Thursday, July 20, 2017


விதைப்பந்து வீசுவோம்

By எம். அருண்குமார் | Published on : 20th July 2017 01:11 AM |

காடு நமக்கு இயற்கை கொடுத்த கொடை. காடுதான் நமக்கு மழை கிடைப்பதற்குக் காரணமாகிறது. அது மட்டுமல்ல, நிலச்சரிவு ஏற்படாமல் தடுப்பது காடுதான். மண் அரிப்பைக் கட்டுப்படுத்துவதும் காடுதான். காடுகள் அழிக்கப்படுவதால் கடல் மட்டம் உயர்ந்து புவி வெப்பமயமாகின்றது.
2015-ம் ஆண்டின் இந்திய வன அறிக்கையின்படி இந்தியாவில் 79.42 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு காடுகள் உள்ளன. இது மொத்தப் பரப்பளவில் 24.16 சதவீதமாகும். குறைந்துவிட்ட காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வேண்டுமானால் மரங்களை நடவேண்டியது அவசியமாகும்.
வனத்துறை மட்டுமே மரங்களை நட்டு காடுகளை உருவாக்க முடியாது. பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால்தான் இது சாத்தியமாகும்.
மரம் நட்டு காடு வளர்ப்பது என்பதை ஒரு மக்கள் இயக்கமாகச் செயல்படுத்த வேண்டும். நம் நாட்டில் எந்தெந்தப் பகுதிகளில் என்னென்ன மரங்கள் வளரும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு முன்னதாக மண்ணின் வகை, அமிலத் தன்மை, மண்வளம் ஆகியவற்றைப் பற்றி அறிய வேண்டும்.
எந்தவகை மரங்களை நட்டால் வேகமாக வளரும் என்பது குறித்தும் அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு மரங்களைத் தேர்ந்தெடுத்து நட வேண்டும். அண்மைக்காலமாக அதக அளவில் புவி வெப்பமடைந்து வருவதால் அடிக்கடி பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.

அதைத் தடுக்க வேண்டுமானால் உலகம் முழுவதுமே மரம் வளர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை கனிம வளங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதால் பெருமளவு வனப் பகுதிகள் சர்ச்சைக்குரிய பகுதிகளாக மாறிவருகின்றன. இயற்கைக்குப் புறம்பான நடவடிக்கைகளில் மனிதர்கள் ஈடுபடுவதால் இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன.

நாட்டின் ஒரு பகுதியில் அதிகமான வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மற்றொரு பகுதியில் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் கடுமையான வறட்சி ஏற்பட்டு மக்கள் துன்பப்படுகிறார்கள். இதற்கு காரணம் சரியான அளவில் பருவமழை இல்லாமல் போனதே.

அதற்கு அடிப்படைக் காரணம் மரங்கள் இல்லாமல் போனதுதான். இனியாவது பருவ காலத்தில் சரியான அளவில் மழைப்பொழிவு வேண்டுமானால் அதற்கு மரம் வளர்ப்பு ஒன்றே வழி.

மரக்கன்றுகள் நடுவதன் முக்கியத்துவம் குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்பது உண்மைதான். ஆனால் நடப்படும் மரக்கன்றுகளை நாம் முறையாகப் பராமரிக்காமல் விட்டுவிடுவதால் மரம் நடுதல் என்பது பயனில்லாமல் போகின்றது.

இத்தகைய சூழ்நிலையில்தான் பழைமையான, பாரம்பரியமான விதைப்பந்துகள் வீசும் முறையை நாடு பின்பற்ற வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மரக்கன்றுகளை நட்டுப் பராமரிப்பதை விட மிகவும் எளிதானது விதைப்பந்து வீசுவது.

விதைப்பந்துகளைப் பாதுகாப்பதை இயற்கையே பார்த்துக் கொள்ளும். மிகவும் எளிமையான விதைப்பந்து வீசும் முறையை அனைத்துப் பொதுமக்களும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

நாம் இழந்துவிட்ட இயற்கை சுழற்சி முறையை மீட்டெடுக்க வேண்டுமானால், அதற்கு பாரம்பரிய முறையான விதைப் பந்து வீசும் முறைதான் தீர்வாகும்.

இந்த விதைப்பந்தைத் தயாரிப்பது மிகவும் எளிது. வளமான மண், மாட்டு சாணம் இரண்டையும் சிறிதளவு எடுத்து நீர் சேர்த்து பிசைந்து அதற்குள் விதையை வைத்து உருண்டையாக பந்து போல உருட்ட வேண்டும்.
பிறகு அந்த மண்ணும் சாணமும் கலந்த உருண்டைகளை நிழலில் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பிறகு அவற்றை எடுத்து தரிசு நிலங்கள், மலையடிவாரம், சாலையோரங்கள், ஆற்றங்கரையோர பகுதிகள் ஆகிய இடங்களில் வீச வேண்டும். பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக இந்த விதைப்பந்துகளை வீசலாம்.

அந்த விதைப்பந்துகளில் இருக்கும் ஈரப்பதம் கடுமையான வறட்சியையும் தாங்கும். சில நேரங்களில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு அதனால் வெள்ளப்பெருக்கு வந்தாலும் அதையும் தாங்கிக்கொண்டு விதைப்பந்திலுள்ள விதை முளைக்கும்.

விதைப்பந்தில் உள்ள சாணம் மிகச்சிறந்த இயற்கை உரமாகும். இது விதைக்கு நோய் தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்கும். மண் அல்லது களிமண் விதையிலுள்ள உயிர் வளர ஆதாரமாக இருப்பதால் எளிதில் விதை முளைக்க அது உதவியாக இருக்கும்.

மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து அவற்றை குறிப்பிட்ட ஆண்டுகள்வரை வளர்ப்பதற்கு ஆகும் செலவோடு ஒப்பிடும்போது விதைப்பந்தை வீசுவதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவானதேயாகும்
.
மேலும், மரக்கன்றுகளுக்கு தினமும் தவறாமல் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஆனால் விதைப்பந்துகளுக்கு அது தேவையல்ல. மழை பெய்யும்போது கிடைக்கும் தண்ணீரே அதற்குப் போதுமானது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பழங்களில் உள்ள விதைகளை சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றிலிருந்தே விதைப்பந்துகளைத் தயாரிக்கலாம். குறிப்பாக, புளி, வேம்பு, புங்கன் போன்ற பழங்களின் விதைகள் விதைப்பந்துக்கு மிகவும் ஏற்றவை.

நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பிறந்த நாள், திருமண நாள் போன்ற மகிழ்ச்சிகரமான நாட்களில் அவர்களுக்கு விதைப்பந்தை நாம் பரிசாக வழங்கலாம். இயற்கையின் அருமையை உணராமல் நாம் அவற்றை அழித்து விட்டோம்.
இனியாவது இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், அவற்றை அடுத்த தலைமுறைக்கு முழுமையாகவும் விட்டுச்செல்லவும் வேண்டுமானால் விதைப்பந்து வீசி காடுகளை உருவாக்க வேண்டியது அவசியமாகும். விதைப்பந்து வீசுவோம். மரம் வளர்போம். மழை பெறுவோம். புவி வெப்பமயமாதலைத் தடுப்போம். நாம் இயற்கையைக் காத்தால்தான் இயற்கை நம்மைக் காக்கும்.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...