ஜூலைக்குள் அனைத்து அஞ்சலகங்களிலும் ஆதார் அட்டையை திருத்தும் வசதி
By DIN |
Published on : 15th July 2017 02:30 AM |
ஜூலை
மாத இறுதிக்குள் அனைத்து அஞ்சலகங்களிலும் ஆதார் திருத்தம் மேற்கொள்ளும்
வசதி செய்யப்பட உள்ளது. அதுபோல், புதிய ஆதார் அட்டை பெறுவதற்கும் அங்கு
விண்ணப்பிக்கலாம் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.
அரசின் பல்வேறு திட்டங்களுக்கு பொது மக்களின் சரியான தகவலை பெறுவதற்காக ஆதார் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் ஆதார் பதிவு செய்யப்பட்டது.
ஆதாரில் பிழை: அவ்வாறு பதிவு செய்யப்படும் போது, பலருக்கும் விழித்திரை, கை ரேகை பதிவு ஆகியவற்றை தவிர இதர சுய விவரங்கள் குறித்த பிழையான தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில், வங்கி கணக்கு தொடங்குதல், பான் அட்டை , செல்லிடப்பேசி இணைப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் ஆதார்அட்டை இணைப்பு அவசியமாக்கப்பட்டு வருகிறது. ஆனால், பலருக்குஆதார் அட்டையில் புகைப்படம், முகவரி உள்பட இதர தகவல்கள் சரியாக இல்லை.
இதற்காக, ஆன்லைனில் திருத்தம் மேற்கொள்ள வசதிகள் இருந்தாலும், அனைவராலும் சென்று திருத்தம் செய்யமுடிவதில்லை. எனவே, அஞ்சலகங்களில் திருத்தம் மேற்கொள்ள கூடுதல் சேவை மையங்களை கொண்டு வர முடிவு செய்யப்பட்டு, தற்போது சென்னை அஞ்சலக வட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூலை 3 முதல் அண்ணா சாலை, தியாகராய நகர், மயிலாப்பூர், பரங்கிமலை, பூங்கா நகர் ஆகிய தலைமை அஞ்சலகங்கள், தேனாம்பேட்டை, அண்ணாநகர், அசோக் நகர், திருவல்லிக்கேணி ஆகிய துணை அஞ்சலகங்களிலும் ஆதார் திருத்தம் மேற்கொள்ளும் வசதியினை அஞ்சல்துறை அறிமுகப்படுத்தியது.
இதன்மூலம், பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டை தகவல்களில் திருத்தம் செய்து சரியான விவரங்களை பதிவு செய்யலாம் .
இந்த சேவை தொடக்கப்பட்ட நாள் முதலே பொதுமக்கள் ஆதார் திருத்தம் செய்து வருகின்றனர். விரைவில் இந்த வசதி தமிழகம்முழுவதும்அமல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து அஞ்சல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆதார் அட்டை திருத்தம் மேற்கொள்ளும் பணி சென்னை வட்டத்தில் 10 அஞ்சலகங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது.
2505 அஞ்சலகங்களிலும்..:
அதன்படி, தமிழகத்திலுள்ள 2505 அஞ்சலகங்களில் ஆதார் அட்டை திருத்தம் செய்யும் வசதி கொண்டு வரப்படும். இதற்காக, பயோமெட்ரிக் (உடற்கூறு) முறையில் திருத்தம் மேற்கொள்வதற்கு இயந்திரங்கள் தற்போது இல்லை.
அதுபோல், ஆதார் திருத்தம் மேற்கொள்வதற்கு அஞ்சலக ஊழியர்களுக்கு இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் (யுடிஏஐ) மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இன்னும் 2 வாரங்களில் அனைத்து அஞ்சலகங்களிலும் புதிய இயந்திரங்கள் கொண்டு வரப்படவுள்ளன.
அதன்படி, அஞ்சல ஊழியர்கள் மூலம் அனைத்து அஞ்சலகங்களிலும் ஜூலை இறுதிக்குள் ஆதார் அட்டை திருத்தம் மேற்கொள்ளும் வசதி அமல்படுத்தப்படும்.
அதுபோல், அண்ணா சாலை, திருச்சி, மதுரை, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், புதுச்சேரி, காஞ்சிபுரம், திருவள்ளூர்ஆகிய தலைமை அஞ்சலகங்களில் புதியதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வசதியானது இன்னும் ஓரிரு மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்றார்.
No comments:
Post a Comment