
அதன்படி நேற்று நள்ளிரவு முதல் இனி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் மலை பாதை தரிசனத்தை ரத்து செய்தது. எனினும் மற்ற நாள்களில் இந்த வழியாக தரிசனம் செய்வதற்கு அனுமதி உண்டு. இதன் மூலம் ரூ.300 தரிசனம், குறிப்பாக சர்வ தரிசனம் என சொல்லப்படும் இலவச தரிசனத்தில் வருவோர் விரைந்து சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக இருக்கும்
என்று நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment