Thursday, July 20, 2017

தேர்வும் தீர்வும்

By கா. செல்லப்பன்  |   Published on : 18th July 2017 01:20 AM  |     
நீட் எனப்படும் தேசியக் கல்வித் தகுதி தேர்வு, தேசம் முழுமைக்கும் பொதுவான, உயர்கல்விக்கு, குறிப்பாக மருத்துவக் கல்விக்கு, தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்வு முறை.
'ஒரு தேசம், ஒரு தேர்வு' என்ற கொள்கை, பலவகையான பாடத்திட்டங்களையும் பள்ளி அமைப்புகளையும், சமூக, பண்பாட்டு வேறுபாடுகளையும் கொண்ட இந்த பாரத தேசத்துக்குப் பொருந்துமா என்ற அடிப்படைக் கேள்வியை அலட்சியப்படுத்திவிட முடியாது.
அப்படி வேறுபாடுகள் இருப்பதனால்தான், இப்படி ஒரு பொதுவான அளவுகோல் தேவைப்படுகிறது என்றும் வாதிடலாம்.
ஆனால், இதன் அடிப்படை நோக்கம் தகுதியுள்ள எந்த மாணவனுக்கும் மருத்துவக் கல்வி வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என்பதும், தகுதியில்லாதவர்கள் பணத்தைக் கொடுத்து இடத்தை வாங்குவதைக் கட்டுப்படுத்துவதுமே.
உண்மையான கல்வி ஒருமைப்பாடு, எந்தப் பகுதி மாணவரும் எந்தப் பகுதியிலும் சேர்ந்து கற்கலாம் என்ற நிலை உருவானால்தான் சாத்தியமாகும். அதற்கு இந்தத் தேர்வு வழிவகுப்பதாகத் தெரியவில்லை. ஒரு பாடத்திட்டத்தின் அடிப்படையில், ஒரு அதிகாரமையத்தின் வழியாகத் தேர்வு நடத்துவதைத்தான் இது உறுதிப்படுத்துகிறது.
மேலும் ஒருமைப்பாடு வேறு; ஒற்றைத் தன்மை வேறு. முன்னது இயல்பாக மலர்வது; பின்னது செயற்கையாக உருவாக்கப்படுவது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) பாடத்திட்டப்படி நடத்தப்படும் இத்தேர்வு, மாநில பாடத்திட்டப்படி பயிலும் மாணவர்களுக்கு, அதிலும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதகமாக அமையும்.
இந்த ஆண்டு, தமிழகத்திலிருந்து தேர்வு எழுதியவர்களில் வெற்றி பெற்றவர்கள் மிகப்பெரும் பகுதி, சி.பி.எஸ்.இ. திட்டப்படி படித்தவர்களாகவும், மிகக் குறைவான மாணவர்கள்தான் மாநில பாடத்திட்டப்படி பயின்றவர்களாகவும் உள்ளனர். மேலும் தரவரிசைப் பட்டியலில் பிற்பட்ட வகுப்பினர்களுக்கான ஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்படவில்லை.
மாநில பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையாக மாற்றப்பட தமிழக அரசு முயற்சிகளை எடுத்து வருவது மகிழ்ச்சிக்குரியதே. ஆனால், சி.பி.எஸ்.இ. திட்டம்தான் எல்லோருக்கும் ஏற்றதென்றோ, எல்லா வகைகளிலும் சிறந்ததென்றோ கருத முடியாது.
அதேபோல், தமிழகத்து கிராமப்புற மாணவர்கள், நீட் தேர்வுக்குத் தகுதிப்படுத்திக் கொள்ளவில்லை என்பதையும் ஏற்க இயலாது. தமிழக கிராமப் பள்ளிகளில், தமிழ் வழி பயின்றவர்கள் மிகச்சிறந்த விஞ்ஞானிகளாகவும் அறிஞர்களாகவும் விளங்கியதையும் மறந்துவிடக் கூடாது.
நீட் தேர்வினால், தமிழக கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பு பாதிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் அதிலிருந்து விலக்குக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. அதை ஏனோ, மத்திய அரசு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு இதுவரை அனுப்பி வைக்கவில்லை.
இந்த நிலையில் தேர்வும் நடந்து முடிவுகளும் வந்துவிட்டன. மாநிலக் கல்வி வாரிய மாணவர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்தில், நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 85 விழுக்காடு இடங்களும், சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 15 விழுக்காடும் உள்ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீதிமன்றம் உள்ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்தது. ஏனென்றால், பாடத்திட்ட அடிப்படையில் இடஒதுக்கீடு செய்ய அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை.
மேலும் சி.பி.எஸ்.இ.யில் படித்த காரணத்துக்காகவே, அந்த மாணவர்களைத் தண்டிப்பதுபோல் இது உள்ளது. அவர்கள் பெருவாரியாக வெற்றி பெற்றிருக்கும்போது அவர்களுக்கு 15 விழுக்காடு மட்டும் ஒதுக்குவதும் நியாயமில்லை.
மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கும் சமூக நீதி அடிப்படைலாவது நியாயம் வழங்கப்பட வேண்டும். இந்த இரண்டு தரப்பு மாணவர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டுமென்றால் நாம் நீதிமன்றத்தை மறுபடியும் அணுக வேண்டும்.
நீட் தேர்வில் வெவ்வேறு வகை வினாத்தாள்கள் தரப்பட்டதும் பொதுத் தேர்வின் பண்பையே குலைப்பதாகும். அந்த அடிப்படையிலும் விலக்கு கேட்கலாம்.
ஆனால் இவை எல்லாமே இடைக்காலத் தீர்வுகள்தான். நீட் தேர்வின் தன்மையையே மத்திய அரசு ஓரளவு மாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. வினாக்கள், எந்த ஒரு கல்வித் திட்டத்தையும் மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், நாட்டின் எல்லாப் பகுதிப் பாடத்திட்டங்களின் பொது அம்சங்களை மையமாகக் கொள்ள வேண்டும்.
அவை, மாணவர்களின் அடிப்படை அறிவு, திறன், விருப்பத்தை அளவிடுபவையாக அமைய வேண்டும். நீட் தேர்வை தேசியத் தரம் வாய்ந்த கல்லூரிகளில் சேருபவர்களுக்குப் பயன்படுத்தலாம்.
எல்லா மாநிலங்களிலும் நீட் மதிப்பெண்கள், மாநிலப் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் இரண்டையும் சேர்த்தே மாணவர் தரம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
இன்றைய தொழில்நுட்பம் நேற்றைய மரபு நெறிகள் இணைந்து, மாணவர்களை நாளைய புதிய உலகுக்கு இட்டுச் செல்லும் வழியாக கல்வி அமைய வேண்டும்.
பள்ளிக் கல்வியின் நோக்கம், தொழிற்கல்வித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்வது அல்ல. முழுமையான வாழ்வுக்கு உத்தரவாதம் தருவது.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...